மதுரை தோப்பூரில் ரூ 1,264 கோடி மதிப்பீட்டில் 224 ஏக்கர் பரப்பளவில் உலகத்தரம் வாய்ந்த எய்ம்ஸ் மருத்துவமனை அமையவிருப்பதாக மத்திய அரசு அறிவித்திருந்தது. இந்த அறிவிப்பை அடுத்துக் கடந்த 2019-ம் ஆண்டு ஜனவரி மாதம், மருத்துவமனை அமைப்பதற்கான பணிகளுக்காகப் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினர். மருத்துவமனை கட்டும் பணி வரும் 2022-ம் ஆண்டிற்குள் நிறைவடையும் என்று கூறப்பட்டது.
அடிக்கல் நாட்டி இரண்டு வருடங்கள் ஆகியும் சாலை போடும் பணியும், சுற்றுச்சுவர் பணிகள் மட்டுமே நடந்து வருகிறது. சமீபத்தில் மருத்துவமனை கட்டுவதற்கான இடங்கள் இன்னும் ஒப்படைக்கப்படவில்லை என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் பதிலளிக்கப் பட்டிருந்தது. இந்த நிலையில் பணியை துரிதப்படுத்தக் கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. விசாரணையில் தமிழக அரசு தரப்பில் மத்திய அரசிடம் இடம் ஒப்படைக்கப்பட்ட ஆவணங்கள் சமர்பிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து மத்திய அரசு தரப்பில், `தமிழக அரசு இடம் ஒப்படைத்ததை உறுதி செய்ததுடன், கட்டுமானப் பணிகளுக்காகக் கடன் ஒப்பந்தம் தொடர்பாக ஜப்பான் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. விரைவில் ஒப்பந்தம் முடிவாகி பணிகள் தொடங்கப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டது.
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவது தொடர்பாக, தென்காசியைச் சேர்ந்த ஒருவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேட்டிருந்த கேள்விகளுக்கு. மருத்துவமனை கட்டுமானப் பணிகளுக்காக ஜப்பான் பன்னாட்டுக் கூட்டுறவு முகமையான ஜிக்கா நிறுவனத்துடன் கடந்த மாதம் ஆலோசனை நடத்தி முடித்திருப்பதாகவும். வரும் மார்ச் மாதம் ஒப்பந்தம் கையெழுத்தாக வாய்ப்பிருப்பதாகவும் தெரிவித்திருந்தது.
மேலும் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவதற்கான 2,000 கோடி ரூபாய் வரை செலவாகும் என்றும் அதில் ஜிக்கா நிறுவனம் 85 சதவிகித தொகை வழங்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. மீதமுள்ள 15 சதவிகித தொகையை மத்திய அரசு வழங்குமா அல்லது மாநில அரசு வழங்குமா என்ற தகவல் கூறப்படவில்லை. இருப்பினும் இதுபோன்ற பணிகளில் மீதமுள்ள தொகையை மத்திய அரசு தான் வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
மருத்துவமனை அனுமதி வழங்கிய போது மருத்துவமனையின் திட்டமதிப்பீடு 1,264 கோடி ரூபாயாக இருந்த நிலையில் தற்போது 2,000 கோடி ரூபாய் வரை அதிகரித்திருப்பது ஆர்.டி.ஐ தகவலின் மூலம் தெரியவந்துள்ளது. மேலும் ஒப்பந்தம் கையெழுத்து ஆன அடுத்த 45 மாதங்களுக்குள் மருத்துவமனையின் அனைத்து பணிகளும் முடிக்கப்படும் என்றும் மத்திய அரசு சார்பில் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டிய போது, மற்ற சில மாநிலங்களிலும் அடிக்கல் நாட்டப்பட்டது. அந்த இடங்களிலெல்லாம் மருத்துவமனை கட்டும் பணி நடந்து வருகிறது. தமிழகத்தில் மட்டும் தான் கட்டுமான பணிகள் மிகவும் தோய்வாக நடைபெற்று வருவதாகவும், இதற்குத் தமிழக அரசின் அலட்சியமும் ஒரு காரணம் என்றும் சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
source https://www.vikatan.com/news/tamilnadu/madurai-aiims-project-estimate-increased-from-rs-1264-crore-to-rs-2000-crore
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக