` பா.ஜ.க தலைமைதான் தமிழகத்தின் முதல்வர் வேட்பாளரை அறிவிக்கும்' என மாநில பா.ஜ.க தலைவர் முருகன் கூறியதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், ``எங்களின் முதல்வர் வேட்பாளரை ஏற்கவில்லை என்றால் சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க தனியாகத் தான் போட்டியிட வேண்டும்'' என அ.தி.மு.க முன்னாள் எம்.பி அன்வர் ராஜா தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணி தொடரும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் பன்னீர்செல்வமும் அரசு விழாவில் அமித் ஷா முன்னிலையில் போட்டி போட்டுக் கொண்டு அறிவித்தனர். இதனிடையே சட்டமன்ற தேர்தலில் இம்முறை அ.தி.மு.க கூட்டணியில் அதிக இடங்களை பெறும் வகையில் பா.ஜ.க நெருக்கடிகளை கொடுத்து வருகிறது. இதனை வலியுறுத்தும் வகையில் அ.தி.மு.க கூட்டணியில் யார் முதல்வர் வேட்பாளர் என்பதை பா.ஜ.க-தான் முடிவு செய்யும் என அக்கட்சியின் தலைவர்கள் ஆங்காங்கே பேசி வருகின்றனர்.
Also Read: `கூட்டணி தொடரும்; முதல்வர் வேட்பாளரை பா.ஜ.க தேசியத் தலைமை அறிவிக்கும்!’ - எல்.முருகன் அதிரடி
இந்நிலையில் நேற்று அரியலூரில் செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ.க மாநிலத் தலைவர் முருகன், ''சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க- பா.ஜ.க கூட்டணி தொடரும். ஆனால், முதல்வர் வேட்பாளரை அ.தி.மு.க முடிவு செய்தாலும் பா.ஜ,க தான் அதனை அறிவிக்கும்” என்றும் ``தேர்தலை யாருடைய தலைமையில் சந்திப்பது என்பது குறித்தும் பா.ஜ.க தான் முடிவெடுக்கும்'' என தெரிவித்துள்ளார்.

அ.தி.மு.க-வின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி என முடிவு செய்யப்பட்டு, அவரும் தனது தேர்தல் பிரசாரத்தை நேற்று தொடங்கினார். இந்நிலையில், பா.ஜ.க மாநில தலைவர் முருகன் இவ்வாறு தெரிவித்தது அ.தி.மு.க-வினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்நிலையில், ''முருகனின் இந்த கருத்து ஏற்புடையதல்ல'' என அமைச்சர் ஜெயக்குமார் கருத்து தெரிவித்துள்ளார். எல். முருகனின் கருத்துக்கு பதில் அளித்துள்ள அ.தி.மு.க முன்னாள் எம்.பி-யும், அக்கட்சியின் சிறுபான்மை பிரிவு மாநில செயலாளருமான அன்வர் ராஜா, ''எங்கள் கட்சி அறிவித்துள்ள முதல்வர் வேட்பாளரை ஏற்பவர்கள் தான் அ.தி.மு.க கூட்டணியில் இருக்க முடியும். அப்படி ஏற்கவில்லை என்றால் பா.ஜ.க தனியாக களம் காண வேண்டியது தான்'' என ஆக்ரோஷமாக தெரிவித்துள்ளார். அன்வர் ராஜாவின் இந்த கருத்து அ.தி.மு.க- பா.ஜ.க கட்சி தொண்டர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
source https://www.vikatan.com/news/politics/if-our-chief-ministerial-candidate-is-not-accepted-let-the-bjp-contest-alone-anwar-raja
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக