Ad

சனி, 19 டிசம்பர், 2020

`முதலையாகக் கூட மாறலாம்; தடுப்பூசி போட்டுக்கொள்ள மாட்டேன்!' - பிரேசில் அதிபர் சர்ச்சை பேச்சு

அமெரிக்க நிறுவனம் ஃபைசர், ஜெர்மனியின் பயோ-என்-டெக் நிறுவனம் உருவாக்கிய தடுப்பூசியை அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகள் அனுமதித்து முதற்கட்ட தடுப்பூசி போடும் பணி தொடங்கியுள்ளது.

பிரேசில் 7.1 மில்லியனுக்கும் அதிகமான பாதிப்பையும், கிட்டத்தட்ட 1,85,000 இறப்புகளையும் கோவிட் -19 காரணமாக பதிவு செய்துள்ளது. மரணங்களின் எண்ணிக்கையில் உலகின் இரண்டாவது மிக உயர்ந்த தேசிய எண்ணிக்கையாகும். இந்நிலையில் தடுப்பூசி முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. பிரேசில் தடுப்பூசியின் சோதனைக்களமாகவும் இருந்து வருகிறது.

2021 ஆம் ஆண்டில் 350 மில்லியன் கொரோனா வைரஸ் தடுப்பூசிகளை வாங்க அந்த அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதில் 210 மில்லியன் ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியில் பெரும்பாலனவை பிரேசிலின் ஃபியோகிரூஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்படுகிறது. 70 மில்லியன் ஃபைசரின் தடுப்பூசி மற்றும் சர்வதேச கூட்டு நிறுவனமான கோவாஸ் தயாரித்த 42 மில்லியன் தடுப்பூசியும் அடங்கும்.

இந்நிலையில் பிரேசில் அதிபர் போல்சனாரோ புதன்கிழமை(16.12.20) ஒரு வெகுஜன நோய்த்தடுப்பு பிரசாரத்தை தொடங்கினார். 16 மாதத்திற்குள் 70 சதவீத மக்களுக்கு தடுப்பூசி போடுவதை நோக்கமாகக் கொண்டது அது. ஆனால் அதிபர் தனது சொந்த திட்டத்தை பலமுறை நாசப்படுத்திருப்பதாக விமர்சிக்கப்பட்டார். இந்நிலையில் வியாழன்(17.12.20) அன்று பிரேசில் நாட்டிற்கு தடுப்பூசி வாங்க 20 பில்லியன் ரைஸை (3.9 பில்லியன் டாலர்) ஒத்துக்குவதாக போல்சனாரோ செய்தி வெளியிட்டார்.

அதைத் தொடர்ந்து நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய போல்சனாரோ, 'இந்த தடுப்பூசியால் எந்தவொரு பக்க விளைவுகளுக்கும் நாங்கள் பொறுப்பல்ல என்று பைசர் நிறுவன ஒப்பந்தம் தெரிவிக்கிறது. அந்த தடுப்பூசியால் நீங்கள் தனித்துவ மனிதராக மாறினால், ஒரு பெண்ணுக்கு தாடி வளர தொடங்கினால், அல்லது ஒரு ஆண் ஒரு பெண் குரலில் பேச ஆரம்பித்தால், அவர்களுக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இருக்காது. நீங்கள் ஒரு முதலையாக மாறினால், அது உங்கள் பிரச்னை. இது பெரும் பின்விளைவைக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது' என்று மருந்து உற்பத்தியாளர்களைச் சாடி கருத்து தெரிவித்துள்ளார்.

இந்த செய்தி வெளியாகிய தினம் அங்கு 1,000 உயிரிழப்புகள் பதிவாகியது. இது செப்டம்பர் மாதத்தில் இருந்து கண்டிராத அதிகபட்ச எண்ணிக்கையாகும். இன்னும் தடுப்பூசிகள் வாங்கப்படாத, விநியோகிக்கப்படாத நிலையிலும் அதிபரின் இந்த கருத்து மக்களிடையே ஒரு பீதியை ஏற்படுத்தியுள்ளது.

டேட்டாஃபோஹாவின் கருத்துக் கணிப்பின்படி, கோவிட் -19 தடுப்பூசி போடத் தயாராக உள்ளவர்களின் எண்ணிக்கை ஆகஸ்டில் இருந்த 89 சதவீதத்திலிருந்து 73 சதவீதமாகக் குறைந்துள்ளது.

மேலும் புதன்கிழமை நோய்த்தடுப்பு பிரச்சாரத்தைத் தொடங்கும்போது, ​​போல்சனாரோ, ``இந்தத் தடுப்பூசியானது அனைத்து மக்களுக்கும் இலவசமாக வழங்கப்படும், ஆனால் கட்டாயமில்லை' என்று கூறினார். ஆனால் வியாழக்கிழமை உச்சநீதிமன்றம் தடுப்பூசி "கட்டாயமானது, இருப்பினும் அதை மக்கள் மீது திணிக்க கூடாது. அதாவது அதிகாரிகள் தடுப்பூசி போடாததற்காக மக்களை சில பொது இடங்களிலிருந்து தடை செய்யலாம், ஆனால் அதை எடுக்கும்படி கட்டாயப்படுத்தக்கூடாது” என்று தீர்ப்பளித்தது.

இதனிடையே அதிபர், 'நான் இந்த தடுப்பூசியை போடமாட்டேன்' என்று கூறியது பெரும் சர்ச்சைக்கு உள்ளானது. அதற்கு பதிலளித்த போல்சனாரோ, 'நான் மக்களுக்கு ஒரு மோசமான உதாரணமாக இருக்கிறேன் என்று சிலர் கூறுகிறார்கள். ஆனால் அப்படி சொல்பவர்களுக்கு, நான் ஜூலை மாதமே வைரசால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டிருக்கிறேன். எனக்கு எதிர்ப்புசக்தி உள்ளது. எனவே நான் ஏன் தடுப்பூசி போட வேண்டும்?' என்று விளக்கமளித்தார்.

தொற்று வந்து மீண்ட ஒரு மனிதருக்கு எவ்வளவு காலத்திற்கு எதிர்ப்பு சக்தி இருக்கும், மீண்டும் வரும் வாய்ப்புகள் எவ்வளவு, அதிலிருந்து மீளும் திறன் எவ்வளவு, தடுப்பூசிகள் எவ்வளவு பலனலிக்கும் என்று எதுவுமே நிலையாக சொல்ல முடியாத நிலையில் போல்சனாரோ அளித்துள்ள பதில்கள் பிரேசில் மக்களிடையே பதற்றத்தையும், அவர் மீதான சர்ச்சையையும் அவநம்பிக்கையுமே ஏற்படுத்தியுள்ளது.



source https://www.vikatan.com/government-and-politics/international/covid-19-vaccine-can-turn-people-into-crocodiles-said-by-brazilian-president

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக