Ad

சனி, 26 டிசம்பர், 2020

''விஜய்யுடன், விஜய் சேதுபதி ஏன் நடிக்கணும்? 'துக்ளர் தர்பார்' தகராறு என்ன?'' -பார்த்திபன் தொடர் - 25

''அதீத திறமையும் வெற்றிக்குத் தடையாகுமோ... உங்களின் எழுத்து மற்றும் பேச்சில் இவ்வளவு நுட்பமிருந்தும் மற்றவர்களைப்போல் உச்சமும் லாபமும் அடையாததற்கு என்ன காரணம்?''

முஹம்மது ஆரிஃப், கனிபுதுமடம்

''அதீத திறமை வெற்றிக்குத் தடையாகுமா..? அது எப்படி தடையாகும். திறமையே ஒரு பெரிய வெற்றிதானே. திறமையினால் வெற்றி வரும், வளரும். ஆனால் வெற்றியினால் திறமை வராது, வளராது. அதனால் என்னைத் திறமைசாலி என்று சொல்வதையே நான் வெற்றியாகப் பார்க்கிறேன். இப்போதெல்லாம் என்னுடைய பயணம் எனக்கு உள்நோக்கியே நடக்கிறது. எது சந்தோஷம் என ஆராய்ச்சி செய்து பார்க்கிறேன். எது வெற்றி எனத் தேடிப் பார்க்கிறேன். சந்தோஷமாக இருப்பதே வெற்றிதான். ஆனால், நமக்கு புற வெற்றியும் அவசியமான ஒன்றுதான். புற வெற்றி நிச்சயம் நமக்கு ஒரு சந்தோஷத்தை கொடுக்கும். வெற்றிகளை நோக்கிப் பயணிக்கிறேன். அதனால் வெற்றிகளை என்னை நோக்கி வந்தடையும், வந்து கொண்டேயும் இருக்கிறது.''

'' 'ஒத்த செருப்பு' நீங்க கையில் எடுக்க உங்களைத் தூண்டியது எது... நேர்மையான பதில் எனக்கு பரிசு!''

நித்யா, சீர்காழி

பார்த்திபன்

''நேர்மையான பதில் உங்களுக்குப் பரிசாக இருக்கலாம். ஆனால் நேர்மையை நான் என் அடையாளமாகப் பார்க்கிறேன். இன்று காலையில்கூட ஒரு பெண், கேரக்டர் ஆர்ட்டிஸ்ட் என்னிடம் வந்து 'உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும்' என்றார்கள். 'என்ன பிடிக்கும்' எனக் கேட்டேன். 'உங்கள் நேர்மை பிடிக்கும்' என்றார்கள். 'என்னை இன்றுதான் பார்க்கிறீர்கள், என் நேர்மை உங்களுக்கு எப்படித் தெரியும்?' என்றேன். 'இல்ல நீங்க பேசுற ஒவ்வொரு பேச்சிலும் அது தெரியும்' என்று சொன்னார். அது மிகுந்த சந்தோஷத்தைக் கொடுத்தது. எங்க அம்மா சில நேரம் பொய் சொல்லுவாங்க. ஆனால், 'நான் சொல்றது உண்மை இல்லாம இருக்கலாம். ஆனா பொய்யில்லை' என்று சொல்வார்கள். அது என்ன மாதிரியான தத்துவம் என்றே எனக்குத் தெரியாது. அதுபோல நமக்கு தேவைப்பட்ட, அவசியமான இடங்களில் நாம் ஏதோ ஒரு பொய் சொல்லலாம். பொய் சொல்ல வேண்டிய அவசியம் இருக்கும் இடத்தில் நானும் நிச்சயமா போய் சொல்வேன். மற்றபடி நேர்மைதான் என்னுடைய அடையாளம். அப்புறம் உங்கள் கேள்வி 'ஒத்த செருப்பு' ஏன் கையில எடுத்தீங்க அதுவே ரொம்ப நல்லா இருக்கு. காலில் எடுக்காமல் கையில் எடுத்தது. இரண்டு செருப்பும் இருக்கும் போது எது ஆண் செருப்பு, எது பெண் செருப்பு என்று தெரியாது. ஆனால் ஒரு செருப்பு தொலைந்துவிட்டால் இன்னொரு செருப்பு அநாதை ஆகிவிடும். நான் இருக்கும் உயரம் மற்றவர்களுக்கு தெரியவில்லை எனும்போது என்னை அடையாளப்படுத்திக்கொள்ள வேண்டியது அவசியமாகிறது. கையில் இருக்கும் அந்த ஒத்த செருப்பை வைத்து மேலே தூக்கி காட்டி, 'நான் இங்கே இருக்கிறேன்' என அடையாளப்படுத்திக்கொள்ள வேண்டியிருந்தது. செருப்பை வைத்து எப்படி 14 வருடம் இந்த தேசத்தை ஆட்சி செய்தார்களோ அதுப்போல 'இப்படி ஒருத்தன் இருக்கேன்' என என் ஆட்சியை நிலைநிறுத்த இந்தப்படம் உதவி இருக்கிறது.''

''இரட்டை வேடத்தில் நீங்கள் ஒரு படத்திலும் நடித்ததில்லையே ஏன்... வித்தியாசமாக சிந்தித்து நகைச்சுவையாக பேசும் நீங்கள் 'தசாவதாரம்' போன்ற படத்தை எங்களுக்காக கொடுங்களேன் பார்த்திபன் சார்?''

கே.ரவிக்குமார், புதுடெல்லி

'' 'குடைக்குள் மழை' படத்தில் எனக்கு இரட்டை வேடம்தான். நீங்கள் அந்தப் படம் பார்க்கவில்லை என்று நினைக்கிறேன். 'தசாவதாரம்' போல் பண்ணலாமா, இல்லை 'தசாவதாரத்தை மீறி பண்ணலாமா எனக்குள் பல கேள்விகள். சிவாஜி சார் 9 வேடங்களில் நடித்தார். ஆனால் கமல் சார் பத்து வேடங்கள் பண்ணிட்டார். நாம் 11 வேடம் பண்ணலாம் என அதற்கும் ஒரு கதையைத் தயார் செய்துவிட்டேன். டைட்டில் 'கீழே மேலே'. இந்தக் கதையை தயார் செய்து ஆறு வருடங்கள் ஆகிவிட்டது. இதில் 'நானும் ரவுடிதான்' கேரக்டர் மறுபடியும் வரும். 'ஆயிரத்தில் ஒருவன்' கேரக்டர் வரும். 'அந்தப்புரத்தில்' கேரக்டர் மறுபடியும் வரும். 'பாரதி கண்ணம்மா' கேரக்டர் வரும். இப்படி இன்ட்ரஸ்டிங்கான கதை பண்ணி வெச்சிருக்கேன். ஒரு கதையை பண்ணிட்டு, நாம அடுத்த கதைக்கு போயிட்டா இந்த கதை அப்படியே தேங்கி போயிடுது. மறுபடியும் அதை தூசு தட்டி எடுக்க வேண்டியிருக்கு. என்னோட வேகத்துக்கு வருஷத்துக்கு மூணு படம் என்னால டைரக்ட் பண்ண முடியும். அந்த வேகத்துக்கு ஸ்கிரிப்ட்டும், நானும் எல்லாமே தயாரா இருக்கோம். ஆனா, அந்தப் படம் பண்ணுவீங்களா, இந்தப் படம் பண்ணுவீங்களா, 'புதியபாதை -2' பண்ணுவீங்களான்னு கேள்விகள் கேட்கிறவர்களுக்கு என்னுடைய ஒரே பதில் தயாரிப்பாளர் இருந்தால் நிச்சயம் பண்ணலாம் என்பதுதான்.''

'' 'துக்ளக் தர்பார்' படத்தில் நீங்கள் நடிப்பதில் ஏதோ சிக்கல் என சோஷியல் மீடியாவில் படித்தேன். நீங்கள் புதிதாக ஏதோ நிபந்தனைகள் போடுவதாக எழுதியிருந்தார்கள்... என்ன பிரச்னை சார்?''

ராஜேஷ், சென்னை

பார்த்திபன், விஜய் சேதுபதி

''எனக்கும் விகடனுக்குமான பிரிவான உறவு இன்னும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. முதலில் இந்தத் தொடரை 10 வாரம் பண்ணலாமா, இல்லை 15 வாரம் பண்ணலாமா, 25 வாரத்தோடு நிறுத்தலாமா என இப்படி நிறைய பேசினோம். ஆனால், விகடன் தரப்பில் இருந்து 'தொடர் நல்லா இருக்கு... தொடரலாம்' என பதில் வர, தொடர்கிறோம். இதை நான் ஏன் இங்கே சொல்கிறேன் என்றால், ஒரு விஷயத்தை செய்தால் அதைத் தொடரும் அளவுக்கு என்னுடைய கடுமையான உழைப்பு இருக்கும். எதுவுமே தொடரணும் என நினைப்பேன். அதில் மற்றவர்கள் நம்மை விரும்பணும் என நினைப்பேன். சமீபத்தில் 'துக்ளக் தர்பார்' பற்றிய ஒரு பஞ்சாயத்துகூட இப்படித்தான். நானும் நீங்கள் சொல்லும் செய்தியைப் படித்தேன். 'விஜய் சேதுபதியுடன் நடிக்க நிபந்தனைகள், ஒரு நாளுக்கு ஒரு லட்சம் கேட்கிறார்' என்றெல்லாம் எழுதியிருந்தார்கள். எல்லா பிரச்னைகளுக்கும் ஒரு ஆணிவேர் இருக்கும். அப்படி இந்தப் பிரச்னைக்கும் இருக்கிறது. விஜய் சேதுபதியும் நானும், 'நானும் ரவுடிதான்' படத்துக்குப்பிறகு சேர்ந்து நடிக்கின்ற படம் இது. இயக்குநர் வந்து கதைசொல்லி, சம்பளம் பேசி முடிவுசெய்யும்போதே, 'இத்தனை நாள் டேட்... இதற்குள் நீங்க முடிச்சிடப் பாருங்க' என்று சொல்லியிருந்தேன். விஜய் சேதுபதியும், நானும் என்றுதான் எப்போதும் சொல்லுவேன். ஏனென்றால் இப்போது லைம் லைட்டில், மிகவும் பிரபலமாக இருக்கும் நடிகர் அவர். ஆனால், யாரையும் குறைத்து மதிப்பிடுவதில் எனக்கு உடன்பாடு இல்லை. என்னையும் யாரும் குறைத்து மதிப்பிட நான் இடம் கொடுப்பது இல்லை. கதையை தேர்ந்தெடுக்கும் போதே எனக்குரிய கேரக்டர் அதில் இருக்கிறதா, எனக்கான சவால்கள் இருக்கிறதா என்றுதான் பார்ப்பேன். 'மாஸ்டர்' படத்தில் விஜய்யுடன் சேர்ந்து விஜய் சேதுபதி ஏன் நடிக்க வேண்டும்? ஏனென்றால் அதில் ஒரு பவர் இருக்கிறது. இளைய தளபதி விஜய்யுடன், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிக்கும் என்று டைட்டில் பார்க்கும்போதே நமக்கு ஒரு பரபரப்பு பற்றிக்கொள்கிறது. இதில் யாரும் குறைந்து போய் விடவில்லை. இருவருக்கும் இடையே போட்டி படத்தில் இருக்கலாம். ஆனால் இரு நடிகர்களுக்கும் வெளியே நல்ல நட்பு இருக்கிறது. மரியாதை டைட்டிலில் இருக்கிறது. அப்படி விஜய்சேதுபதியின் பெயரை டைட்டிலில் போடும்போது, எனக்குமான மரியாதையையும் நீங்கள் தரவேண்டும், இணையான விளம்பரங்கள் இருக்க வேண்டும் என சொல்லியிருந்தேன். அப்படி நீங்கள் செய்யமுடியவில்லை என்றால் என் போட்டோவையை எந்த விளம்பரத்திலும் பயன்படுத்தாதீர்கள். தியேட்டருக்கு வந்து மக்கள் நான் இருக்கிறேன் எனப் பார்த்துக்கொள்ளட்டும் என்றேன். டைட்டில் விஷயம்கூட மிஸ்டர் விஜய் சேதுபதி விரும்பினால் மட்டும் செய்யட்டும், இல்லையென்றால் வேண்டாம் என்றுதான் சொல்லியிருந்தேன். அதேப்போல் 2020 ஜனவரி மாதம் முழுக்க இந்த படத்தின் ஷூட்டிங் நடப்பதாக இருந்தது. ஜனவரி 15-ம் தேதிக்கு மேல என்னுடைய டேட்ஸை எக்ஸ்டெண்ட் செய்து இயக்குநர் மற்றும் தயாரிப்புத் தரப்பில் கேட்டபோது, அந்த தேதிகளில் எனக்கு மலையாளப் படத்தில் நடிக்க வேண்டியிருப்பதை சொன்னேன். 'இல்ல சார்... விஜய் சேதுபதி சாரோட டேட்ஸ் இருக்கு. அதனால அதைப் பண்ணி முடிச்சிடலாம்' என்றார்கள். அந்த மலையாள படத்தில் 15 நாள் நான் நடித்தால் போதும், ஒரு முழு படத்துக்கான சம்பளம் கிடைக்கும் என்று திரும்பவும் சொன்னேன். 'இல்ல சார்... விஜய் சேதுபதி சார் டேட்ஸ் இருக்கு. அதனால நாம முடிச்சிடலாம்' என்றார்கள். ஆனால், 15-ம் தேதிக்கு மேல் எனக்கு இந்தப் படத்துக்கான ஷூட்டிங்கே நடக்கவில்லை. என்னுடைய தேதிகளை அவர்கள் வீணடித்துவிட்டார்கள். அதுவும் தெரிந்தே வீணடித்தார்கள். அதனால்தான் வீணடித்த தேதிகளுக்கான சன்மானம் வேண்டும் எனக்கேட்டேன். சம்பளம் எல்லாம் பிறகு முடிவு செய்ய வேண்டிய விஷயம். கோவிட்டுக்குப் பிறகு 30% சம்பளம் குறைக்கவேண்டும் என்பதில் நானும் உடன்படுகிறேன். ஆனால், இது கோவிட்டுக்கு முன்பு நடந்த சம்பவம். மிக மிக அஜாக்கிரதையாக நான் கையாளப்பட்டதால் எனக்கு ஏற்பட்ட நஷ்டம். அதை எவ்வளவு பணம் கொடுத்தாலும் ஈடு செய்ய முடியாது. எல்லாவற்றையும் பேசி சரி செய்து இப்போது மறுபடியும் படப்பிடிப்பு தொடங்கயிருக்கிறது. சந்தோஷமாக நாங்கள் சேர்ந்து நடிக்கத்தான் போகிறோம். 'துக்ளக் தர்பார்' ஒரு சுவாரஸ்யமான சினிமாவாக இருக்கும். நிச்சயதார்த்தத்தில் நடக்கிற எல்லா கலாட்டாவும் கல்யாணம் சுமூகமா நடக்க வேண்டும் என்பதற்காகத்தான் இருக்கும். அதுபோலத்தான் இந்த பேச்சுவார்த்தைகளும். விரைவில் கல்யாணம்... மன்னிக்கவும் விரைவில் 'துக்ளக் தர்பார்' வெளியீடு!''



source https://cinema.vikatan.com/tamil-cinema/parthiban-talks-vijay-sethupathi-and-tughlaq-darbar-controversy-parthiban-series-25

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக