Ad

ஞாயிறு, 3 ஜனவரி, 2021

கழன்றுவிழும் முகமூடிகள்... ஆரியை எதிர்க்கும் வீடு... திருப்பி அடிக்கும் ஆரி! பிக்பாஸ் - நாள் 90

‘ரிவீட்... யூ டோன்ட் நோ... புட்டிங்... பிக் நெய்ல்... நெம்பியெல்லாம் எடுக்க முடியாது’ என்று ரிவீட் அடிப்பது பற்றிய விளக்கத்தை 'வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்' படத்தில் பிரகாஷ்ராஜிடம் சொல்லுவார் கமல். அவரின் குறுக்கு விசாரணை இன்று அப்படித்தான் ரிவீட் அடிப்பது போல் இருந்தது. ‘'பாலாஜி... என் மைக்கையெல்லாம் அவ்ளோ ஈஸியா கழட்டிட முடியாது’' என்று கமல் சொன்ன சமயத்தில் அவரின் தொனியானது சட்டென்று வசூல்ராஜா பாத்திரமாக மாறிப் போனதைப் போன்று ஒரு பிரமை.

இதர பிக்பாஸ் ஷோக்களில், நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் சட்டை கையை மடித்து நாக்கைத் துருத்திக் கொண்டு போட்டியாளர்களை வசைவதைக் கண்டு மக்கள் கிளர்ச்சியுறுகிறார்கள். ‘அப்படிப் போடு’ என்று குதூகலிக்கிறார்கள். ஆனால் – ‘அது தன் பாணியல்ல’ என்பதை மீண்டும் மீண்டும் கமல் பதிவு செய்கிறார். ஒன்று அன்பு வழியில் சொல்லிப் பார்ப்பது. அது சரிப்பட்டு வரவில்லையென்றால் தன் கண்டிப்பை அழுத்தமான வார்த்தைகளில் சொல்லி மீண்டும் வழிக்கு கொண்டு வருவது என்பதுதான் கமலின் பாணி. இதில் இரண்டாவது வகை இன்று அருமையாக வெளிப்பட்டது.

ஆட்கள் குறைந்த பிறகு பிக்பாஸ் வீட்டின் கூட்டணி மாற்றம் இப்போது இன்னொரு பரிமணாத்தில் தோற்றமளிக்கிறது. இப்போது ஒரு அணியில் ஆரி மட்டும் இருக்கிறார். இன்னொரு அணியில் ஆரியை எதிர்ப்பவர்கள் இருக்கிறார்கள். அதாவது தங்களுக்குள் குரூப் இருந்தாலும் ஆரியை எதிர்ப்பதில் மட்டும் அவர்கள் ஒன்றாக இணைந்து விடுகிறார்கள்.

இப்படி இவர்கள் ஆரியை ஒட்டுமொத்தமாக கார்னர் செய்வது ஆரியின் மீதான அனுதாபமாக, அவருக்கு சாதகமாக மாறி விடலாம். கமலின் இன்றைய விசாரணை நாளில் இந்த அனுதாபம் பாராட்டாக வெளிப்பட்டதோ என்று எண்ணத் தோன்றுகிறது.

குரூப்பிஸத்தில் சிக்காதவர், கடின உழைப்பாளி, புத்திசாலி என்று பல்வேறு நேர்மறை அம்சங்கள் ஆரியிடம் இருக்கின்றன. இந்த வகையில் அவர் ஒரு முன்னணி போட்டியாளர் என்பதில் சந்தேகமில்லை.

அதைப் போலவே ஆரியிடம் பலவீனங்களும் இருக்கின்றன. வீட்டின் மனநிலையை இறுக்கமாக தக்க வைத்துக் கொள்வது, மற்றவர்களை தொடர்ந்து விமர்சிப்பது, ‘பாபநாசம்’ திரைப்படத்தின் டெக்னிக் போல பார்வையாளர்களின் ஆழ்மனங்களில் அவற்றை பதிவு செய்வது, ஒரு வாக்குவாதத்தை கூலாக செய்யாமல் சண்டைக்கோழியாக சிலிர்த்துக் கொள்வது போன்ற எதிர்மறை அம்சங்களும் உள்ளன.

ஆரியை ஒருபக்கம் பாராட்டினாலும் அவருடைய குறையை ஓர் அறிவுரையாக போகிற போக்கில் சொல்லி விட்டுச் சென்றார் கமல். '‘நீங்க சொல்றதெல்லாம் ஓகே. ஆனா அதை கனிவாக சொன்னீர்கள் என்றால் அதன் பலன் அதிகமாக இருக்கும்்இருக்கும்'’ என்று அவர் குறிப்பிட்டுச் சொன்னது இதைத்தான்.

'‘வீட்டிற்கு வந்த விருந்தினர்கள் பெரும்பாலும் ஆரியை முன்னுதாரணமாகச் சொன்னார்களே. கவனித்தீர்களா?'’ என்று இதர போட்டியாளர்களிடம் கமல் கேட்டார். இதுவும் ஒரு முக்கியமான குறிப்பு. ஆரி ஒரு வலிமையான போட்டியாளர் என்பதில் நமக்கு சந்தேகமில்லை. ஆனால் ஒரு நாளின் நிகழ்வில் எடிட் செய்யப்பட்ட சில நிமிடங்களில் சுருக்கத்தைத்தான் நாம் பார்க்கிறோம். ஆனால் இதர போட்டியாளர்கள் அங்கேயே 24 மணி நேரமும் வாழ்கிறார்கள். எனவே அவர்களின் பார்வைகளையும் இணைத்து பரிசீலிப்பதுதான் நேர்மையான அணுகுமுறையாக இருக்கும். ‘கடந்த சீஸன்களில் கடலை சாப்பிட்டவர்கள்தான் ஜெயித்தார்கள்’ என்று பாலாஜி குறிப்பிட்டது ஒருவகையில் மக்களின் தீர்ப்பை கொச்சையாக விமர்சிப்பதுதான். இதை கமலும் சரியாக சுட்டிக் காட்டினார். ஆனால் கடந்த சீஸன்களின் முடிவுகள் மக்களின் தீர்ப்பின் அடிப்படையில்தான் முழுக்க நடந்ததா என்பது கேள்விக்குரியது. ஏனெனில் ஒவ்வொரு சீஸனிலும் மக்களின் பரவலான மனநிலைக்கும் முடிவுகளுக்கும் இடையில் நிறைய வித்தியாசம் இருப்பதைப் போல் தெரிகிறது. இந்த சீஸனில் கூட பார்வையாளர்களின் கவனத்தை அதிகம் கவர்ந்த போட்டியாளர்கள் வெளியேறி விட்டார்கள். ஆனால் சுமாரான போட்டியாளர்கள் இன்னமும் அங்கேயே இருக்கிறார்கள். ஆஜித், ஷிவானி, சோம் ஆகிய மூவரையும் குறிப்பிட்டுச் சொல்லலாம்.

ஒருவேளை இந்த சீஸனில் ஷிவானி ஜெயித்து விடுகிறார் என்று ஒரு பேச்சுக்கு வைத்துக் கொள்வோம். அது மக்களின் தீர்ப்பு என்று எளிதாக விட்டு விட முடியுமா? கமல் இப்போது அரசியல் களத்திலும் இறங்கி இருப்பதால் ‘மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு’ என்பதை பாதுகாப்பாக அழுத்திச் சொல்கிறாரோ என்று தோன்றுகிறது. ஏனெனில் மக்களும் சமயங்களில் தடுமாறலாம். ஆரியின் ஆதரவாளர்கள் இருப்பதைப் போலவே அவர் மீது விமர்சனங்கள் வைப்பவர்களும் இன்னொரு புறம் இருக்கிறார்கள்.

ஓகே. நாள் 90-ல் என்ன நடந்ததென்று பார்ப்போம்.

‘சகல கலா வல்லவன்’ படத்தின் ‘ஹேப்பி நியூ இயர்’ பாடலை ஒலிபரப்பினார்கள். (நான் குழந்தையா இருக்கும் போதும் இந்தப் பாட்டைத்தான் கேட்டேன்). ஆங்கில புத்தாண்டு வாழ்த்து சொன்ன கமல், ‘'இந்த புதிய ஆண்டு மெய்வருத்தக் கூலி தரும். ஒரு விஷயத்தை உணர்ச்சிவசப்படாமல் யோசித்து முடிவு எடுத்தால் உடனே அதை செய்து விடுங்கள். நல்லதாகவே அமையும்'’ என்று சொல்லி 'அபூர்வ சகோதரர்கள்' படத்தில் நிகழ்ந்த கதை மாற்றத்தையும் அதனால் கிடைத்த வெற்றியையும் சொன்னார். ‘உயரம் என்பது முக்கியமல்ல’ என்பதுதான் சுற்றி சுற்றி அவர் சொல்ல வந்தது.

வெள்ளிக்கிழமை நிகழ்வுகள் காட்டப்பட்டன. தான் நியாயமற்ற காரணத்திற்காக நாமினேட் செய்யப்பட்டதை ரம்யாவிடம் சொல்லிிக் கொண்டிருந்தார் ஆரி. ஒரு பார்வையில் இது ஏதோ இயல்பான உரையாடலாகத்தான் முதலில்பட்டது. ஆனால் பிறகு ஆரிக்கும் ரம்யாவிற்குமான மென்மோதலாக மாறியது.

ஃப்ரீஸ் டாஸ்க்கில் பிக்பாஸ் சொல்வது மட்டுமே ரூல். இதை முன்பே அவர் தெரிவித்து விட்டார். அவர்தான் இதில் நமக்கு வழிகாட்டுவார். அதையெல்லாம் நான் கறாராக பின்பற்றினேன். எனவே நான் இந்த டாஸ்க்கில் ஜாலியாக மற்றவர்களுடன் விளையாடவில்லை என்பதை ரியோ ஒரு குறையாக சொல்ல முடியாது” என்று ஆரி விளக்கிய போது நான் உண்மையில் பிரமித்துதான் போனேன். ஒரு விஷயத்தை ஆரி எப்படியெல்லாம் தர்க்கபூர்வமாக யோசிக்கிறார் என்று.

ஆனால், பிக்பாஸ் சொன்னதையும் தாண்டி ஒரு டாஸ்க்கை சுவாரஸ்யமாக்குவது போட்டியாளர்களின் கைகளிலும் இருக்கிறது. அவர்களும் சில விஷயங்களை தன்னிச்சையாகவோ அல்லது திட்டமிட்டு யோசித்தோ குறிப்பிட்ட டாஸ்க்கை சுவாரசியமாக்கலாம். போட்டியாளர்கள் ஒன்றும் பிக்பாஸ் சொல்வதைப் பின்பற்றும் இயந்திரங்கள் மட்டுமே அல்ல. இந்த லாஜிக்கை ஆரியின் தர்க்கத்திற்கு பதிலாக நான் வைக்கிறேன்.

“நீங்கள் பாலாஜியை பொதுவில் குறை சொன்னதில்லை. நாமினேட் செய்ததில்லை'’ என்று ரம்யாவின் பக்கம் வண்டியைத் திருப்பினார் ஆரி. ‘'இந்த வாரம் கூட நான் பாலாஜியைத்தான் நாமினேட் செய்தேன். கடந்த வாரங்களில் கூட செய்திருக்கிறேன். அதெல்லாம் உங்களுக்குத் தெரியுமா? நீங்கள் ஒவ்வொருவரிடமும் சென்று இதர போட்டியாளர்கள் பற்றிய குறைகளை தொடர்ந்து சொல்லி கேமராவிலும் பதிவு செய்கிறீர்கள். அதையொரு உத்தியாகவே செய்கிறீர்கள். இனிமேல் நானும் இப்படிச் செய்வேன். யாரையாவது கலாய்ப்பது மட்டுமே இதுவரை என் வழக்கமாக இருந்தது. இனி சீரியஸாக செய்வேன்'’ என்று ரம்யாவும் சூடானார்.

ரம்யாவிற்கும் ஆரிக்குமான உரையாடலை ஒட்டுமொத்த வீடே கவனித்துக் கொண்டிருந்தது. ஆரி படுப்பதற்காக செல்லும் போது '‘குறையை மட்டுமே சொல்லிட்டு இருக்காதீங்க... ஆரிி'’ என்று இன்னொரு சண்டைக்கான விதையை பாலாஜி தூவினார். ‘'நான் வெளில போயிடுவேன். நீ கப் ஜெயிச்சுக்க'’ என்று ஆரியும் பதிலுக்கு எரிச்சல் அடைந்தார்.

அப்போதும் பாலாஜி விடாமல் "காதல் கண் கட்டுதேன்னு எதை வெச்சு சொன்னீங்க?'’ என்று ஆரியை வம்புக்கு இழுத்தார். இதைப் பற்றி பேசினால் ஷிவானியின் பெயர் அநாவசியமாக இழுக்கப்படும் என்று பாலாஜி உண்மையிலேயே கவலைப்பட்டால் இந்த தலைப்பை அவர் மறுபடியும் ஆரம்பித்திருக்கக்கூடாது. ஆனால் ஆரியுடன் மோதுவதுதான் பாலாஜிக்கு பிரதானமாகப்படுகிறது போல.

ஆனால், ஆரி இதைப்பற்றி பேச விரும்பாமல் எச்சரித்தார். “வேணாம்... அதைப் பத்தி பேச வேணாம்.. ஷிவானியோட அம்மா வந்து அதை டீடெய்லா பேசிட்டாங்க. மறுபடியும் ஆரம்பிக்க வேணாம். நல்லா இருக்காது...” என்று ஆரி மறுத்தது நல்ல விஷயம். நாகரிகமும் கூட.

ஆனால், பாலாஜியின் தொடர்ந்த தூண்டுதலுக்குப் பிறகு ஆரி இதைப் பற்றி பேச வேண்டிய கட்டாயத்திற்கு ஆளான போது ‘ஷிவானி மேட்டரை விடுய்யா...” என்று தலையணையை பாலாஜி தூக்கிப் போட்டது காமெடியான கொடூரம். ஷிவானி டாப்பிக்கை வம்படியாக ஆரம்பித்த பாலாஜியே பிறகு அதற்கு எரிச்சல் அடைவது நியாயமில்லை.

“நீ இவ்ளோ தைரியமான ஆளா இருந்தா ஷிவானியோட அம்மா கிட்ட பேசியிருக்கணும்’' என்று வலிமையானதொரு பாயின்ட்டை எடுத்து வைத்தார் ஆரி. ‘அப்படிப்போடு சபாசு’ என்றுதான் அந்தக் கமென்ட்டை கேட்ட போது தோன்றியது.

'‘பாலாஜி அப்படித்தான் பேசுவான். நீங்கதான் சும்மா இருக்கணும்'’ என்று சொல்லி கேபி ஆரியை அடக்கியதில் நியாயமில்லை. சண்டை பெரிதாக வளரக்கூடாது என்பதால் பாலாஜியை மடக்கி இழுத்துச் சென்றார் ரம்யா. '‘உங்க ஃபிரெண்டை கூட்டிட்டுப் போங்க'’ என்று ஆரி அப்போது இடக்காக சொன்னதும் நியாயமில்லை. ‘'நான் யாருக்கும் ஃபிரெண்டு இல்லைை'’ என்று ரம்யாவும் பதிலுக்கு சூடானார். ரம்யா இடைமறித்து பாலாஜியை அழைத்துச் சென்றதைத்தான் கமல் குத்தலான நையாண்டியாக சொன்னார்.

‘'ஆஜித்தை எப்படி ஒரே சமயத்தில் சுமாரான போட்டியாளர் மற்றும் சுவாரசியமான போட்டியாளர் ஆகிய இரண்டிலும் நாமினேட் செய்ய முடியும்?” என்பது ஆரியின் கேள்வி. (இதையே நானும் நேற்றைய கட்டுரையில் குறிப்பிட்டிருந்தேன்). '‘உங்களுக்கு கிடைச்சபோது மட்டும் இளிச்சிட்டு வாங்கிட்டுப் போனீங்கள்ல'’ என்று பாலாஜி ஆரியை வார்த்தையால் குத்தினார்.

''வெளில இருந்தா நடக்கறதே வேற'’ என்று பாலாஜி சொன்னதெல்லாம் அப்பட்டமான மிரட்டல். (இதையே தன் விசாரணையில் அழுத்தமாக கமல் கண்டித்தது நல்ல விஷயம்.) ‘'நீ கேப்டனா இருக்கவே லாயக்கில்லை.. நீ ஒரு நல்ல போட்டியாளரே இல்லை. மத்தவங்க மேல குறை சொல்லியே பிழைப்பு ஓட்றே'’ என்றெல்லாம் ஏக வசனத்தில் பல புகார்களை ஆரியின் மீது வைத்தார் பாலாஜி.

மெல்ல உயர்ந்து கொண்டிருந்த அனிதாவின் கிராஃப் அவரின் கோபம் காரணமாகவே கீழே இறங்கியதைப் போன்று பாலாஜியின் கிராஃப்பும் இப்போது இறங்கிக் கொண்டிருக்கிறது. வரும் வாரங்களில் ஒருவேளை அவர் வெளியேற்றப்பட்டால் அவரின் கோபம் மட்டுமே பிரதான காரணமாக இருக்கும். ஆரியுடன் முட்டி மோதி விட்டு பிறகு கார்டன் ஏரியாவில் கண்ணீர் விட்ட பாலாஜியை மற்றவர்கள் சமாதானப்படுத்தினார்கள்.

‘'உங்க சண்டையில ஏண்டா என்னை இழுக்கறீங்க. நானே என் அம்மா சொன்னதெல்லாம் கொஞ்சம் மறந்துட்டு நிம்மதியா இருக்கலாம்னு பார்த்தா. அது உங்களுக்குப் பொறுக்கலையாடா” என்பது போல் இன்னொரு மூலையில் ஷிவானியும் அழுது கொண்டிருந்தார்... பாவம்.

நாள் 90 விடிந்தது. ‘என் வீட்டுல நான் இருந்தேனே. லவ் டார்ச்சர் பண்ண எனக்குத் தெரியல’ என்கிற பாடல் ஒலித்தது. இது பாலாஜிக்கு பொருத்தமான பாட்டு போல தெரிந்தது. (பிக்பாஸ் டீம் விஷமக்காரர்கள்).

'‘சப்பாத்தியை யாரு வெளில வெச்சது?'’ என்று காலையில் கேட்டுக் கொண்டிருந்தார் ஆரி. எனக்கு ஒன்று மட்டும் புரியவில்லை. நம் வீடுகளில் இப்படி எந்த உணவுப்பொருளாவது கவனக்குறைவால் திறந்து வைக்கப்பட்டிருந்தால் யாராவது நிச்சயம் அதை சரி செய்து விடுவார். ஏனெனில் அது அனைவரும் உண்ணப் போகும் உணவு. ஆனால் உணவுப்பற்றாக்குறை இருக்கும் பிக்பாஸ் வீட்டில் இப்படி அவர்கள் மெத்தனமாகவும் அலட்சியமாகவும் இருப்பதைக் கண்டு எரிச்சலாகவும் கோபமாகவும் வருகிறது.

'‘நான் பால் மட்டும்தான் மெயினா பார்த்துக்கறேன்'’ என்று ஷிவானி எஸ்கேப் ஆனது கூடுதல் எரிச்சல். '‘இவரு மட்டும்தான் நல்லவராம். செம காண்டாவுது'’ என்று ஆரியைப் பற்றி வெளியே எரிச்சல் அடைந்து கொண்டிருந்தார் பாலாஜி.

கடந்து சென்ற ஷிவானியை அழைத்து ‘ஊரே பார்க்குது’ என்பதை எந்த உள்ளடக்கத்தில் சொன்னேன் என்பதை விளக்கி அதற்காக மன்னிப்பும் கேட்டார் ஆரி. ஒரு பெண்ணின் மீது எந்த தவறும் வந்து விடக்கூடாது என்று கவலைப்படும் ஆரியின் மனோபாவம் பாராட்டுக்குரியது.

“என்ன ஆரி... ரொம்ப ஹேப்பியா இருக்கீங்க?’' என்றபடி உள்ளே வந்தார் கமல். ஆரியின் குழந்தையை தமிழ்நாடே அன்புடன் பார்த்து ரசித்த விஷயத்தை கமல் சொன்னதும் ஆரியின் முகத்தில் பெருமிதம் வழிந்தது. ரியாவின் பெயர்க் காரணத்தை விசாரித்து அறிந்து கொண்ட கமல், ரியோ தன் மனைவியிடம் பேசிய ரொமான்ஸ் வார்த்தைகளையும் சிலாகித்தார்.

இதர போட்டியாளர்களின் உறவினர்கள் வந்தததைப் பற்றி சொல்லிக்கொொண்டு வந்த கமல் ‘மெயின் மேட்டரான’ ஷிவானிக்கு வந்தார். “உங்க கேஸ் வித்தியாசமானது. நீங்க உங்க அம்மாவை எதிர்த்துப் பேசியிருக்கலாம். ஆனா அமைதியா இருந்தீங்க. ‘நீங்க பண்றது சரியில்லம்மா’ன்றதைத் தவிர வேற வார்த்தைகள் உங்க கிட்ட இருந்து வரலை. நல்ல விஷயம் இது. ஒருவேளை உங்களை வெற்றிப்பாதையில் தள்ளி விடுவதற்காக உங்க அம்மா அப்படிச் செய்திருக்கலாம்’ என்று சமநிலையாக ஷிவானிக்கு ஆறுதல் சொன்னார் கமல்.

‘'உங்க அம்மா கூட பேசலாமா?” என்று கமல் கேட்டதும் ஷிவானியின் முகத்தில் திகைப்பும் அச்சமும் வந்தது. (என்னது?! மொதல்ல இருந்தா?!).

‘நான் ஷிவானியோட வக்கீல்’ என்று ஆரம்பித்து வீடியோவில் வந்த ஷிவானியின் அம்மாவிடம் பேசினார் கமல். ஆனால் தன்னுடைய நிலையில் இன்னமும் உறுதியாக இருக்கிற ஷிவானியின் அம்மாவிடம் அதிக மாற்றம் இல்லை. ‘கண்டிப்பும் வசையும் மட்டுமே தன் பிள்ளையை திருத்தும்’ என்று பல பெற்றோர்கள் முட்டாள்தனமாக நம்பிக் கொண்டிருக்கும் வரிசையில் ஷிவானியும் அம்மாவும் இருக்கிறார் போலிருக்கிறது.

தன் மகள் போட்டியில் வெல்ல வேண்டும் என்கிற அவரது விருப்பம் சரியானது. அதனுள் உறைந்திருக்கும் அன்பும் சரியானது. ஆனால் தன் உபதேசத்தை அவர் வெளிப்படுத்திய தொனிதான் பிரச்னை. ‘அன்பு செய்யறதை கோபம் செய்ய முடியாதுங்க’ என்று கமல் சொன்னதும் இதைத்தான்.

‘'சில ஆட்சேபகரமான வார்த்தைகளை பேசிட்டீங்களே...'’ என்று கமல் சுட்டிக் காட்டிய போது ‘'மொழிப் பிரச்னை'’ என்றார் ஷிவானியின் அம்மா. ஆனால் அதுவொரு சமாளிப்பு என்பது நன்றாகவே தெரிந்தது. ‘'ஓகே... இப்போ தெலுங்குல சப்போர்ட் பண்ணுங்களேன். நாங்க சப்-டைட்டில் போட்டுக்கறோம்'’ என்று கமல் சொன்னாலும் தமிழில்தான் பேசினார். ‘'கண்டிப்பா சொன்னாலும் அம்மாவைத் தவிர வேற யாரும் உனக்கு நல்லது சொல்லிட முடியாது'’ என்று கமலுக்கே ஒரு பன்ச்வைத்தார் ஷிவானியின் அம்மா. (அம்மாடியோவ்!).

‘போல்டா பேசணும்... பேசியிருக்கணும்’ என்று அம்மா சொன்னவுடன் ‘எனக்குத் தோணினதைத்தானே பண்ண முடியும்’ என்று பரிதாபமாக சொன்ன ஷிவானி சட்டென்று 'ஹேப்பி நியூ இயர்மா... உடம்பைப் பார்த்துக்கங்க’ என்று உரையாடலைத் துண்டிக்க முயன்றது புத்திசாலித்தனம். பிறகு ஷிவானியின் அம்மாவிடம் ‘உங்களை விமர்சனம் பண்றேன்னு நெனக்காதீங்க’ என்று கமல் விதம் விதமாக சமாதானம் பேசினாலும் அவரால் ஷிவானியின் அம்மாவை கன்வின்ஸ் செய்ய முடியவில்லை.

பிறகு மீண்டும் அகம் டிவி வழியாக உள்ளே வந்த கமல் ‘'ஷிவானி... அப்போ உங்க ரியாக்ஷன் சரியானது. உங்க மேல தப்பில்லை.. சிரிங்க.. விளையாட்டுக்குத் திரும்பி வாங்க'’ என்றெல்லாம் ஆற்றுப்படுத்திய விதம் அபாரம். ‘தங்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பையும் பிள்ளைகளின் மீது திணிப்பது முறையானதல்ல. நான் என் பிள்ளைகளை மரங்களுக்கு தண்ணீர் ஊற்றுவது போல்தான் வளர்க்கிறேன். பாதுகாப்பு தந்தால் போதும். அதுவாக வளரும். போன்ஸாய் மரங்களைப் போல் வீட்டுக்குள் வைத்து வளர்க்கக்கூடாது'’ என்றெல்லாம் பெற்றோர்களுக்கு கமல் எடுத்த கிளாஸ் அற்புதமானது.

‘'பாதிக்கப்பட்ட பிள்ளைகளின் மீதுதான் முதலில் என் கவனம் பாயும்'’ என்று கமல் சொன்னது பெற்றோர்களுக்கு மட்டுமல்ல, ஆசிரியர்களுக்கும் கூட முக்கியமானது. நன்றாகப் படிக்கும் மாணவர்களை முதல் ரேங்க்கை நோக்கி தள்ளி விடுவது மட்டும் அவர்களின் வேலையல்ல. சுமாராகப் படிக்கும் மாணவர்களை முன்னேற்றி விடுவது அதையும் விட முக்கியமான வேலை. அதுதான் ஆசிரியப்பணியின் மகத்துவமும் கூட.

'‘நடுநிலைமை, மனவுறுதி, சிதறாது இருத்தல், நெருக்கடியான சூழலிலும் வெடிக்காமல் இருத்தல்’' போன்ற காரணங்களுக்காக ஆரியை முதலில் பாராட்டிய கமல், ‘விமர்சனம் வையுங்க. தட்டிக் கேளுங்க.. தப்பில்லை. ஆனால் அதை கனிவாகவும் மரியாதையாகவும் செய்யுங்க. அப்பதான் பலன் கிடைக்கும்'’ என்று ஆரிக்கு சொன்ன அந்த அட்வைஸ்தான் இப்போது ஆரிக்கு மிக முக்கியமானது. ஆரியின் பெரிய மைனஸ் பாயின்ட்டே அதுதான்.

பிறகு ஆரியை ஓரமாக அமர்த்தி வைத்து விட்ட பிறகு அந்த நெடும் பஞ்சாயத்தை மற்றவர்களிடம் ஆரம்பித்தார் கமல். “ஆரி கிட்ட உங்களுக்கு என்னதான் பிரச்னை?”

'‘மத்தவங்களை பாராட்ட மாட்டாரு. குறை சொல்லிட்டே இருப்பாரு'’ என்று தன் குறையை முதலில் சொன்னார் ரியோ. ‘'கோபம் சட்டுன்னு வந்துடும் அதுதான் பிரச்னை’' என்றார் சோம். தகராறு நடக்கும் போது விலக்கி விட்ட சோமை பாராட்டினார் கமல். ரியோ முன்மொழிந்த அதே விஷயத்தைத்தான் மற்றவர்களும் சொன்னார்கள்.

ஆனால் மெயின் பகையாளியான பாலாஜி பக்கம் வந்தார் கமல். வீடு பெருக்கும் விஷயத்தை சரியாக செய்த பிறகும் ‘சோம்பேறி’ என்று தன்னைச் சொல்லியதை பாலாஜி எரிச்சலுடன் சொன்னார். அதென்னமோ இன்று பாலாஜியிடம் இருந்த ‘பணிவு முகமூடி’ காணாமல் போய் விட்டது. கமல் நிதானமாகச் சொல்பவற்றிற்கு கூட எரிச்சல் தொனியில் பதில் சொல்லி கமலையே சற்று சூடாக்கி விட்டார்.

‘பிக்பாஸ் டைட்டிலை ஜெயிப்பதை விடவும் ஆரியை விவாதத்தில் ஜெயிப்பதைத்தான் முக்கியம்’ என்று பாலாஜி நினைக்கிறாரா என்று தெரியவில்லை. வீடு பெருக்கும் சர்ச்சைக்காக அதன் கேப்டன் ஆஜித்தை சாட்சிக்கு அழைத்தார் கமல். ஆனால் ஆஜித்தோ தன் வழக்கமான பாணியில் மென்று முழுங்கி ‘கொஞ்சம் அட்ஜட்ஸ் பண்ணிக்கிட்டாதான் என்னவாம்' என்று ஆரியின் பக்கமே குற்றம் சாட்டினார்.

“சுத்தம்னா என்ன ஆஜித்'’ என்று கேட்ட கமல் “முழுமையாக சுத்தப்படுத்துவதுதானே முக்கியம்'’ என்று அழுத்தமாக விளக்கியது சிறப்பு.

ரம்யா பக்கம் கமல் வந்த போது அவர் ஆரியின் பாணியில் பெரிய பொழிப்புரையையே நிகழ்த்தி விட்டார். வழக்கமாக தன் புன்னகையைக் கழற்றி வைக்காமல் பேசும் வழக்கமுள்ள ரம்யா, இப்போது கமலின் விசாரணை நாளன்று கூட சூடாகி எரிச்சலுடன் பதில் சொல்லிக் கொண்டிருந்தார். எனில் ஆரி மற்றவர்களை அத்தனை டென்ஷன் செய்து கொண்டிருக்கிறாரா அல்லது மற்றவர்களின் முகமூடிகள் – ரம்யாவுடையதும் சேர்த்து – மெல்ல கழன்று கொண்டு வருகிறதா என்று பார்க்க வேண்டும்.

“இங்க டாஸ்க் மட்டுமே முக்கியமில்ல. மத்தவங்க கூட பழகறதும் முக்கியமானது. ஆரியோட நெகட்டிவிட்டி தாங்க முடியலை. பழைய விஷயங்களையும் அப்படியே ஆழ்மனதில் இன்னமும் சுமந்து கொண்டு கொட்டிக் கொண்டேயிருக்கிறார். அதனால்தான் மக்கள் பிரதிநிதியான உங்களிடம் புகார் வைக்கிறேன்'’ என்று கமலையும் இடைமறித்து சொல்லிக் கொண்டே போனார் ரம்யா. வேறு வகையான ரம்யாவை இன்று பார்ப்பது போல் இருந்தது.

இப்போது பாலாஜியின் பக்கம் வந்த கமல் ‘கடந்த சீஸன்களில் கடலை போட்டவங்க ஜெயிச்சாங்கன்னு சொன்னீங்களா?” என்று கேட்க ‘புரியலை... ஞாபகமில்லை’ என்று எரிச்சலுடன் அதை மறுத்தார் பாலாஜி. எனவே ஆஜித்தை சாட்சிக்கு கூப்பிட வேண்டியதிருந்தது. இப்போதும் ஆஜித் தயக்கமாகப் பேசினாலும் பாலாஜி சொன்னதை சரியாக சாட்சி சொன்னார்.

‘'நான் எடுத்த சினிமா கூட மக்களுக்கு சமயங்கள்ல புரியாது. அதுக்காக அவங்களை முட்டாப்பசங்கன்னு சொல்ல முடியாது. அப்புறமா அதைக் கொண்டாடியிருக்காங்க... மக்கள் தீர்ப்பை விட பெரிய ஆள் யாரும் கிடையாது. யாரை எங்கே கொண்டு போய் வெக்கணும்னு அவங்களுக்குத் தெரியும்'’ என்று அரசியல் வாசனையுடன் பேசினார் கமல்.

மக்கள் கூட்டத்திற்கு எதிராக அவர்களின் குறைகளை துணிச்சலுடன் பட்டவர்த்தனமாக சொல்லும் தலைவர்கள் இங்கு மிகக் குறைவு. அது ஒருவகையான அறுவை சிகிச்சை. அவசியமான மருத்துவமும் கூட. ஆனால் மக்களின் மனநிலைக்கு இதமாக சொறிந்து கொடுக்கும் தலைவர்கள்தான் இங்கு அதிகம்.

தன் உபதேசங்களால் மனமாற்றம் அடைந்து கொண்டிருந்த பாலாஜி மீண்டும் பழைய பாதைக்கு திரும்பி விட்ட ஆதங்கமும் அதிருப்தியும் கமலின் பேச்சில் நன்கு தெரிந்தது. ஒரு நல்ல ஆசிரியருக்கு எப்போதாவது எழும் சோர்வை கமல் அடைந்தது போல் பட்டது. அதையே விதம் விதமான வார்த்தைகளில் பாலாஜிக்கு வெளிப்படுத்தினார் கமல். சாண் ஏறி முழம் சறுக்கி விடும் மாணவனை வேதனையுடன் பார்க்கும் கரிசனம் கமலிடம் தென்பட்டது.

தான் சொன்ன மன்னிப்பை நினைவு வைத்திருக்கும் பாலாஜி, ஆரி சொன்ன மன்னிப்பை செளகரியமாக மறந்து விட்டது அல்லது சரியாக கவனிக்காத விஷயத்தை சுட்டிக் காட்டினார் கமல். இதற்காக குறும்படம் வரும் என்று நினைத்தேன். ஆனால் ஆஜித்திடம் பிறகு கேட்டு தெளிவுப்படுத்திக் கொண்டதாக பாலாஜி சொன்னதால் அதற்கு அவசியம் இல்லாமல் போய் விட்டது.

‘'வெளில வா பார்த்துக்கறேன்னு சொன்னதுக்கு ஸாரி கேட்க மாட்டேன். சார், அந்தளவிற்கு ஆரி என்னை வெறுப்பேத்திட்டார்'’ என்று பாலாஜி பிடிவாதம் பிடித்தவுடன் ‘யாமிருக்க பயமேன்’ என்று ஆரிக்கு அபய முத்திரை காட்டினார் கமல். ‘'வெளில வந்தா என்ன பண்ணிடுவீங்க... திட்டுவீங்களா... இப்பவும் அதைத்தானே பண்ணியிருக்கீங்க?” என்று கமல் மடக்கியது சிறப்பு.

பிறகு அனைவரையும் நோக்கி பேசிய கமல் “வந்தவர்கள் சொன்னதைக் கவனித்தீர்களா? ஒருவேளை ஆரியின் வளர்ச்சியைக் கண்டு அவரை அமுக்குவதற்காக ஒன்று கூடியிருக்கிறீர்களா” என்று கேட்டவுடன் ரியோ பொதுவாகப் பேச ‘'உங்க கருத்தை மட்டும் சொல்லுங்க'’ என்று கமல் கறார் காட்டியவுடன் ரியோவின் முகம் சுருங்கியது.

'‘சக போட்டியாளரின் வளர்ச்சியைப் பார்த்து தன்னுடைய தகுதியையும் அப்படியாக மேம்படுத்திக் கொள்வதுதான் சிறந்த விளையாட்டு. மாறாக அவர் ஜெயிக்கக்கூடாது என்று எண்ணுவது சிறந்த விளையாட்டு மனப்பான்மை அல்ல'’ என்பதுதான் கமல் சுட்டிக் காட்ட விரும்பியது. குறிப்பாக ஆரி ஜெயிப்பது குறித்து பாலாஜி சொன்ன விஷயம்தான் மெயின் டாப்பிக். அதற்காக மற்றவர்களிடம் சுற்றிச் சுற்றி வந்தார் கமல்.

“ஆரி ஜெயிக்கக்கூடாதுன்னு சொல்லல. ஜெயிச்சா நான் சந்தோஷப்பட மாட்டேன்னுதான் சொன்னேன்’' என்று பாலாஜி விளக்கம் அளித்தார். இதுவும் மோசமான மனோபாவம்தான். '‘தப்பான ரூட்ல வர்றீங்க –ன்னு யாராவது எச்சரிச்சா அதை ஏத்துக்கங்க... இடக்கு பேசாதீங்க'’ என்ற கமல் அதற்காக விருமாண்டி வசனத்தையும் மேற்கோள் காட்டினார்.

‘பாலாஜி பேசும் போது அவரை பேச விட்டுட்டு ஆரி பதில் சொல்ல வரும் போது பாலாஜியை கூட்டிட்டு போயிடறது என்ன மாதிரியான உத்தி?” என்று ரம்யாவையும் இடித்துரைக்க கமல் தவறவில்லை. “ஆரி கிட்ட ரெண்டே கேள்வி கேட்டுக்கறேன் சார். பதில் சொல்லட்டும்’ என்று வீடு சுத்தம் விவகாரத்தை வைத்து மீண்டும் தூசு கிளப்பினார் பாலாஜி. ‘ஓகே.. இப்ப இப்படி சாந்தமான தொனில பேசினீங்கள்ல.. இதே மாதிரி அப்பவும் பேசியிருந்தா நல்லாயிருக்குமே’ என்று பாலாஜியின் தவறை கமல் உணர வைத்த விதம் சிறப்பு. கமல் ஒரு ஆசிரியராக இருந்தால் சிறந்த ஆசிரியராக இருந்திருப்பார் என்று தோன்றுகிறது. “யார் ஜெயிச்சாலும் எனக்கு சந்தோஷம்தான். உங்களை யாருன்னே எனக்குத் தெரியாது’ என்ற கமல் அதற்கான தகுதியை வளர்த்துக் கொள்ளுங்கள் என்று உபதேசித்தது நன்று. மற்ற போட்டியாளர்கள் வைத்த புகார் பட்டியலுக்கு ஆரி பதில் அளிக்க முற்பட்ட போது ‘'உங்களின் பதில் உங்கள் நடத்தையாக இருக்க வேண்டும்'’ என்று கமல் ஆரிக்கும் உபதேசம் செய்தார். ’'90 நாள்லயும் போரிங்கா இருக்கீங்கன்னு ரம்யா சொல்றாங்க.. அதை மாத்திக்கிங்க'’ என்று ஆரியிடம் சொன்னார் கமல். ‘'உங்களிடம் ஆவேசமாகப் பேசி உங்கள் மனதை காயப்படுத்துவது என் வேலை கிடையாது'’ என்று கமல் சொன்னதில் அவரின் சிறந்த அணுகுமுறை தெரிந்தது.

‘இன்னமும் ரெண்டு வாரம்தான் பாக்கியிருக்கு. நல்லபடியா பயன்படுத்திக்கங்க. சுயமரியாதையை விட்டுத்தர வேண்டாம். ஆனால் வெற்றியை மரியாதையுடன் பெற்றுக் கொள்ளுங்கள்'’ என்ற கமல் ‘உங்களை வசைவதில் எனக்கு விருப்பமில்லை என்று உதாரணம் காட்டும் நோக்கத்துடன் '‘என்ன ஆரி... உங்களுக்கு அறிவில்லை?’' என்று சொன்னது ஒருவேளை சர்காஸ்டிக்காக சொன்னதோ என்று தோன்றியது.

கோபக்காரங்களுக்குத்தான் நல்ல நகைச்சுவையுணர்வு இருக்கும் என்று கமல் சொன்னது திருவாசகம். யார் காப்பாற்றப்படுவார்கள் என்கிற விளையாட்டிற்கு வந்த கமல் இறுதியில் ‘கேபி’ காப்பாற்றப்பட்ட செய்தியை சொல்லி விடைபெற்றுச் சென்றார்.

கமலின் உபதேசம் செய்த வேலையோ அல்லது ஃபைனல் தந்த பயமோ என்னமோ மறுபடியும் ‘அஹிம்சை’ பாணிக்கு பாலாஜி திரும்பி வந்தார். உடை மாற்றிக் கொண்டிருந்த ஆரியிடம் சென்று மன்னிப்பு கேட்டார். அப்போதும் ஆரி மற்றவர்களைப் பற்றி பேச ஆரம்பிக்க ‘'அதை விடுங்கண்ணே.. நம்மளைப் பத்தி பேசுவோம்'’ என்று இடைமறித்தது சிறப்பு. “உன் நல்லதுக்குதான் தம்பி சொல்றேன்... உன்னை அப்படியே விட்டுட்டா எனக்குத்தான் பலம்’' என்று ஆரி சொன்னதும் பரஸ்பரம் இருவரும் சமாதானம் ஆனார்கள்.

இது அப்படியே நீடிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். ஆனால் வெளியில் வந்த ஆரி வானத்தை நோக்கி உரக்க கத்தி தன் ஸ்ட்ரெஸ்ஸை போக்கிக் கொள்ள முயன்றார். இது என்ன மாதிரியான யோகா என்று தெரியவில்லை. ‘ஹைடெஸிபலாசனம்’ என்ற பெயராக இருக்கலாம்.

இந்த வாரம் ‘Juke box’ வெளியேறவிருப்பதாக ஒரு தகவல் வந்திருக்கிறது. ‘என் ரசிகர்கள் என்னிடம் நிறைய எதிர்பார்த்தார்கள்’ என்று சொல்லிக் கொண்டிருந்தவர் வெளியேறுகிறார். பாவம்... அவரின் இயல்பிற்கு ஏற்பதான் அவர் அங்கு நடந்து கொண்டார். மூன்றாவது வாரத்திலேயே வெளியேறி இருக்க வேண்டியவர், அதிர்ஷ்ட அட்டையால் அப்போது தப்பி விட்டார். இனி ஷிவானியும் வெளியேறினால் ஆட்டம் சூடுபிடிக்கும்.

அடுத்த சீஸனிலாவது டிவி பிரபலம் என்கிற காரணத்திற்காகவே எல்கேஜி பிள்ளைகளை அழைத்து வராமல் தகுதியுள்ள போட்டியாளர்களை வைத்து போட்டியை நடத்தினால் ஒட்டு மொத்த சீஸனுமே சுவாரஸ்யமாக நிகழும் என்று தோன்றுகிறது.



source https://cinema.vikatan.com/bigg-boss-tamil/bigg-boss-tamil-season-4-episode-90-highlights

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக