தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள பிள்ளையார்நத்தம் பகுதியைச் சேர்ந்தவர் நாராயணசாமி. இவருக்கு மகாலெட்சுமி என்ற மனைவியும், அபிராமி என்ற மகளும் உள்ளனர். அபிராமிக்கு திருமணமாகி கோவில்பட்டியில் வசித்து வருகிறார். நாராயணசாமியும் மகாலெட்சுமியும் தன் மகள் அபிராமி வீட்டில் வசித்து வருகிறார்கள். இவர், இந்தாண்டு தனது 5 ஏக்கர் நிலத்தில் முதலில் மக்காச்சோளம் பயிரிட்டிருந்தார். போதிய மழை இல்லாததால் மக்காசோளத்தினை அழித்துவிட்டு உளுந்து பயிரிட்டுள்ளார்.
உளுந்துச் செடியில் மஞ்சள்தேமல் நோய் பாதிக்கப்பட்டதால், அதனை அழித்து மீண்டும் மக்காச்சோளம் பயிரிட்டுள்ளார். ஆனால், மக்காச்சோளத்திலும் அதிகளவில் படைப்புழுக்கள் தாக்கி பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், கடந்த நில நாட்களாகவே நாராயணசாமி, மன வேதனையில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், அவரது விவசாய நிலத்தின் அருகில் உள்ள வேப்ப மரத்தில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டுள்ளார். தற்கொலைக்கு முன்பாக அங்குள்ள சுவரில், கரித்துண்டால், “மித்ரா என்னை மன்னித்துவிடு” என்று எழுதி வைத்துள்ளார்.
”நாராயணசாமி, விருதுநகர் மாவட்டம் ராஜபாளைத்துல உள்ள தனியார் மில்லில் வேலை பார்த்துட்டு வந்தார். அங்க வேலை பார்த்தாலும், விவசாயத்தையும் பார்த்துட்டு வந்தார். ஓய்வுக்குப் பிறகு முழுநேரமா விவசாயத்துல இறங்கிட்டார். இந்தப் பகுதி முழுசுமே மானாவாரி விவசாயம்தான். மழை பெஞ்சாத்தான் பசுமையைப் பார்க்க முடியும். இந்த வருஷம் ஆரம்பத்துல மழை சரியாப் பெய்யல. அதனால, மக்காச்சோளம் சரியா வளரல. அதனால, பெரும்பாலான விவசாயிங்க, மக்காசோளத்தை அழிச்சுட்டு உளுந்து போட்டங்க.
நாராயணசாமியும் உளுந்து போட்டார். அடுத்தடுத்து பெஞ்ச மழையால் உளுந்துவில் மஞ்சதேமல் நோய் பரவலாப் பரவிடுச்சு. எந்த மருந்துக்கும் கட்டுப்படலை. அதுல, சில விவசாயிங்க திரும்பவும் மக்காச்சோளம் போட்டாங்க. ஆனா, போன வருசம் மாதிரியே இந்த வருசமும் மக்காச்சோளத்துல படைப்புழுத் தாக்கி ஒன்னும் இல்லாமப் போயிடுச்சு.
உழவு, விதை, விதைப்பு, களையெடுப்பு, உரம், பூச்சிமருந்துன்னு கணக்கு பார்க்காம கடன் வாங்கிச் செலவழிச்சோம். எதாவது ஒரு வகையில பணம் கிடைச்சுடும். வாங்குன கடனுக்கு வட்டியாவது கட்டிப்புடலாம்னுதான் நினைச்சோம். ஆனா, ஒன்னுத்துக்கும் வழியில்லாமப் போச்சு. எல்லா விவசாயிங்களும் புலம்பிக்கிட்டுத்தான் இருக்கோம். இருந்தாலும், ஒருத்தருக்கொருத்தர் ஆறுதல் சொல்லி மனசைத் தேக்கிறோம். நாராயணசாமியும் அப்படித்தான் புலம்பினார்.
ஆனா, அவரால நஷ்டத்தை தாங்கிக்க முடியலை. தன்னோட 2 வயசுப் பேத்தி மித்ரா மேல அதிகமான பாசம் வச்சிருந்தார். அதனால தற்கொலைக்கு முன்னால சுவத்துல கரித்துண்டால் ‘மித்ரா மன்னித்து விடு’ன்னு எழுதி வச்சிருக்கார். அரசு தரும் காப்பீட்டுத்தொகை எந்த விதத்திலும்கட்டுபடியாகாது. அரசு, கூடுதலாக நிவாரணம் தரணும்” என்றனர் அப்பகுதி விவசாயிகள்.
source https://www.vikatan.com/news/crime/farmer-commits-suicide-by-maize-crops-damaged-by-nematode
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக