வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாகச் சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில், இன்று காலை முதல் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. சென்னையை ஒட்டியுள்ள திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களிலும் தொடர் மழை பெய்து வருகிறது.
கனமழை காரணமாக செம்பரம்பாக்கம், புழல் ஏரியிகளிலிருந்து உபரி நீர் வெளியேற்றப்படவுள்ளது. இதனால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக அடுத்த 24 மணிநேரம் தமிழகத்தின் ஏழு மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்துள்ளார். ``சென்னை, விழுப்புரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் ஆகிய 7 மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்" என்று அவர் கூறினார்.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் பெய்துவரும் மழை ஆறு மணிநேரத்துக்கு நீடிக்கும் - வானிலை ஆய்வு மையம்
தொடர்ந்து பேசிய அவர், ``கடலோர மாவட்டங்களில் மிதமானது முதல் லேசான மழை பெய்யக்கூடும். நாகை, விழுப்புரம், மயிலாடுதுறை, நீலகிரி, கடலூர் ஆகிய ஐந்து மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மீனவர்கள் கடலுக்குச் செல்ல எச்சரிக்கை எதுவும் இல்லை. கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக சென்னை, செங்கல்பட்டு, மதுராந்தகம் பகுதிகளில் தலா 6 செ.மீ மழைப் பதிவாகியுள்ளது. தரமணி, கேளம்பாக்கம், அண்ணா பல்கலைக்கழகம், திண்டிவனம் பகுதிகளில் 5 செ.மீ மழைப் பதிவாகியுள்ளது" என்று தெரிவித்தார்.
source https://www.vikatan.com/news/disaster/heavy-rain-warning-for-seven-districts-in-tamil-nadu
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக