Ad

புதன், 6 ஜனவரி, 2021

பற்றியெரியும் வாஷிங்டன்... ட்ரம்ப்புக்குத் தடைபோட்ட ட்விட்டர்... என்ன நடக்கிறது அமெரிக்காவில்?

உலகமே உற்று நோக்கியிருந்த அமெரிக்க அதிபர் தேர்தல் கடந்த நவம்பர் தேதி நடந்துமுடிந்தது. குடியரசுக் கட்சி சார்பில் அதிபர் பதவியில் இருக்கும் டொனால்டு ட்ரம்ப்பும், ஜனநாயகக் கட்சி சார்பில் ஜோ பைடனும் போட்டியிட்டனர். கொரோனா அச்சுறுத்தல் அதிகம் காணப்படும் நாடாக இருப்பதால் பலரும் தங்கள் வாக்குகளைத் தபால் முறையில் செலுத்தினர். இதுவரை இல்லாத வகையில் அதிகப்படியான வாக்குகள் இம்முறை அமெரிக்காவில் பதிவானது. அதிகப்படியான தபால் வாக்குகள் இருந்ததால் தேர்தல் முடிவுகளை அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டது.

முடிவில் ஜோ பைடன் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. இருப்பினும், ட்ரம்ப் தோல்வியை ஏற்க மறுத்துத் தேர்தலில் முறைகேடுகள் நடந்திருப்பதாகக் கூறி பல்வேறு மாகாணங்களின் நீதிமன்றங்களில் வழக்குகளைத் தொடர்ந்தார். ட்ரம்ப் ஆதரவாளர்கள் பலரும் பைடனை அதிபராக ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை. கிட்டத்தட்ட அமெரிக்காவின் அனைத்து மாகாணங்களிலும் வெற்றியாளர்கள் யார் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகிவிட்டது. அதிகாரப்பூர்வமாகவும் ஜோ பைடன்தான் அடுத்த அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டார். இந்த மாதம் 20-ம் தேதி அவர் பதவி ஏற்கவுள்ளார். இருந்தும் ட்ரம்ப் அவரது பதவியை விட்டுத்தருவதாக இல்லை.

US Capitol Unrest

அவரின் ஆதரவாளர்களும் தொடர்ந்து கலவரங்களில் ஈடுபட்டுவருகின்றனர். இன்று அமெரிக்கத் தலைநகரில் இந்த கலவரங்கள் உச்சம் தொட்டுள்ளன. இன்று நூற்றுக்கணக்கான ட்ரம்ப் ஆதரவாளர்கள் வாஷிங்டன் டிசியில் இருக்கும் நாடாளுமன்ற வளாகமான US Capitol-ல் புகுந்து வன்முறையில் ஈடுபட்டனர். ஜோ பைடனை அதிபராக பதவியேற்கும் பணிகளைத் தடுக்கும் முயற்சியாக இதை அவர்கள் மேற்கொண்டனர். பாதுகாப்பு கருதி உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். இந்த வன்முறையில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒரு பெண் பலியானதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

வாஷிங்டன் டிசியின் மேயர் முரியல் போவ்சர் ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்திருக்கிறார். FBI அதிகாரிகள் இரண்டு வெடிகுண்டுகளைக் கண்டெடுத்திருக்கின்றனர். US Capitol தற்போது பாதுகாப்பாக இருக்கிறது எனத் தெரிவித்திருக்கின்றனர்.

US Capitol Unrest

தொடர்ந்து ட்ரம்ப் பரப்பிவரும் பொய் பரப்புரைகள் இந்த கலவரத்துக்கு முழு முதற்காரணமாகப் பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக ட்விட்டர், ஃபேஸ்புக் தளங்கள் ட்ரம்ப்பின் கணக்கைத் தற்காலிகமாகத் தடைசெய்துள்ளனர். ஃபேஸ்புக் அதன் தளங்களில் ட்ரம்ப்பின் கணக்குகளை 24 மணிநேரத்துக்கு முடக்கியுள்ளது. ட்விட்டர் 12 மணிநேரத்துக்கு ட்ரம்ப்பின் கணக்கைத் தடைசெய்துள்ளது. சர்ச்சைக்குரிய மூன்று பதிவுகளை நீக்கவேண்டும், இல்லையென்றால் தடை நீக்கப்படாது என்றும் தெரிவித்திருக்கிறது.

மீண்டும் இதே போன்ற கருத்துகளைப் பதிவிட்டால் நிரந்தரமாகக் கணக்கு தடைசெய்யப்படும் எனவும் எச்சரித்துள்ளது ட்விட்டர். ஏற்கெனவே தொடர்ந்து ட்ரம்ப்பின் பதிவுகளை 'Fact Check' செய்து அவற்றை மறைத்து வந்தது ட்விட்டர். ட்ரம்புக்கும் ட்விட்டருக்குமிடையே பஞ்சாயத்து ஏற்படுவது இது முதல்முறையும் அல்ல. தொடர்கதையாகிவரும் ட்ரம்ப்பின் செயல்பாடுகளையும், ட்விட்டரின் எதிர்வினைகளை விரிவாகக் கீழ்க்காணும் கட்டுரையில் படிக்கலாம்.

Also Read: ட்ரம்புக்கும் ட்விட்டருக்கும் அப்படி என்னதான் பிரச்னை...? விரிவான அலசல்! #LongRead

Also Read: #USElections2020 ட்ரம்ப்பின் கொந்தளிப்புகளை எப்படிக் கையாள்கிறது ட்விட்டர், ஃபேஸ்புக்?

US Capitol Unrest

உடனடியாக தொலைக்காட்சியில் தோன்றி அதிபராக எடுத்த உறுதிமொழிக்கு இணங்க சட்டத்தை அவர் பாதுகாக்க வேண்டும். இந்த முற்றுகைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க அவரது ஆதரவாளர்களுக்கு உத்தரவிட வேண்டும் என ட்ரம்ப்பை கேட்டுக்கொண்டுள்ளார் ஜோ பைடன். இது அடிப்படை நாகரிகம் என்றும் கூறியுள்ளார்.

முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவும் இந்தக் கலவரங்களுக்கு ட்ரம்ப்பே காரணம் என விமர்சித்துள்ளார். "இன்றைய வன்முறையை வரலாறு என்றும் மறக்காது. பதவியில் இருக்கும் அதிபரே US Capitol மீது கலவரங்களைத் தூண்டிவிட்டுள்ளார். முறையாக நடந்த தேர்தல் முடிவுகளைப் பற்றித் தொடர்ந்து அவதூறு பரப்பினார் என வரலாறு சொல்லும். இது இந்தத் தேசத்திற்கான அவமானம்" என அவர் தெரிவித்திருக்கிறார்.



source https://www.vikatan.com/technology/tech-news/protestors-storm-us-capitol-trump-social-media-accounts-suspended

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக