சீர்காழி அருகே பழையாறு மீனவக் கிராமத்தில் புரேவி புயல் மற்றும் கனமழையிலிருந்து விசை படகுகளைப் பாதுகாக்க பக்கிங்காம் கால்வாயில் நிறுத்தியிருந்தனர் உரிமையாளர்கள். இந்நிலையில் விசைப்படகுகளில் மழைநீர் புகுந்ததால் படகுகளின் எஞ்சின் மற்றும் டைனமோக்கள் பழுதடைந்தன. இதனால் ஏற்பட்டுள்ள நஷ்டத்தை எண்ணி மீனவர்கள் பெரிதும் கவலையடைந்துள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே பழையாறு மீனவக் கிராமத்தில் அமைந்துள்ள மீன்பிடித் துறைமுகத்தில் சுமார் 350 விசைப்படகுகள் மற்றும் 500 க்கும் மேற்பட்ட பைபர் படகுகள் மூலம் மீனவர்கள் மீன்பிடித் தொழில் செய்து வருகின்றனர். இதன் மூலம் நாள் ஒன்றுக்கு ரூ. 1 கோடிக்கு மேல் வர்த்தகம் நடைபெறும். தற்போது அதிகரித்துள்ள படகுகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப துறைமுகத்தில் இடவசதி இல்லை.
சாலைகள், ஏலக் கூடங்கள், படகுக் கட்டும் தளம் ஆகியவை பழுதடைந்துள்ளன. ஐஸ் பிளான்ட் பழுதடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. கழிவு நீர் கால்வாய்கள் இல்லை. படகுகள் அனைத்திற்கும் ஒரே பங்கில் டீசல் வாங்க வேண்டிய நிலை உள்ளது. இதனால் பேரிடர் காலங்களில் மீனவர்கள் தங்களது படகுகளை அருகிலுள்ள பக்கிங்காம் கால்வாயில் நிறுத்துகின்றனர். இவ்வாறு நிறுத்தப்படும் படகுகளை மீனவர்கள் குழு அமைத்து பாதுகாக்கின்றனர். சமீபத்தில் வந்த புரேவி புயல் மற்றும் கனமழையிலிருந்து பாதுகாக்க மீனவர்கள் தங்கள் படகுகளை பக்கிங்காம் கால்வாயில் நெருக்கமாக நிறுத்தியுள்ளனர். தொடர்ந்து பெய்த அதீத கனமழையால் படகுகளில் மழைநீர் புகுந்து எஞ்சின் மற்றும் டைனமோக்கள் பழுதடைந்ததுடன், ஒன்றுடன் ஒன்று மோதி சிறுசிறு சேதமடைந்துள்ளன.
இதுபற்றி பழையாறு மீனவர்கள் சிலரிடம் பேசினோம். "சேதமான படகுகளுக்கு தலா ரூ. 2 லட்சம் முதல் 3 லட்சம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இந்த நஷ்டத்தால் நாங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளோம். தொடர்ந்து படகுகளில் இருந்து தண்ணீரை மோட்டார் மூலம் வெளியேற்றி வருகிறோம்.
எங்கள் படகுகளை பேரிடர் காலங்களில் பாதுகாப்பாக நிறுத்துவதற்கு வசதியாக பக்கிங்காம் கால்வாயின் இரு கரைகளிலும் வார்ப்புகள் அமைத்துத் தரவேண்டும், துறைமுக சாலைகள், படகு கட்டும் தளம் ஆகியவற்றை சீர்செய்து, புதிய ஏலக்கூடம், ஐஸ் பிளான்ட் அமைத்துத் தரவேண்டும். அனைத்து படகுகளுக்கும் டீசல் பிடிக்க வசதியாக மேலும் ஒரு டீசல் பங்க் அமைத்துத் தர வேண்டும். பல நாட்களாக ஏற்பட்டுள்ள தொழில் பாதிப்புக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்” என்றனர்.
source https://www.vikatan.com/news/tamilnadu/because-of-heavy-rain-boat-was-damaged
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக