அண்மையில் திருச்சி மாவட்டம் தொட்டியத்தில் நடந்த பிரசார கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசும்போது, ``தமிழகத்தின் நீராதாரத்தைப் பெருக்குவதற்காகவும், விவசாயிகள் தண்ணீர் பிரச்னையின்றி விவசாயப் பணிகளை மேற்கொள்ள ஏதுவாகவும், பல்வேறு திட்டங்களை இந்த அரசு செயல்படுத்தி வருகிறது. இவையெல்லாவற்றையும் தவிர, கோதாவரி-காவிரி இணைப்புத் திட்டம் 75,000 கோடியில் உறுதியாக நிறைவேற்றப்படும் என்பதை விவசாயிகளுக்குத் தெரிவித்துக்கொள்கிறேன். இதற்காக ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநில முதல்-அமைச்சர்களைத் தமிழக அரசின் பிரதிநிதிகள் சந்தித்துப் பேசிவிட்டு வந்திருக்கிறார்கள். அதற்கு அவர்களும் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு ஒத்துழைப்பு தருவதாக உறுதியளித்திருக்கிறார்கள். காவிரியைச் சீரமைப்பதற்காக 3,000 கோடியில் ஒரு திட்டம் தயாரிக்கப்பட்டு மத்திய அரசின் ஒத்துழைப்போடு அதுவும் நடைபெற்று வருகிறது. இப்படி எது முடியுமோ, அதையெல்லாம் நாங்கள் நிறைவேற்றி வருகிறோம்" என்றார்.
கடந்த இரண்டு, மூன்று ஆண்டுகளாகவே இந்தத் திட்டம் பற்றிய பேச்சு அவ்வப்போது எழுந்தவண்ணம் இருக்கிறது. இந்தச் செய்தியைப் படிக்கும்போது சாதாரணமாகத் தோன்றலாம். இரண்டு நதிகளை மட்டும்தானே இணைக்கப்போகிறார்கள் என்பதுதானே இதன் அர்த்தம் என்று... அதைச் சற்று விரிவாகப் பார்க்க வேண்டிய அவசியம் இருக்கிறது. இத்திட்டத்தை பா.ஜ.க மத்தியில் ஆட்சியைப் பிடித்தபோது மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அறிவித்தார். அப்போதைய திட்ட மதிப்பீடு ரூ. 60,000 கோடி.
கோதாவரி - காவிரி இணைப்புத்திட்டம் என்ன?
மகாராஷ்டிரா - சத்தீஸ்கர் எல்லையில் பாயும் கோதாவரி ஆற்றின் துணை நதியான இந்திராவதி ஆற்றில் ஒரு அணை கட்ட வேண்டும். அதில் தேங்கும் தண்ணீர் தெலங்கானா மாநிலத்தில் உள்ள காலேஸ்வரம் அணைக்குக் கொண்டு செல்லப்பட வேண்டும். அதன் பின்னர், ஆந்திர மாநிலம் போலாவரம் அணைக்கும், அங்கிருந்து நாகர்ஜுனா சாகர் அணைக்கும், அதன் வழியாகக் கிருஷ்ணா நதிக்கும் நீரைக் கொண்டு செல்ல வேண்டும். அதன் பின்னர், அந்த நதிநீரை சோமசிலா அணைமூலம் பெண்ணாறு வழியாகக் காவிரிக்குத் தண்ணீரைக் கொண்டு செல்வதுதான் கோதாவரி - காவிரி இணைப்புத் திட்டம். என்ன படிக்கவே தலை சுற்றுகிறதா? இத்திட்டத்துக்கு முன்னர் கோதாவரி - கிருஷ்ணா நதிநீர் இணைப்பைப் பற்றிய திட்டத்தைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
கோதாவரி, இந்தியாவின் மிக நீளமான நதிகளில் முக்கியமானது. மகாராஷ்டிர மாநிலம் நாசிக் அருகே உள்ள பிரம்மகிரி என்ற மலையின் திரிம்பர்க் பகுதியில் கோதாவரி நதி உற்பத்தியாகிறது. அங்கிருந்து பெருவெள்ளமாய்ப் பாய்ந்து கர்நாடகாவில் நுழைந்து ஆந்திரா, தெலங்கானா என்ற இரு மாநிலங்களையும் செழிக்கச் செய்துவிட்டு 1,465 கி.மீ தூரம் சளைக்காமல் ஓடி ஆந்திரப் பகுதியின் வங்கக் கடலில் கடக்கிறது. இங்கே கவனிக்கப்பட வேண்டியது, கோதாவரி என்பது வெறுமனே ஆந்திராவுக்கு மட்டும் சொந்தமானது மட்டுமல்ல என்பதைத்தான். கோதாவரி மகாராஷ்டிரா, ஆந்திரா, தெலங்கானா ஆகிய மூன்று மாநிலங்களுக்கும் முக்கியமானது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
முன்னரே, இந்தக் கோதாவரியையும் கிருஷ்ணாவையும் இணைப்பதற்கான திட்டமான போலாவரத்தில் பட்டிசீமா திட்டம் நடைமுறையிலிருந்து வருகிறது. இதுதவிர, போலாவரம் பகுதியில் பெரிய அணைக்கட்டு ஒன்றும் கட்டப்பட்டு வருகிறது. இங்கு வரும் கோதாவரி நீரை கிருஷ்ணா நதியின் குறுக்கே இருக்கும் நாகார்ஜுன சாகர் அணைக்குத் திருப்புவதே இந்தத் திட்டம். முதலில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்ட பின்னரே கோதாவரி காவிரி நதிநீர் இணைப்பைப் பற்றிப் பேச முடியும். இத்திட்டம் ஆரம்பிக்கப்படும் நிலையில் அளவிடப்பட்ட தொகை 14,000 கோடி, இப்போது தேவைப்படுவது 60,000 கோடி.
காவிரி இணைப்பு
போலாவரம் திட்டம் வெற்றிகரமாகச் செயல்பாட்டுக்கு வந்தால், கிருஷ்ணா நதியையும், பெண்ணை ஆற்றையும் இணைக்க வேண்டும். அதன் பிறகு, பெண்ணை ஆற்றிலிருந்து சோமசிலா அணைமூலம் காவிரி ஆற்றில் தண்ணீரைக் கொண்டு செல்ல முடியும். சொல்லப்போனால் கோதாவரி - கிருஷ்ணா - பெண்ணை - காவிரி இணைப்பு என்பதுதான் உண்மையான பெயராக இருக்க முடியும்.
நதிநீர் இணைப்பால் ஏற்படும் சூழலியல் சிக்கல்கள் குறித்து இந்தியாவின் `தண்ணீர் மனிதர்' எனப் போற்றப்படும் ராஜேந்திர சிங், ``நதிநீர் இணைப்பு என்பது ஒரு மாயை. அது கார்ப்பரேட் கயவர்களோடு இணைந்து, அரசாங்கம் செய்யும் சதி. இது ஒருபோதும் நன்மையைத் தராது. ஒரு நதி என்பது வெறும் நீர் மட்டுமே அல்ல. அது ஓர் உயிர்ச்சூழல் மண்டலம். ஒவ்வொரு நதிக்கும் ஒவ்வொரு தன்மை உண்டு. அதை ஒன்றோடொன்று இணைக்க முயன்றால், அது இயற்கைச் சுழற்சியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தும். இதைச் சொல்வதன் மூலம் நான் மொத்தமாக வளர்ச்சித் திட்டங்களை எதிர்க்கவில்லை. சரியான பாதையில் வளர்ச்சியைக் கொண்டுசெல்ல வேண்டும் என்றுதான் சொல்கிறேன்.
இயற்கையின் வளர்ச்சி, இயற்கையோடு இயைந்ததாக இருக்க வேண்டும். நதிகளைக் குளங்களோடு, ஏரிகளோடு, குட்டைகளோடு இணையுங்கள். நதிகளை நதிகளோடு இணைக்காதீர்கள். நம் பாரம்பர்ய முறைகளைப் பின்பற்றி ஒவ்வொரு கிராமத்திலும், நீர் மேலாண்மைத் திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும். நம் தேசத்தின் தண்ணீர்ப் பிரச்னை தீர்க்க முடியாதது அல்ல. ஆனால், எந்த அரசும் தீர்க்க முயற்சி செய்யவில்லை என்பதுதான் நிஜம்’’ என்கிறார்.
இத்திட்டத்தில் உள்ள நடைமுறை சிக்கல்கள் குறித்தும், அதன் விளைவுகள் குறித்தும் பேசும் ஓய்வுபெற்ற மூத்த பொறியாளர் அ.வீரப்பன், ``தமிழ்நாட்டில் ஆண்டுக்கு 925 மி.மீ மழை பெய்தாலும் தண்ணீர் பற்றாக்குறை தலைவிரித்து ஆடும் நிலைமைக்குக் காரணம் ஆட்சியாளர்கள்தாம். இது மறுக்க முடியாத உண்மை. தமிழகம், அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களையே தண்ணீருக்காக எப்போதும் நம்பியிருக்க வேண்டியிருக்கிறது. இந்திய அரசியல் சாசன சட்டப்படி மேற்கொள்ளப்பட்ட தண்ணீர் பகிர்ந்தளிப்பு அரச ஒப்பந்தங்களைச் செயல்படுத்துவதைவிட, மீறுவதிலேயே அண்டை மாநிலங்கள் குறியாக இருக்கின்றன. கேரள அரசு, முல்லைப் பெரியாற்றிலும் சிறுவாணியிலும் நமக்கு அளிக்க வேண்டிய தண்ணீரை எவ்விதக் காரணமுமின்றி தடுத்தே வந்துள்ளது.
கோதாவரி, கிருஷ்ணா நதிகளில் ஓடும் வெள்ள மிகை நீரின் உரிமைக்காரர்களான மகாராஷ்டிரா, கர்நாடகா, தெலங்கானா, ஆந்திரா மாநிலங்கள் `எங்களிடம் வெள்ள மிகை நீர் இருக்கிறது. அதைத் தமிழ்நாட்டுக்குத் தருவோம்' என்று சொன்னதும் கிடையாது. எழுத்திலும் எந்த உறுதிமொழியும் தரவில்லை. இவற்றைக் கேட்டுப்பெறத்தக்க அரசியல் வலிமையும் தமிழ்நாட்டு அரசியல் தலைவர்களுக்கில்லை என்பதே எதார்த்தம்.
இன்னொன்று நதிநீர் இணைப்பு என்பது அவ்வளவு எளிதாகச் செயல்படுத்தும் திட்டமல்ல. வட இந்தியாவில் 14 இணைப்புகளையும் தென்னிந்தியாவில் 16 இணைப்புகளையும் (37 பெருநதிகளை) இணைத்துச் செய்ய வேண்டிய மாபெரும் திட்டமாகும். இதற்கு இன்னும் 50 ஆண்டுகள்கூட ஆகலாம். இந்தக் கோதாவரி - காவிரி இணைப்பால் பெரும் வெள்ளக் காலங்களில் (4 ஆண்டுகளுக்கொரு முறை) ஓர் ஆண்டுக்கு 20 - 30 நாள்களுக்கு மட்டுமே தண்ணீர் வர வாய்ப்புள்ளது. மீதி 11 மாதங்களும் பழைய மாதிரி எல்லா ஆறுகளும் வறண்டே கிடக்கும். நதிநீர் இணைப்பு நதிகளின் ஆற்றுப்போக்கைக் கண்டிப்பாக மாற்றிச் சுற்றுச்சூழலைப் பெரிதும் பாதிக்கும் என்று சுற்றுச்சூழல் வல்லுநர்கள் உறுதியாகத் தெரிவிக்கிறார்கள்.
நதிநீர் இணைப்பால் தமிழகத்துக்குப் பெரும் பயன்கிடைப்பதாகத் தேசிய நீர் மேம்பாட்டு முகமையின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கவில்லை. காவிரியில் கூடுதலாகக் கிடைப்பது 50 டி.எம்.சி-க்குக் குறைவே. மிகை நீர் மாநிலங்கள் (கேரளா உட்பட) நதிநீர் இணைப்பை எதிர்க்கவே செய்கின்றன. பேச்சளவில்கூட அந்த மாநிலங்கள் ஒப்புக்கொள்ளவில்லை. இப்படியிருக்கும் சூழ்நிலையில் தமிழகத்தில் மட்டும் நதிநீர் இணைப்புபற்றி அரசியல்வாதிகள் மேடைக்கு மேடை பேசிக்கொண்டிருக்கிறார்கள்.
நதிநீர் இணைப்பு இயற்கை வளங்களான காடு, மழை, செடி முதலிய பல்லுயிர் பெருக்கத்தைப் பெரிதும் பாதிக்கும். குறிப்பாக, மலைவாழ் மக்கள், பழங்குடிகள் புலம்பெயர வேண்டியிருக்கும். இதற்கு நர்மதை நதியில் கட்டப்பட்ட சர்தார் சரோவர் அணையே எடுத்துக்காட்டு. ஆறுகளை இணைக்கும்போது இடையில் இணைப்பாறுகளை உருவாக்கப் பெரும் செலவு பிடிக்கும். கோதாவரி - காவிரி இணைப்புக்குப் பதிலாகச் செலவு மிகக் குறைவாகப் பிடிக்கும், குறுகிய காலத்தில் நிறைவேற்றத்தக்கத் திட்டங்களைத் தமிழ்நாட்டில் செயல்படுத்துவது நல்லது.
தமிழ்நாட்டில் இருக்கிற 39,000-க்கும் மேற்பட்ட நீர்வளங்களை முறையாகப் பேணிக் காக்காமல் விட்டுவிட்டு, நதிநீர் இணைப்புக்கு அலைவது கையாலாகத்தனம். ஏரி, குளங்கள் போன்ற நீர்நிலைகளைத் தூர்வாரி, சீரமைக்க வேண்டும். கூடுதலாக மழை நீரைச் சேகரிக்க ஒரு மீட்டர் அளவுக்காவது ஏரிகளை ஆழப்படுத்த வேண்டும். அரசுக் கட்டடங்களில் மழைநீரைச் சேமிக்கச் சிறப்பு நிதி ஒதுக்கப்பட வேண்டும். காவிரிப் பாசனப் பகுதியில் ரூ. 15,000 கோடிக்குப் பாசன மேம்பாட்டுத் திட்டங்கள் நிறைவேற்றப்பட வேண்டும். ஆற்றுமணலை அள்ளி விற்பதை அறவே நிறுத்த வேண்டும். இதற்காகப் பகுதி நேரக் கூடுதல் பணியாளர்கள் நியமிக்கப்பட வேண்டும். அரசியல்வாதிகளுக்கும், அரசுத்துறை அதிகாரிகளுக்கும் இதில் பொறுப்பும் கடமையும் உண்டு. இந்த அடிப்படையான சமுதாய நல்லொழுக்கம் ஏற்படாதவரைத் தமிழ்நாட்டில் தண்ணீர் பஞ்சத்தைப் போக்க முடியாது.
காவிரியில் ஏன் தண்ணீர் வரவில்லை? கர்நாடக அரசும் மத்திய அரசும் தமிழ்நாட்டை எப்படி ஏமாற்றியும் வஞ்சித்தும் வருகின்றன. தற்போதுகூட கர்நாடகத்தால் காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்ட தண்ணீரின் அளவை வழங்க முடியும். ஆனால், கர்நாடகா வழங்காது. அதைப் பெறுவதற்குத் தமிழக அரசும் முயற்சி செய்யாது. தற்போது இந்திய மாநிலங்களுக்கிடையே நடக்கும் நிகழ்வுகளை வைத்துப் பார்க்கும்போது இந்திய நதிகளின் இணைப்பு, குறிப்பாக, கோதாவரி - காவிரி இணைப்பு இன்றைக்கோ நாளைக்கோ நடைபெற வாய்ப்பே இல்லை என்பது தெளிவாகத் தெரியும்" என்கிறார் வீரப்பன்.
ஆந்திரா மாநிலத்தின் பாலாற்றிலிருந்தும், கர்நாடகாவின் காவிரியிலிருந்தும் உரிமை இருந்தும் நீரைப் பெற முடியாத கையறு நிலையில் இருக்கும் தமிழகத்தின் பக்கம் இருந்து பார்த்தால், கோதாவரி - காவிரி இணைப்பு சாத்தியமா என்பதை நாம் எளிதில் புரிந்துகொள்ளலாம். இந்த இரு நதிகளின் நீருக்குப் போராட வேண்டிய தமிழக அரசு, கோதாவரி - கிருஷ்ணா - பெண்ணை - காவிரி இணைப்புத் திட்டத்துக்கு ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா ஆகிய மூன்று மாநிலங்களுடன் போராட வேண்டியிருக்கும்.
`இந்தத் திட்டம்குறித்துப் பேசுவதெல்லாம் போகாத ஊருக்கு வழி காட்டுவதைப் போன்றதே' - இது உங்கள் கூட்டணியில் இருக்கும் பா.ம.க இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் மே 14, 2018-ம் ஆண்டு வெளியிட்ட அறிக்கையில் சொன்னதுதான்.
கடந்த சில நாள்களாகச் சென்னை, பல்லாவரம் - துரைப்பாக்கம் ரேடியல் சாலையையொட்டி அமைந்துள்ள வேல்ஸ் பல்கலைக்கழகம் அருகே நகராட்சி ஊழியர்கள் குப்பையைக் கொட்டி ஏரியை மூடித் தனியாருக்கு நிலத்தைத் தாரைவார்க்கும் செயல் நடந்து கொண்டிருக்கிறது. அதற்காக மக்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். இது போன்ற ஆக்கிரமிப்புகளுக்குத் தடைபோட்டு நம்மிடம் இருக்கும் நீர்வளங்களை முறையாகப் பாதுகாத்து, நதிகளின் பங்கீடுகளில் நமக்கு வர வேண்டிய நீரை வாங்கினாலே விவசாயம் செழிக்கும் என்பதுதான் நிதர்சனமான உண்மை.
source https://www.vikatan.com/government-and-politics/environment/is-godavari-cauvery-river-linking-project-really-possible
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக