கிறிஸ்துமஸ் சமயம் என்பதால் போட்டியாளர்களை பிக்பாஸ் அதிகம் வாட்டி வதைக்கவில்லை. (தலைவர் போட்டி தவிர). பரிசு மழை, கேக், பிரியாணி என்று ஒரே கொண்டாட்டம்தான். பிரியாணியைப் பார்த்த எஃபக்ட்டிலோ, என்னவோ பாலாஜி மனம் திருந்தி விக்ரமன் படத்தின் நாயகனைப் போல நெகிழ ஆரம்பித்து விட்டார்.
ஆனால் ‘இது வேற வாய். அது நாற வாய்’ கான்செப்ட்டில் மறுபடியும் பழைய பாலாஜியாக மாற அதிகம் வாய்ப்புண்டு. அடுத்த வாரம் ஆரி கேப்டனின் தலைமையில் வீடு இயங்கும் என்பதால் ஆக்ரோஷமான சண்டைகளுக்கு இப்போதே உத்தரவாதம் தரலாம்.
துணி துவைக்கும் பிரஷ்ஷை ஒருவருக்கு பரிசாக தரும் விநோதத்தை இப்போதுதான் கேள்விப்படுகிறேன். சரி, அதைக் கூட அன்பு என்று எடுத்துக் கொள்ளலாம். ஆனால் அனிதா அதற்கு அளித்த விளக்கம் இருக்கிறதே.. அப்போதுதான் காதில் ரத்தம் வந்து விட்டது. அதற்குத்தான் buds தேவைப்பட்டது.
ஓகே. நாள் 82-ல் என்ன நடந்தது?
81-ம் நாளின் தொடர்ச்சி. நள்ளிரவு சமயம். கிறிஸ்துமஸ் என்பதால் ஒவ்வொரு போட்டியாளரும் சக போட்டியாளருக்கு பரிசுகள் தரலாமாம். ஆனால் இது ரகசியமாக இருக்க வேண்டும் என்று பிக்பாஸ் அறிவிக்க அனிதா வித்தியாச வடிவத்தில் வாயை வைத்து ஆச்சரியப்பட்டார். ஆளாளுக்கு கையில் கிடைத்த துணியை கிழித்துக் கொண்டிருந்தார்கள். அனிதா எதையோ ஒளித்து வைத்து செய்து கொண்டிருக்க, சோம் அந்தப் பக்கம் தற்செயலாக வர, அனிதா தன் பாணியில் ‘'அய்யாங்... நான் செய்யறத பார்க்காத'’ என்று சிணுங்கினார். ‘'இது வேற...எனக்கு வேற வேலை இல்ல?!'’ என்றபடி சோம் விலகிச் சென்றார்.
யார், யாருக்கு பரிசு தர விரும்புகிறார்கள் என்பதை வாக்குமூல அறையில் ரகசியமாக சொல்ல வேண்டும். பாலாஜி, சோமுவிற்கு தர விரும்பினார். (அப்ப ஷிவானி?!). அனிதாவிற்கு பரிசளிக்க விரும்பிய ரம்யா கூடவே ஒரு வேண்டுகோளை பிக்பாஸிற்கு வைத்தார். ஒருவேளை அனிதாவிற்கு பரிசு வந்து, ஷிவானிக்கு பரிசு வரவில்லையென்றால் பெயரை மாற்றி ‘ஷவானி’ என்று எழுத முடியுமா?” என்கிற வேண்டுகோளை வைத்தார். இருவருக்கும் பரிசை பகிர்ந்தளிக்க விரும்பினாராம்.
எங்கள் இளம் வயதில் வீட்டிற்கு வரும் உறவினர்கள் கிளம்பும் போது ‘பையன்களுக்கு காசு தர வேண்டும்’ என்கிற சம்பிரதாயத்தில் என் அண்ணனிடம் ஐந்து ரூபாய் நோட்டை நீட்டுவார்கள். ‘நானும் இருக்கிறேன்’ என்பதைக் காட்டிக் கொள்ள அந்தப் பக்கம் தற்செயலாக போவது போல் நான் போவேன். இன்னொரு ஐந்து ரூபாய் நோட்டு கிடைக்கும் என்பது என் எதிர்பார்ப்பாக இருக்கும். ஆனால் ‘ரெண்டு பேரும் பிரிச்சு எடுத்துக்கங்கடா’ என்று பெரியப்பா சமாளித்து விடுவார். எனக்கு கடுப்பாக வரும். ரம்யா செய்த சமயோசிதமும் இப்படித்தான் இருந்தது.
ஆஜித் அனிதாவிற்கும், கேபி ரியோவிற்கும், அனிதா ஆரிக்கும், ஷிவானி பாலாஜிக்கும் (பாசக்காரப்புள்ள), ரியோ ஆஜித்திற்கும், சோம் கேபிக்கும், ஆரி பாலாவிற்கும் பரிசுகளை அளித்தார்கள். இதில் ரம்யா சரியாக யூகித்தபடி ஷிவானிக்கு ஏன் யாருமே பரிசளிக்க நினைக்கவில்லை என்பது புதிராக இருக்கிறது. அதிலும் பாலாஜி ஏன் இப்படிச் செய்தார்? சரியாக யூகித்த ரம்யாவை பாராட்டத் தோன்றுகிறது.
நாள் 82 விடிந்தது. கிறிஸ்துமஸ் நெருங்கும் சமயமாயிற்றே... ‘அன்பென்ற மழையிலே அகிலங்கள் நனையவே...’ போன்ற பாடலை பிக்பாஸ் போடுவார் என்று நினைத்தேன். ஆனால் அவரோ ‘அஜால் குஜால்... அமுக்கு... டுமால்’ மூடில் இருக்கிறார் போலிருக்கிறது. ‘ஊதா கலரு ரிப்பன்’ என்கிற ரகளையான பாடலைப் போட்டு விட்டார். இந்தப் பாடலுக்கு எம்.ஜி.ஆர் பாணியில் ரியோ ஆட முயன்றது சுவாரஸ்யம். தன்னுடைய கேப்டன்சி பீரியடில் மட்டும் பாலாஜி நடனமாடும் மர்மம் புரியவில்லை.
துணி துவைக்கும் பிரஷ் தனக்கு பரிசாக வந்ததை எண்ணி ‘சந்தோஷப்படுவதா... இல்லை வருத்தப்படுவதா’ என்கிற மூடில் இருந்தார் ஆரி. என்றாலும் ‘எனக்கும் ஒருத்தன் பரிசு கொடுத்திருக்கான். அவனைப் பாராட்டுவோம்... எனக்கெல்லாம் பரிசு வராதுன்னு நெனச்சேன். கொஞ்ச நஞ்ச லெக்சரா இங்க கொடுத்திருக்கோம்...” என்று ஆரி பரிதாபத்துடன் அனத்த அதைக் கேட்டு விழுந்து விழுந்து சிரித்தார் ரம்யா.
தனது ‘பளபளா’ சட்டைகளில் ஒன்றை சோமுவிற்கு பரிசளித்திருந்தார் பாலாஜி. ஆஜித் தனக்கு பரிசளித்ததை நம்பவே முடியாமல் சிணுங்கினார் அனிதா. ஷிவானிக்கு பரிசை ‘டிரான்ஸ்ஃபர்’ செய்த பிக்பாஸை ரகசியமாகப் பாராட்டினார் ரம்யா. ரம்யாவின் அன்பால் நெகிழ்ந்து போன ஷிவானி பதில் மொய் வைத்தார். தனது ஆடையை வெட்டி ரியோவின் குழந்தைக்கு ‘பாப்பா டிரஸ்’ செய்திருந்த கேபியின் அன்பை நெகிழ்ந்தார் ரியோ. இப்படி பிக்பாஸ் வீட்டில் பிறாண்டலுக்கு பதிலாக பாச மழையாக இன்று பொழிந்து கொண்டிருந்தது. எல்லாம் இயேசுவின் மகிமை.
ரியோவையும் கேபியையும் வாக்குமூல அறைக்கு அழைத்த பிக்பாஸ், பிளம் கேக் செய்யும் முறையை ‘ஒன்றாம் வாய்ப்பாடு’ மாதிரி கடகடவென்று சொல்ல இருவரும் அதைப் பின்பற்ற முடியாமல் மண்டையைப் பிய்த்துக் கொண்டார்கள். இந்த இருவரின் தலைமையில் வீடு இரு அணியாகப் பிரிந்து கேக் செய்ய வேண்டும். அதற்காக பாதாம், முந்திரி உள்ளிட்ட காஸ்ட்லி அயிட்டங்களை பலி கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.
ஓவனில் கேக் வைக்கும் நேரக் கணக்கில் எதிரணி தவறு செய்கிறார்கள் என்று கேபி ரகசியமாக சொல்ல, பாலாஜி அதை எதிர் டீமிடம் போட்டுக் கொடுத்து விட்டார். பாலாஜியின் ராஜதந்திரம் இங்கும் புலப்பட்டது. இரண்டு கேக்கும் ஒழுங்காக வந்தால்தானே பிறகு சாப்பிட முடியும்? தன் அணியின் வெற்றியா முக்கியம்? இரண்டு கேக்குகள் கிடைப்பதுதான் முக்கியம்?!
கேபி தலைமையிலான அணி செய்த கேக் பார்ப்பதற்கு கேக் மாதிரியே இருந்தது. ரியோ அணி செய்தது கொழகொழவென்று இருந்தது. கப்பில் ஊற்றித்தான் குடிக்க வேண்டும் போல. உலகத்திலேயே ‘கேக்’ பொருட்களை வைத்து ‘ஆம்லேட்’ போட்டது ரியோ அணியாகத்தான் இருக்க வேண்டும். ஓவனில் வைக்கும் நேரத்தில் அவர்கள் கோட்டை விட்டிருக்கிறார்கள் போல. இறுதியில் கேபி அணி வெற்றி பெற்றது. ‘சிறந்த பேக்கு’ பட்டத்தை ரியோ அணி பெற்றது.
அடுத்த வார தலைவர் பதவிக்கான போட்டி நடந்தது. வாயில் உள்ள ஸ்பூனில் தெர்மகோல் உருண்டைகளை நிரப்பி எதிரேயுள்ள ஸ்நோமேன் பொம்மை தலையை நிரப்ப வேண்டும். மூன்று போட்டியாளர்களும் நடக்கும் பாதை என்பது ரயில்வே தண்டவாளம் போல் குறுக்கும் நெடுக்குமாக கிடந்தது. (இப்படியெல்லாம் தலைவர் போட்டியை எளிதாக நடத்தினால் ‘தெர்மகோல்’ அமைச்சர்கள், முதல்வராகவே ஆகி விடுவார்கள்). ஆரி, ரியோ மற்றும் சோம் இந்தத் தலைவர் போட்டியில் இருந்தார்கள்.
“ஆரி லைனை கிராஸ் பண்றீங்க’ என்று எச்சரித்துக் கொண்டேயிருந்தார் பாலாஜி. என் லைன்ல அடிக்கடி கிராஸ் பண்றீங்க’ என்பதை குறியீடாகச் சொல்கிறார் போலிருக்கிறது. சோமிற்கும் இப்படி எச்சரிக்கை கிடைத்தது. தம் கட்டி ஸ்பூனை வாயிலேயே தக்க வைப்பதற்குள் போட்டியாளர்களுக்கு நாக்கு தள்ளியது.
‘டாஸ்க் முடியும் வரை ஸ்பூனை வாயில் இருந்து எடுக்கவே கூடாது’ என்பதுதான் விதி. ஆனால் ரியோவும் சோமுவும் மூச்சு வாங்கும் போது ஸ்பூனை கையில் எடுத்து விட்டார்கள். யாருமே இதை எப்படி ஆட்சேபிக்கவில்லை என்று தெரியவில்லை. மூவருமே ஏறத்தாழ சரிசமமாக தெர்மகோலை நிரப்பியிருந்தாலும் நாட்டாமை பாலாஜி அளந்து பார்த்து ‘ஆரியின் பொம்மை அதிகமாக நிரம்பியிருக்கிறது’ என்ற தகவலை பிக்பாஸிற்கு சொன்னார். என்றாலும் ஆரி அவ்வப்போது லைனை கிராஸ் செய்த விஷயத்தையும் போட்டுக் கொடுத்தார். (ஒரு ‘இக்கு’ இருக்கணும்ல!).
போட்டியில் வென்ற ஆரியை அடுத்த வாரத் தலைவராக பிக்பாஸ் நியமித்தார். (இலுமினாட்டி சக்தி வேலை செய்யுது போல!). உடல் வலிமை, மனவலிமை ஆகிய இரண்டிலுமே சிறப்பாக செயல்படும் ஆரிக்கு பாராட்டு.
அதென்னமோ தலைவர் போட்டியில் வென்றவருக்கு இந்த முறைதான் பரிசு கொடுத்தார்கள். ஆடை விற்பனை நிறுவனம் ரூ.10,000 பரிசு அளித்திருந்தது. சம்பந்தப்பட்ட போர்டை சஸ்பென்ஸூடன் எடுத்து வந்த பாலாஜி, அதை இன்னமும் சுவாரஸ்யமாக நீட்டிக்காமல் டக்கென்று உடைத்து விட்டார். ‘என்னது பத்தாயிரமா?” என்று அனிதாவின் ஆச்சர்யம் இன்னும் பெரிதாக வளர்ந்தது. தனக்கு கிடைத்த பரிசை சக போட்டியாளர்களான ரியோ மற்றும் சோமுடன் ஆரி பகிர்ந்து கொண்டது சிறப்பு.
அணி பிரிக்கும் வேலை. ரம்யா, அனிதா, ஆரி, சோம் மற்றும் ரியோ ஆகியோரை கிச்சன் மற்றும் பாத்திரம் கழுவும் அணியில் சேர்த்த ஆரி பிற அணிகளைப் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று சொல்லி விட்டார். ‘இதுக்குத்தான் நான் கிச்சன் டீமிற்கு வர்றதில்லை’ என்று இந்த வாரத்தில் சலித்துக் கொண்ட அனிதா இப்போது ஆட்சேபிக்காமல் இருந்தது ஆச்சரியம். ஆக... இந்த வாரத்திலும் ஒரு ‘பருப்பு’ சண்டை உத்தரவாதம்.
ஒரு விளம்பரதாரர் பரிசளித்த மில்க் ஷேக் மற்றும் சுவையூட்டிகளை எடுத்து வந்த பாலாஜி அதை உற்சாகத்துடன் மக்களுக்கு அறிவிக்க யாரிடமும் சுரத்து இல்லை. ‘சரி... வெச்சிட்டுப் போ’ என்பது மாதிரியே டல்லாக இருந்தார்கள். (பாவம்! அந்த ஸ்பான்சர்!).
‘பிக்பாஸ் க்விஸ்’ என்கிற தலைப்பில் அடுத்து ஒரு டாஸ்க் நடந்தது. வீட்டில் இருக்கும் பொருட்கள் பற்றிய கேள்விக்கு சரியாக பதில் அளிக்க வேண்டும். வழக்கமாக கமல்தான் இந்தக் கேள்விகளை கேட்பார்.
சரியான பதில்களை அளிக்கும் போட்டியாளர்களுக்கு வீட்டிலிருந்தும் பிக்பாஸிடமிருந்தும் பரிசுகள் அளிக்கப்படும். பதில் அளிப்பதற்காக போட்டியாளர்களுக்கு 30 நொடிகள் தரப்படும். முதன் முறையே சரியான பதிலை சொல்லி விட்டால் அதே முப்பது விநாடிகள் பரிசுகளை அள்ளி வருவதற்காக தரப்படும். தவறான பதில் எனில் நேரம் குறைக்கப்படும். இதுதான் விதி.
‘ரம்யா பொங்கல் சாப்பிட்டு டொங்கலாக அமர்ந்திருந்தார்’ என்று நான் எழுதியிருந்த நேரமோ, என்னவோ... உள்ளே சென்ற ரம்யாவிடம் ‘பிக்பாஸ் வீட்டில் இதுவரை எத்தனை முறை பொங்கல் தயாரிக்கப்பட்டது?’ என்கிற கேள்வி கேட்கப்பட்டது. கூட்டிக் கழித்துப் பார்த்த ரம்யா ’36 முறைக்கும் மேல்’ என்கிற சரியான பதிலைச் சொல்லி தானே கைதட்டிக் கொண்டார். (இப்படி பொங்கல் சாப்பிட்டா தூக்கம்தான் வரும்!).
இந்த கேள்விகளின் வரிசையில், பாத்ரூம் கதவில் எத்தனை விளக்கு? தலைவராக இருந்து முதன்முறை சிறைக்கு சென்ற தியாகி யார்? வேல்முருகனும் சனமும் எந்தப் பாடலுக்கு நடனமாடினார்கள்? முதல் குக்கிங் டீம் யார்? அர்ச்சனா எத்தனை நாள் பிக்பாஸ் வீட்டில் இருந்தார்? ‘மைக் மாட்டணும்’ என்று பாலாஜியிடம் எத்தனை முறை சொல்லப்பட்டது? பிக்பாஸின் துவக்க நாளில் ஐந்தாவதாக நுழைந்தவர் யார்? என்கிற கேள்விகளுக்கு அனைவரும் சரியான பதில்களைக் கூறினார்கள். ‘லிவ்விங் ஏரியா சுவத்துல எத்தனை தாமரை இருக்கு?’ என்கிற கேள்விக்கு மட்டும் சோம் தவறுதலான பதிலைக் கூறி குறைவான நேரத்தைப் பெற்றார். தாமரைன்னாலே பிரச்னைதான் போல.
‘பரிசுகளை அள்ளிச் செல்லுங்கள்’ என்று விளம்பர வாசகங்களில் போடுவார்கள் அல்லவா? அது போல ஆக்ட்டிவிட்டி ஏரியாவில் விதம் விதமான அளவுகளில் பரிசுகள் நிறைய கொட்டிக் கிடந்தன. எவ்வளவு முடியுமோ அத்தனையையும் எடுக்கலாம். முதலில் சென்ற சோமுவிற்கு மட்டும் 20 நொடிகள் மட்டும் தரப்படும். மற்றவர்களுக்கு 30 நொடிகள்.
சிலரால் குறைந்த அளவு டப்பாக்களை மட்டுமே சுமக்க முடிந்தது. ஆனால் நிறைய பரிசு டப்பாக்களை திறமையாக அடுக்கி ஒருமாதிரியாக சமாளித்து வெளியே வந்து சிறந்த ‘டப்பா வாலா’ என்ற பெயரைப் பெற்றார் பாலாஜி. ‘டேய்... எப்படிர்ரா?’ என்று மற்றவர்கள் பாராட்டினார்கள். இதைப் போலவே அனிதாவும் நிறைய அடுக்கி விட்டு எப்படி சுமப்பது என்று தெரியாமல் ஒரு மாதிரியாக சமாளித்து வெளியே வந்தார்.
பரிசுகளை பிக்பாஸ்தான் அள்ளித் தந்திருப்பார் என்று பார்த்தால் போட்டியாளர்களின் வீடுகளில் இருந்து வந்திருந்த பரிசுகள் அவை. தாங்கள் சுமந்து வந்த பரிசுகளைப் பிரித்து சம்பந்தப்பட்டவர்களிடம் சேர்த்தார்கள். சில குடும்பத்தினர் தங்கள் வீட்டைச் சார்ந்தவர்களுக்கு மட்டுமல்லாமல் இன்னொரு போட்டியாளருக்கும் பரிசுகள் அனுப்பியிருந்தது சிறப்பான விஷயம். திருவிழாவில் வாங்கிய கண்ணாடி மாதிரி ஒன்றை அணிந்து சுற்றிக் கொண்டிருந்தார் பாலாஜி. அவருடைய உருவம் தாங்கிய மினி சிலை ஒன்றை பரிசாக அனுப்பியிருந்தார்கள்.
தன்னுடைய மகள் வரைந்து அனுப்பிய ஓவியத்தை மற்றவர்களிடம் பெருமையுடன் காட்டினார் ஆரி. ஒரு தந்தையின் பெருமிதம் அவருடைய முகத்தில் வழிந்தது. இது போன்ற சமயங்களில் ஆரி மிக அழகாக மாறி விடுகிறார். ‘உர்’ரென்ற சண்டைக்கோழி முகத்தை விட இதுதான் நன்றாக இருக்கிறது.
தங்களின் மாத மணநாள் பரிசை பெற்றுக் கொண்ட அனிதா தனது பிரத்யேக பாணியில் உற்சாகமடைந்தார். ஒவ்வொரு மாதமும் மணநாளை கொண்டாடுவது அனிதா தம்பதியினரின் வழக்கமாம்.
இசைக்குழு ஒன்று மெயின் கேட்டிற்கு அருகே நின்று கிறிஸ்தவப் பாடல்களைப் பாட மக்கள் உற்சாகத்துடன் வெளியே வந்தார்கள். போட்டியாளர்கள் குறிப்பிட்ட இடத்தைத்தாண்டி சென்று விடக்கூடாது என்பதற்காக மஞ்சள் நிறத்தில் ஒரு எல்லைக்கோட்டை வரைந்திருந்தார் பிக்பாஸ்.
தனக்கு கிடைத்த அந்தரங்கமான பரிசுகளை பிறகு பிரித்துப் பார்த்தார் ரியோ. அதில் அவரது குழந்தையின் சமீபத்திய புகைப்படம் வந்திருப்பதைப் பார்த்ததும் நெகிழ்ந்து போனார். தங்களின் குழந்தை வளர்ச்சியை தினம் தினம் கண்டு மகிழவே எந்தவொரு பெற்றோரும் விரும்புவர். சிலருக்கு மட்டும் சூழல் அவ்வாறு அமைவதில்லை. ‘'டேய் பொண்ணு... உன்னை மாதிரியே இருக்குன்னு முன்ன சொன்னேன்ல.. அதை வாபஸ் வாங்கிக்கறேன். ரொம்ப அழகா இருக்கு'’ என்று ஒரு பழைய ஜோக்கை அடித்தார் சோம். பிறகு பழைய புகைப்படத்தையும் சமீபத்திய புகைப்படத்தையும் ஒப்பிட்டுப் பார்த்து “பெருசா வளந்துட்டா இல்ல'’ என்று நெகிழ்ந்தார்கள்.
கார்டன் ஏரியாவில் பிரியாணி, கேக் என்று விருந்தை அமர்க்களப் படுத்தியிருந்தார் பிக்பாஸ். அனிதா பரவசம் அடைந்தார் என்பதைத் தனியாகச் சொல்ல வேண்டிய அவசியமேயில்லை.
'‘அடுத்து ரசத்தை ஊத்து. அதுல என்ன இருக்குன்னு பார்க்கலாம்’' என்று மக்கள் ஆவேசமாக மொக்கிக் கொண்டிருக்க திடீரென்று பாலாஜிக்கு ஞானோதயமும் கேப்டன் பொறுப்பும் நினைவிற்கு வந்து ‘மக்களே... சில நேர்மறையான விஷயங்களைச் சொல்லப் போறேன். லெக் பீஸை கீழே வெச்சிட்டு நான் சொல்றதை கேக்கறீங்களா?” என்று வேண்டுகோள் வைக்க ‘இவன் வேற.. சாப்பிடற நேரத்துல இம்சை..’ என்று நினைத்தாலும் பாலாஜியின் பேச்சை கேட்கத் தயார் ஆகினர்.
‘'அடுத்த வாரம் ஒருத்தர் வெளியேறி எட்டு பேர்தான் இருக்கப் போறோம். நான் ஒவ்வொருத்தர் கிட்டயும் ஒரு நல்ல விஷயத்தைக் கத்துக்கிட்டேன். அதைச் சொல்றேன்'’ என்று சொன்ன பாலாஜி ஒவ்வொருவரின் பெயரையும் குறிப்பிட்டு அவரிடம் கண்டு பின்பற்ற முயலும் ஒரு நல்ல குணத்தைப் பகிர்ந்து கொண்டார். ஆஜித் (பக்குவம்), அனிதா (சின்ன சின்ன விஷயங்களைக் கண்டும் மகிழ்வது) ரம்யா (பெண்கள் ஆண்களுக்கு குறைவில்லை) ஷிவானி (நாம் நாமாக இருக்கணும்) ஆரி (பொறுப்பு) கேபி (நேர்மறைத்தன்மை) சோம் (பொறுமை) ரியோ (யாரும் வில்லன் இல்லை) என்று பெரிதான பட்டியலைச் சொல்ல சம்பந்தப்பட்டவர்கள் புன்னகையுடன் பாலாஜியின் வாக்குமூலத்தைக் கேட்டுக் கொண்டார்கள்.
பாலாஜியின் கமென்ட்டிற்கு வாய்விட்டு சிரித்து நன்றி சொல்லி ஏற்றுக் கொண்டார் ரம்யா. தன்னைப் பற்றிய கமென்ட் வந்தபோது வெட்கப்புன்னகையுடன் அமைதியாக இருந்தார் ஷிவானி. ‘நம்பளைக் கூட இவன் புகழறானே’ என்று வெட்கத்துடன் சிக்கனை மென்றார் ஆஜித்.
தான் ஏன் துணி துவைக்கும் பிரஷ்ஷை ஆரிக்கு பரிசளித்தேன் என்கிற ரகசியத்தை உடைத்தார் அனிதா. அவர் அதை சொல்லாமலேயே இருந்திருக்கலாம். அந்த விளக்கம் அத்தனை மொக்கையாக இருந்தது. தனக்கும் ஆரிக்கும் நடந்த சண்டைகளின் கறைகளை போக்குவதன் குறியீடு அந்த பிரஷ்ஷாம். இதைப் போலவே காது குடையும் குச்சிகளுக்கான பொருள் என்னவெனில் எந்தவொரு விஷயத்தையும் இனி ஆழமாக நோண்டக்கூடாதாம். இந்த விளக்கத்தையெல்லாம் ‘சொல்லு.. சொல்லு.. அடுத்த வாரத்துல எப்படியும் சண்டைதானே போடப்போற’ என்பது மாதிரியே கேட்டுக் கொண்டிருந்தார் ஆரி.
“ஆக.. இந்த மோதல் எல்லாம் காதல்ல முடியணும்னு சொல்றே... அதானே’ என்று சோம் அனிதாவின் விளக்கத்தை சுருக்கமாக திருக்குறள் ஆக்கினார். அனிதாவின் விளக்கத்தை பொறுக்க முடியாத பிக்பாஸ் வீட்டின் விளக்குகளை அணைக்க நிகழ்ச்சியும் ஒருவாறாக அணைந்து முடிந்தது.
source https://cinema.vikatan.com/bigg-boss-tamil/bigg-boss-tamil-season-4-episode-82-highlights
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக