‘காசுக்கேற்ற தோசை’ என்பதுபோல், ஆரம்பத்தில் காசு எக்ஸ்ட்ரா கொடுத்தால்தான், காரில் காற்றுப்பை கிடைக்கும். அதாவது, டாப் வேரியன்ட்டில் மட்டும்தான் காற்றுப் பை வந்தது. அதன் பிறகு, நடப்பு பாதுகாப்பு விதிகளின்படி டிரைவருக்கு மட்டும் ஏர்பேக் அவசியம் என்ற நல்ல விஷயத்தைக் கொண்டு வந்தார்கள். ‘'அப்போ டிரைவருக்குப் பக்கத்தில் உட்கார்ந்திருக்கவங்க நிலைமை?'’ என்று இனிமேல் கேட்க முடியாது. இனிமேல் அவர்களுக்கும் காற்றுப்பையைக் கட்டாயமாக்க முடிவு செய்துவிட்டது மத்திய அரசு.
ஏப்ரல்–1, 2021–க்குப் பிறகு தயாரிக்கப்படும் கார்களில் நிச்சயம் கோ–டிரைவர் சீட்டுக்கு எதிரே காற்றுப் பைகள் இருக்க வேண்டும் என்று, மத்திய போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் டிராஃப்ட் வெளியிட்டு விட்டது. இதுவே நடப்பு மாடல்கள் என்றால், ஜூன்–1–க்குப் பிறகு இதைக் கட்டாயமாக்க வேண்டும் என்றும் அந்த டிராஃப்ட்டில் இருக்கிறது. கார் நிறுவனங்களின் ஸ்டேக் ஹோல்டர்கள் இது பற்றிய தங்கள் ஐடியாக்களை, இன்னும் 30 நாட்களில் தெரிவிக்கலாம் என்றும் சொல்லியிருக்கிறது மத்திய அரசு.
2019, செப்டம்பருக்குப் பிறகு டிரைவர் காற்றுப் பை மற்றும் ஏபிஎஸ், ஸ்பீடு அலெர்ட் சிஸ்டம் (80–க்கு மேல் போனால் பீப் அலாரம்), டிரைவருக்கும் கோ–டிரைவருக்கும் சீட் பெல்ட் ரிமைண்டர், ரிவர்ஸ் பார்க்கிங் அலெர்ட் சிஸ்டம், சென்ட்ரல் லாக்கிங் சிஸ்டத்துக்கு Manual Override அலெர்ட் (எலெக்ட்ரிக்கல் சிஸ்டம் ஃபெயிலியராகும் பட்சத்தில் கார் கதவுகள் திறந்து கொள்ளும்) போன்ற சில பாதுகாப்பு விஷயங்களை ஏற்கெனவே கட்டாயமாக்கி இருக்கிறது மத்திய அரசு.
இதில் ஸ்பீடு அலெர்ட்டுக்கு மட்டும்தான் நெகட்டிவ் கமென்ட்டுகள் வந்து கொண்டிருக்கின்றன. ‘80–க்கு மேல் போனால், அலாரம் தொந்தரவா இருக்கு’ என்று பவர்ஃபுல் கார் வைத்திருப்பவர்கள், குறைபட்டுக் கொண்டாலும், மற்ற பாதுகாப்பு வசதிகளுக்கு நல்ல வரவேற்பு இருக்கத்தான் செய்கிறது. இப்போது கோ–டிரைவருக்கும் காற்றுப் பை அவசியம் என்பதும் வரவேற்ககத்தக்க விஷயம்தான்.
நடப்பிலேயே மாருதி ஆல்ட்டோ, எஸ்–ப்ரெஸ்ஸோ, செலெரியோ, வேகன்–ஆர், ஹூண்டாய் சான்ட்ரோ, ரெனோ க்விட், டட்ஸன் ரெடி கோ, மஹிந்திரா பொலேரோ போன்ற கார்களின் ஆரம்ப வேரியன்ட்களில், கோ–டிரைவர் காற்றுப்பை ஆப்ஷனலாகத்தான் இருக்கின்றன. இதற்கு எக்ஸ்ட்ரா ஆன்ரோடு விலை வரும்.
இனி லோ வேரியன்ட்களிலும் இரண்டு காற்றுப்பைகள் இருக்கும் என்பது மகிழ்ச்சிதான். அதேநேரம், இதனால் கார்களின் புரொடக்ஷன் காஸ்ட் எகிறும் என்பதால், கார்களின் ஆன்ரோடு விலையும் நிச்சயம் எகிறும் என்பதையும் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.
‘முன் சீட்காரங்கள்லாம் சேஃப்டி ஆகிட்டீங்க... அப்படியே பின்னாடி உட்கார்ந்திருக்கிறவங்களையும் கொஞ்சம் கவனிங்க’ என்று பின் சீட் காரர்கள் சொல்வதும் கேட்கிறது.
source https://www.vikatan.com/automobile/mandatory-airbags-for-passengers-in-front-seats-of-vehicles
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக