கிறிஸ்துமஸ் அதிகாலையில் அமெரிக்காவின் நாஷ்வில்லே பகுதியில் குண்டு வெடித்ததில் 3 பேர் படுகாயமடைந்தனர். இச்சம்பவம் திட்டமிட்டு நடந்திருப்பதாகவும், முன்கூட்டியே எச்சரிக்கப்பட்டதால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவின் டெண்ணஸி மாகாணத்தில் உள்ள நாஷ்வில்லே பகுதியில், உள்ளூர் நேரப்படி கிறிஸ்துமஸ் தினத்தின் காலையில் குடியிருப்புப் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் ஒன்றில் குண்டு வெடித்துள்ளது.
குண்டு வெடிப்பு குறித்த வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அதில், ``சாலையின் ஓரமாக நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்றிலிருந்து பதிவுசெய்யப்பட்ட ஆடியோ பதிவு ஒன்று ஒலித்துக் கொண்டிருந்தது. அந்த ஆடியோவில் `இன்னும் 15 நிமிடத்தில் வெடிகுண்டு வெடிக்கும். இதை நீங்கள் கேட்டுக்கொண்டிருந்தால், இப்போதே வெளியேறுங்கள்” என்று குண்டுவெடிப்பதற்கு முன்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்பிறகுதான் வாகனத்திலிருந்த வெடிகுண்டு வெடித்திருப்பதாக போலீஸார் தரப்பில் கூறப்படுகிறது.
இச்சம்பவம் குறித்து பேசிய நாஷ்வில்லே நகரக் காவல்துறைத் தலைவர் ஜான் டிரேக், ``15 நிமிடங்களில் வெடிகுண்டு வெடிக்கும் என்ற ஆடியோ பதிவு ஒலித்து கொண்டிருந்த வாகனத்தைப் பற்றி எங்களுக்குத் தகவல் கிடைத்தது. உடனடியாக, அந்த பகுதியிலிருந்த மக்களுக்கும் எச்சரிக்கை விடுத்து, அவர்களை அங்கிருந்து வெளியேற்றினோம். மேலும், அந்த வாகனத்தை நோக்கி போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியதோடு, வெடிகுண்டு நிபுணர்களையும் சம்பவ இடத்துக்கு வரவழைத்தோம்" என்றார்.
நாஷ்வில்லே நகரின் மத்தியில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தால், அப்பகுதி முழுவதையும் கரும்புகை சூழ்ந்தது. கட்டடங்கள் பலத்த சேதமடைந்தன. தொலைபேசி சேவை வழங்கும் நிறுவனத்தின் கட்டடம் ஒன்றும் இந்த குண்டுவெடிப்பில் சேதமடைந்தது. அதனால், அந்தப் பகுதியில் தொலைதொடர்பு சேவையில் பிரச்னை இருப்பதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அமெரிக்க பெடரல் ஏவியேஷன் (Federal Aviation) நிர்வாகம் நாஷ்வில்லே சர்வதேச விமான நிலையத்திலிருந்து அனைத்து விமான சேவைகளையும் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. அமெரிக்கா நேரப்படி இன்று மாலை விமான சேவை மீண்டும் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
``என்ன நோக்கத்துக்காக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது என்பது பற்றி தெரியவில்லை. விசாரணை நடைபெற்று வருகிறது, காயமடைந்த மூன்று பேரும் சிகிச்சைக்காக மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் யாரும் ஆபத்தான நிலையில் இல்லை" என்று காவல்துறை செய்தித் தொடர்பாளர் டான் ஆரோன் தெரிவித்துள்ளார். இச்சம்பவம் குறித்து எஃப்.பி.ஐ (FBI) உள்ளிட்ட பல்வேறு விசாரணை ஏஜென்சிகள் விசாரணையைத் தொடங்கியிருக்கின்றன.
source https://www.vikatan.com/news/crime/explosion-at-downtown-of-nashville
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக