அமெரிக்காவுக்கும் இரானுக்கும் இடையே சில வருடங்களுக்கு முன்பு அணு ஆயுதம் தொடர்பான பிரச்னை நிலவி வந்தது. இதை முன்னிறுத்தி இரு நாட்டுத் தலைவர்களும் ஒருவருக்கொருவர் மாறி மாறி கருத்துகளின் மூலம் பனிப்போர் நடத்தி வந்தனர். ஒரு கட்டத்தில் இரு நாடுகளுக்கும் இடையேயான பிரச்னை உச்சத்தை அடைந்தபோது 2018-ம் ஆண்டு இரான் மீது கடுமையான பொருளாதாரத் தடை விதித்தார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். இதனால் பிற நாடுகளும் இரானுக்கு உதவி செய்யத் தயங்கின.
அதே 2018-ம் ஆண்டு சீனாவைச் சேர்ந்த ஹூவாய் (huawei) நிறுவனத்தின் முதன்மை நிதி அதிகாரி மெங் வான்சூ (Meng Wanzhou) இரான் மீது விதிக்கப்பட்டுள்ள அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளை மீறியதாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டது. அப்போது மெங் வாங்சூ கனடாவிலிருந்துள்ளார், அமெரிக்க அதிகாரிகளின் வேண்டுகோளின்படி கனடா அரசு, மெங் வாங்சூவை கைது செய்தது. பின்னர் கனடாவில் இருக்கும் அவரை தங்கள் நாட்டுக்குக் கொண்டுசெல்லும் பணிகளில் அமெரிக்க அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
Also Read: `ரகசியமாகச் சிறை, மரண தண்டனையால் பதற்றம்!’-சீனா முடிவால் கொதிக்கும் ஆஸ்திரேலியா
மெங் வாங்சூ கைது செய்யப்பட்ட அடுத்த சில நாள்களில் கனடாவின் குடிமக்களான கோவிர்க், மைக்கேல் ஸ்பாவோர் ஆகிய இருவரும் சீன அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டனர். தங்கள் நாட்டில் உளவு பார்த்ததாக இருவர் மீதும் குற்றம் சுமத்தப்பட்டது. மெங் வான்சூ கைது செய்யப்பட்டதுக்குப் பதிலடியாகக் கனட குடிமக்களைச் சீன அரசு தடுத்து வைத்துள்ளதாகப் பரவலாக அனைவரும் குற்றம் சாட்டினர். அது முதலே கனடாவுக்கும் சீனாவுக்கும் இடையே பிரச்னை நிலவி வருகிறது. மெங் வான்சூ, விடுதலை செய்யப்பட்டால் மட்டுமே கனடா நாட்டினர் இருவம் விடுவிக்கப்படுவார்கள் எனச் சீனா மிரட்டுவதாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில் சமீபத்தில் இந்த பிரச்னை தொடர்பாக மீண்டும் சீனா, கனடாவுக்கு அழுத்தம் கொடுத்துள்ளது. சீனாவில் இருக்கும் 2 கனடியர்களை விடுதலை செய்ய வேண்டுமானால், மெங் வான்சூவின் விடுதலைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் எனக் கூறியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதை கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ முழுவதுமாக ஏற்க மறுத்துள்ளார். இது ‘பணயக் கைதிகளை வைத்து மிரட்டும் சீனாவின் ராஜதந்திரத்தை அம்பலப்படுத்துகிறது’ என விமர்சித்துள்ளார்.
Also Read: 1962 முதல் 2020 வரை இந்தியா - சீனா எல்லையில் என்ன நடந்தது? ஒரு விரிவான அலசல்!
இந்த விவகாரம் தொடர்பாக ட்ரூடோ பேசும்போது, ``கனடா, கனடா அரசிடமிருந்து ஏதேனும் பெறுவதற்கு, நம் மக்களைக் கைது செய்வது சிறந்த வழியாக இருக்கும் எனச் சீன அரசு முடிவு செய்தால், பின்பு கனடியர்கள் யாரும் பாதுகாப்பாக இருக்க மாட்டார்கள். நம் நாட்டை கட்டுப்படுத்துவதற்காகப் பிற நாடுகள் கனட மக்களைக் கைது செய்யத் தொடங்குவார்கள். கனட மக்களை கைது செய்தால் எதுவும் நடக்காது என்பதைச் சீனாவுக்கு நிரூபிக்க வேண்டும். மேலும், எங்கள் நாட்டு நீதி சுதந்திரத்துக்கு எதிரான இதை முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாது” என்று கூறியுள்ளார்.
இதனால் கனடா, ஹாங்காங்குடன் செய்திருந்த ராணுவ தளவாடப் பொருள்களின் ஏற்றுமதிக்குத் தடை விதித்துள்ளார் ட்ரூடோ. ஹாங்காங்குக்கு ஏற்றுமதி செய்யப்படும் அனைத்துப் பொருள்களும் சீனாவுக்கும் சொந்தமானவை எனக் கனடா கருதுவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இது உடனடியாக நடைமுறைக்கு வரும் எனவும் தெரிவித்துள்ளார். கனடா அரசின் இந்தத் தடை அந்நாட்டு நீதி சுதந்திரத்துக்கான ஒரு முக்கிய படி எனக் கனடாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
source https://www.vikatan.com/news/international/canada-suspended-the-extradition-treaty-with-hong-kong
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக