பச்சை முகம், பால் வடியும் முகங்களுடனும் நிறைந்திருக்கிறது தற்போதைய இங்கிலாந்து கிரிக்கெட் அணி. ஸாக் க்ராலி, சாம் கரண், சிப்ளே என இந்த பேபி ஃபேஸ் வீரர்கள்தான் இப்போது இங்கிலாந்தின் பலம். இந்த மூவர் கூட்டணியின் லேட்டஸ்ட் ஹீரோ ஸாக் க்ராலி!
பாகிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட்டில் 267 ரன்கள் அடித்து அதகளம் செய்திருக்கிறார் க்ராலி. இந்த சீசனின் தொடக்கத்தில் விண்டீஸுடன் ஆடிய மூன்று போட்டிகள் கொண்ட தொடரிலும் க்ராலி இடம்பெற்றிருந்தார். இங்கிலாந்து தோல்வியடைந்த முதல் டெஸ்ட் போட்டியின் செகண்ட் இன்னிங்ஸில் விண்டீஸ்க்கு ஓரளவு டீசன்ட்டான டார்கெட்டை செட் செய்ததற்கு க்ராலியின் அந்த 76 ரன் இன்னிங்ஸ் பெரும் உதவியாக இருந்தது. இந்த இன்னிங்ஸால் இரண்டாவது போட்டியிலும் க்ராலிக்கு ப்ளேயிங் லெவனில் இடம் கிடைத்தது. ஆனால் இரண்டாவது போட்டியில் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு ரன் அடிக்காததால் மூன்றாவது போட்டியில் டிராப் செய்யப்பட்டார்.
விண்டீஸ்களுக்கு எதிரான தொடர் முடிந்த கையோடு பாகிஸ்தான் தொடர் ஆரம்பிக்க, இங்கேயும் முதல் போட்டியில் க்ராலிக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இரண்டாவது போட்டிக்கு முன்பாக பென் ஸ்டோக்ஸ் சொந்த காரணங்களுக்காக அணியிலிருந்து விலகிக்கொள்ள அவருக்கு பதில் க்ராலிக்கு ப்ளேயிங் லெவனில் இடம் கிடைத்தது. பென் ஸ்டோக்ஸுக்கு பதில் பென் ஃபோக்ஸ் என்ற விக்கெட் கீப்பர் மற்றும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனுக்கே வாய்ப்பு கிடைக்கும் என எல்லோரும் எதிர்பார்த்தார்கள். ஆனால், ஜோ ரூட் பாகிஸ்தானின் பௌலிங்கை சமாளிக்க டாப் ஆர்டரை இன்னும் பலப்படுத்த விரும்பினார். க்ராலியின் இந்தத்தேர்வுக்கு முன்னர் வரைக்குமே அவர் ஒரு பெரிய இன்னிங்ஸ் ஆடியிருக்காவிட்டாலும் விண்டீஸுக்கு எதிராக நிலைத்து நின்று அவர் ஆடிய நிதான ஆட்டம் பாகிஸ்தானுக்கு எதிராகவும் ஜோ ரூட்டுக்கு தேவைப்பட்டது. முதல் போட்டியில் இங்கிலாந்தின் பேட்டிங் லைன் அப் குலைந்ததைப் போன்று மீண்டும் நடக்காமல் இருக்க எதிரணியை அயர்ச்சியடைய வைக்கும் வகையில் ஒரு ப்ளேயர் டாப் ஆர்டரில் கூடுதலாக இருப்பது சிறப்பாக இருக்கும் என்ற வகையில் க்ராலியின் பெயர் டிக் அடிக்கப்பட்டது.
ஜோ ரூட் நினைத்ததற்கு மேலேயே டாப் ஆர்டரில் தனது திறமையை நிரூபித்து காட்டி அணியையும் வலுவான நிலைக்கு தூக்கி நிறுத்திவிட்டார் க்ராலி. முதல் நாளின் முடிவில் 288 பந்துகளின் 171 ரன்கள் அடித்திருந்தார் க்ராலி. வழக்கம்போல, முதல் நாளின் தொடக்கத்தில் ஸ்விங் அதிகமாகவே இருந்தது. ஷாஹின், நஷீம், அப்பாஸ் என பாகிஸ்தான் பௌலர்களும் மிரட்டியெடுத்தனர். குறிப்பாக ஷாஹின் ஷாட் குட் லென்த்தில்,லேட் ஸ்விங்கர்கள் போட்டு பேட்ஸ்மேன்களைத் தடுமாறச் செய்தார்.
ஆனால், இதெல்லாம் க்ராலியிடம் எடுபடவில்லை. ஷாஹின் ஷா பந்தில் பர்ன்ஸ் அவுட் ஆகி வெளியேறி க்ராலி க்ரீஸுக்குள் வந்து தான் சந்தித்த முதல் பந்தையே ஃபிளிக் ஆடி பவுண்டரியாக்கினார். அப்பாஸ், நஸீம், யாசீர் என அடுத்தடுத்து மிரட்ட வந்த பௌலர்களையும் பவுண்டரியடித்து துவம்சம் செய்தார். பாகிஸ்தான் பௌலிங் நேற்று அவ்வளவு ஒன்றும் மோசமாகவெல்லாம் இல்லை. கேப்டன் ரூட்டை ஷாஹின் ஷா-வும், போப்பை யாசீரும் வீழ்த்திய டெலிவரிக்கள் எல்லாம் விளையாடவே முடியாத வெறித்தனமான டெலிவரிகள். ஆனால், க்ராலி தனது டெக்னிக்கில் பிடிப்போடு இருந்து தன்னம்பிக்கையோடு ஆடினார். ஷாஹின் ஷா, யாசீர் இருவரும் பந்து வீசும் போது ஆஃப் ஸ்டம்ப்பை முழுவதுமாக காண்பித்து ஓப்பன் ஸ்டான்ஸில் ஆடினார்.
அதேநேரத்தில் ஓவர் தி விக்கெட்டில் போட்டுக்கொண்டிருந்த அப்பாஸுக்கு ஸ்டம்ப்பை முழுவதுமாக மறைத்து க்ளோஸ் ஸ்டான்ஸில் ஆடினார். ஒரு கட்டத்தில் யாசிர் ஷா -வின் பெளலிங்கில் தைரியமாக ரிவர்ஸ் ஸ்வீப்பெல்லாம் ஆடினார். இந்த சம்மர் சீசனிலேயே இதற்கு முன் இரண்டு அரைசதங்களை சென்சுரியாக மாற்ற முடியாமல் தடுமாறியிருப்பார் க்ராலி. ஆனால், இந்த மேட்ச்சில் அதை இரட்டை சதமாக மாற்றிவிட்டார் க்ராலி. இந்த மேட்ச்தான் இந்த சீசனின் கடைசி மேட்ச் என்பதால் அணியில் தொடர்ந்து இடத்தை தக்க வைத்துக்கொள்ள பெரிய இன்னிங்ஸ் ஆடியே ஆக வேண்டும் என்பது க்ராலிக்கு தெளிவாக தெரிந்திருந்தது. முதல் 45 ரன்களை 45 பந்துகளில் எடுத்த க்ராலி அடுத்த 55 ரன்களை எடுக்க 126 பந்துகளை எடுத்துக்கொண்டார். இந்த நேரத்தில் தான் பட்லர் உள்ளே வந்து அவர் சீராக ஆட க்ராலிக்கு நல்ல பார்ட்னர்ஷிப்பும் கிடைத்தது. இரண்டு நாட்களும் சேர்த்து மொத்தம் 9 மணி நேரங்கள் களத்தில் நின்று, 393 பந்துகளில் 267 ரன்கள் அடித்து இறுதியில் அவுட் ஆனார் க்ராலி. 22 வயதில் இப்படிப்பட்ட இன்னிங்ஸ் எல்லாம் வேற லெவல்.
இந்த சீசனில் நடைபெற்ற 6 போட்டிகளில் இங்கிலாந்து சார்பில் சிப்லே, ஸ்டோக்ஸ், க்ராலி மூவர் மட்டுமே சதம் அடித்திருக்கின்றனர். சிப்லே-வும் ஸ்டோக்ஸும் விண்டீஸ்களுக்கு எதிராக சதத்தை அடித்திருந்தனர். ஒப்பீட்டளவில் பார்த்தால் அந்த சதங்களை விட மிரட்டியெடுக்கும் பாகிஸ்தானின் பௌலிங்கை சிதைத்து க்ராலி ஆடியிருக்கும் இந்த இன்னிங்ஸ்தான் மிகச்சிறப்பானது. ரூட் எதிர்பார்த்த பெரிய இன்னிங்ஸும் அவர் கரியருக்கு தேவைப்பட்ட ஒரு பிரேக்குமாக இந்த இன்னிங்ஸ் அமைந்திருக்கிறது. இங்கிலாந்தின் ப்ளேயிங் லெவனில் க்ராலிக்கென்று ஒரு இடம் உறுதி செய்யப்பட்டுவிட்டது.
வாழ்த்துகள் யங் மேன்!
source https://sports.vikatan.com/cricket/an-analysis-on-zak-crawley-performance-in-eng-vs-pak-3rd-test
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக