Ad

வெள்ளி, 21 ஆகஸ்ட், 2020

கொரோனா: `இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறோம்!' - தடுப்பூசி விவகாரத்தில் ரஷ்யா

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸால் இதுவரை கோடிக்கணக்கான மக்கள் பாதிப்படைந்துள்ளனர். லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். இந்த வைரஸுக்கான தடுப்பு மருந்தைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் பல நாடுகளும் தீவிரமாக இறங்கிச் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் கொரோனாவுக்கான தடுப்பு மருந்தை வெளியிடுவதாக அதிகாரபூர்வமாக அறிவித்தார். இதுதொடர்பாக அவர் பேசும்போது, ``உலகுக்கு மிகவும் முக்கியமான பணி இது. இந்தத் தடுப்பூசியின் உருவாக்கத்தில் பணியாற்றிய அனைவருக்கும் நன்றிகள். இந்த மருந்து மிகவும் திறம்படச் செயல்படுகிறது. நான் மீண்டும் சொல்கிறேன் இந்த மருந்து அனைத்துச் சோதனைகளையும் கடந்துவிட்டது” என்று குறிப்பிட்டிருந்தார்.

ரஷ்யா அதிபர்

கமலேயா என்ற ஆராய்ச்சி நிறுவனமும் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகமும் இணைந்து கொரோனாவுக்கான தடுப்பூசியை உருவாக்கியுள்ளன. இந்த மருந்து அதிபர் புதினின் மகளுக்குச் செலுத்தப்பட்டு, சோதனை செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாயின. தொடர்ந்து பல்வேறு நபர்களுக்கும் பரிசோதனை செய்யப்பட்டு வருவதாகவும், வரும் அக்டோபர் மாதம் முதல் இந்தத் தடுப்பூசி மக்கள் பயன்பாட்டுக்குக் கிடைக்கும் என்றும் அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனினும், இந்த தடுப்பூசி தொடர்பான மூன்றாம் கட்ட பரிசோதனைகள் இன்னும் மேற்கொள்ளப்படவில்லை என்ற தகவல்கள் சந்தேகத்தை எழுப்பியுள்ளன.

ஒருபுறம் இந்தத் தடுப்பூசி தொடர்பான பாசிட்டிவ் விஷயங்கள் வெளியானாலும், மறுபுறம் ரஷ்ய அதிகாரிகள் வெளியிட்ட அறிவிப்பின் மீதான குழப்பங்களும் சர்ச்சைகளும் நிலவி வருகின்றன. இதனையடுத்து, தற்போது இந்தத் தடுப்பூசி தயாரிப்பில் இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற விரும்புவதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.

கொரோனா

Also Read: ரஷ்யா: `உலகின் முதல் கொரோனா தடுப்பூசி’ - சொந்த மகளுக்குச் சோதனை செய்து வெளியிட்ட புதின்!

ஆன்லைன் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் இதுதொடர்பாக பேசிய ஆர்.டி.ஐ.எஃப் தலைமை நிர்வாக அதிகாரி டிமிட்ரிவ், ``தடுப்பூசி உற்பத்தி என்பது மிகவும் முக்கியமான பிரச்னையாக உள்ளது. தற்போது நாங்கள் இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறோம். கமலேயா தடுப்பூசியைத் தயாரிக்கும் திறன் அவர்களிடம் இருப்பதாக நம்புகிறோம். இணைந்து பணியாற்றுவது என்பது தேவையான மருந்து உற்பத்தியை ஈடுசெய்ய உதவும். நாங்கள் ரஷ்யாவில் மட்டுமல்லாது, சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பிரேசில் மற்றும் இந்தியா போன்ற நாடுகளிலும் மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொள்ள உள்ளோம். ஐந்துக்கும் அதிகமான நாடுகளில் தடுப்புசியைத் தயாரிக்க திட்டமிட்டு வருகிறோம். தடுப்பூசி மிக அதிகமாகத் தேவைப்படும் இத்தாலி, ஆசியா, லத்தின் அமெரிக்க நாடுகளுக்கும் மருந்துகளை வழங்கத் திட்டமிட்டுள்ளோம்” என்று தெரிவித்தார்.



source https://www.vikatan.com/news/healthy/russia-looking-for-a-partnership-with-india-to-produce-covid-19-vaccine

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக