தமிழகத்தில் கடந்த ஆண்டு கொரோனா தொற்று உச்ச நிலைக்கு சென்றபோது ஒருநாளில் அதிகபட்சமாக ஜூலை 27 அன்று 6,993 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். ஊரடங்கு உள்பட பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்ததன் மூலம் படிப்படியாக பெருந்தொற்று குறைய ஆரம்பித்தது. கடந்த சில மாதங்களாக, தினசரி கொரோனா தொற்றுக்கு ஆளாவோரின் எண்ணிக்கை 500-க்கும் குறைவாகவே இருந்தது. இப்போது திடீரென அந்த எண்ணிக்கை 1,000-ஐ தாண்டியுள்ளது. இது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
முதலில் சென்னையில் அதிகரிக்கத் தொடங்கிய கொரோனா தொற்று, தற்போது கோவை, செங்கல்பட்டு, திருவள்ளூர், தஞ்சாவூர் உள்ளிட்ட பகுதிகளிலும் பரவிவருகிறது. தமிழகத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை நான்காயிரத்துக்கும் குறைவாக இருந்துவந்தது. அது தற்போது, 5,000-ஐ தாண்டியுள்ளது.
தற்போது மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், கேரளா உள்ளிட்ட சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு மிக அதிகமாக இருக்கிறது. ஆரம்பத்தில் மேற்கொள்ளப்பட்டதைப் போல மாநில எல்லைகள் மூடல் போன்ற நடவடிக்கைகளோ, ரயில் நிலையங்களிலும் விமான நிலையங்களிலும் தீவிர சோதனை போன்ற நடவடிக்கைகளோ தமிழகத்தில் இப்போது இல்லை.
கொரோனா பெருந்தொற்று பெரும்பாலும் குறைந்துவிட்டது என்றாலும், இன்னும் முழுமையாக அது நீங்கவில்லை. இத்தகைய சூழலில், பெரும்பாலான மக்கள் முகக்கவசம் அணிவது இல்லை. திருமணம் போன்ற மக்கள் அதிகமாகக் கூடுகிற நிகழ்ச்சிகளிலும்கூட பலரும் முகக்கவசம் அணிவதில்லை.
தற்போது தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான பரப்புரை தீவிரமாக நடைபெற்றுவருகிறது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தி.மு.க தலைவர் ஸ்டாலின், மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் உள்ளிட்ட தலைவர்கள் செல்லும் இடங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடுகிறார்கள். அவர்களில் பெரும்பாலோர் முகக்கவசம் அணிவதில்லை. தனிமனித இடைவெளி என்பதும் சுத்தமாகக் கிடையாது.
வாக்குசேகரிப்பில் ஈடுபட்ட ஸ்டாலின், ‘அனைவரும் முகக்கவசம் அணியுங்கள்’ என்று தொண்டர்களைக் கேட்டுக்கொண்டார். பல நேரம் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் பிரசாரத்தின்போது முகக்கவசம் அணிவதில்லை. அதைக் குறிப்பிட்ட ஸ்டாலின், ‘நான் போதுமான இடைவெளியுடன் இருப்பதால் முகக்கவசம் அணியவில்லை’ என்று தன்னிலை விளக்கம் அளித்தார்.
கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் பத்து மாதங்களுக்கும் மேலாக பள்ளிகள் மூடப்பட்டிருந்தன. கடந்த ஜனவரி மாதம் முதல் பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டு, 9-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவா்களுக்கு வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.
கடந்த சில நாள்களாக தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருவதால், மாணவா்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பிளஸ் 2 வகுப்பைத் தவிர்த்து பிற வகுப்பு மாணவா்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்று ஆசிரியா் அமைப்புகள் வலியுறுத்தின. இந்த நிலையில், தஞ்சாவூர் உள்பட சில பகுதிகளில் பள்ளி மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பெற்றோருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் பத்துக்கும் மேற்பட்ட பள்ளிகளில் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. மகளிர் மேல்நிலைப் பள்ளி ஒன்றில் 400 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் 56 மாணவிகளுக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டது. ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஒன்றில் ஆய்வக உதவியாளர் ஒருவருக்கும், அரசு உதவிபெறும் பள்ளி ஒன்றில் இரண்டு ஆசிரியர்கள் மற்றும் ஒரு மாணவிக்கும், இரண்டு தனியார் பள்ளிகளில் 27 மாணவர்களுக்கும் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது.
மொத்தத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தில் 140 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு, அவர்களில் பெரும்பாலோர் குணமடைந்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஓர் அரசு மேல்நிலைப் பள்ளியில் மூன்று மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது.
Also Read: 'நீயா நானா, பாட்டுக்கு பாட்டு’ ஸ்டாலின் - எடப்பாடி தேர்தல் பிரசார அட்ராசிட்டிகள்! முந்துவது யார்?
இது குறித்து பள்ளிக்கல்விக்கான மாநில மேடையின் பொதுச்செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபுவிடம் பேசியபோது, “ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கும் ஒரு பள்ளியில் சிலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது என்றால், அதை வைத்து பதற்றத்தை ஏற்படுத்தக்கூடாது. அங்கு கொரோனா தொற்று எப்படி ஏற்பட்டது என்ற காரணத்தைக் கண்டறிந்து சொல்ல வேண்டும். கொரோனா வைரஸைப் பொருத்தவரையில், நோய் எதிர்ப்பு சக்தி இருந்தால் பயப்பட வேண்டியதில்லை.
எனவே, நோய் எதிர்ப்பு சக்திக்கு ஊட்டச்சத்து மிகுந்த உணவு அவசியம். பள்ளி மாணவர்களுக்கு அப்படியான உணவு வழங்கப்படுவதை அரசு உத்தரவாதம் செய்திருக்கிறதா? காலையிலும் மாணவர்களுக்கு பள்ளிகளில் சத்துமிக்க உணவு வழங்கப்படுகிறதா? தடுப்புக்கான பாதுகாப்பு என்ன? சுகாதாரத்தை மேம்படுத்த என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்கிற கேள்விகளுக்கு தமிழக அரசு பதில் சொல்ல வேண்டும்” என்றார்.
இது குறித்து பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகளிடம் பேசியபோது, “பள்ளிக்கூடங்களில் கொரோனா பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கொரோனா தொற்று ஏற்பட்ட மாணவர்களுடன் தொடர்பில் இருந்த கிராமங்கள் தொடர் கண்காணிப்பில் இருக்கின்றன” என்றனர்.
கொரோனா லாக் டெளனிலிருந்து விடுபட்டு மக்கள் அன்றாடத் தேவைகளுக்காக பொது இடங்களுக்கு வருவதும் மக்களோடு மக்கள் கலந்து பழகுவதும் தேவைதான். ஆனால் மாணவர்கள் கூடும் பள்ளிகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அரசு மற்றும் ஆசிரியர்களின் கடமையாகும். மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல், மாற்று வழிகளை கல்வியாளர்களைக் கலந்தாலோசித்து ஏற்படுத்துதல் என்று துரித கதியில் அரசு இயந்திரம் செயல்பட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகவும் இருக்கிறது.
இந்தநிலையில், 9, 10, 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை அறிவித்து தமிழக அரசு நேற்று உத்தரவிட்டது. அடுத்த உத்தரவு வரும்வரை விடுமுறை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விடுமுறை அளிக்கப்பட்டுள்ள மாணவர்களுக்கு ஆன்லைன் முறையில் வகுப்புகள் தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில், 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் வழக்கம்போல நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
source https://www.vikatan.com/government-and-politics/politics/corona-spreads-in-tamilnadu-schools-what-was-government-doing
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக