Ad

சனி, 22 ஆகஸ்ட், 2020

COVID-19: தடுப்பூசியை 130 கோடி பேருக்கு எப்படிச் செலுத்த முடியும்? - ஓர் அலசல்

கொரோனாவுக்கு ஒரு நல்ல தடுப்பூசி அடுத்த ஆண்டு தொடக்கத்தில் விநியோகத்துக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் உலகின் பல்வேறு நாடுகளும் தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனங்களும் இதுவரை அறிவியல் துறை பார்த்திராத அளவுக்கு, போட்டி போட்டுக்கொண்டு தடுப்பூசி ஆராய்ச்சியிலும் தயாரிப்பிலும் ஈடுபட்டு வருகின்றன.

இங்கிலாந்தின் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தின் தடுப்பூசிதான் முதலில் பயன்பாட்டுக்கு வரும் என்று நாம் நினைத்துக்கொண்டிருக்கையில் ரஷ்யா தனது தடுப்பூசி ஆராய்ச்சியை அவசரப்படுத்தி அதை முன்னரே வெளியிட்டுள்ளது. இந்தத் துரித நடவடிக்கை பல சந்தேகங்களை எழுப்பிருக்கிறது. ரஷ்யாவின் ஆராய்ச்சி முடிவுகள் வெளிப்படையாக அறிவிக்கப்படவில்லை. மேலும், உலக சுகாதார நிறுவனம் ரஷ்யாவின் ஆராய்ச்சி விவரங்கள் கிடைக்கப்பெறவில்லை எனக் கூறியுள்ளது.

வளரும் நாடுகள் சில, `ஸ்புட்னிக்' என்று பெயரிடப்பட்டுள்ள ரஷ்யாவின் இந்தத் தடுப்பூசியை வாங்க முனைகின்றன. ஒருவேளை இதற்காகத்தான் ரஷ்யா இவ்வளவு அவசரமாகத் தனது தடுப்பூசியை வெளியிட்டுள்ளதோ, அதன் பின்னணியில் பொருளாதார உள்நோக்கம் இருக்குமோ என்ற அச்சத்தை நமக்கு ஏற்படுத்துகிறது. இந்தியா உள்ளிட்ட பல நாடுகளும் குழு அமைத்து, ரஷ்யத் தடுப்பூசியை வாங்கலாமா என்று ஆராய்ந்து வருவதாகத் தெரிகிறது.

vaccine

ஆக்ஸ்ஃபோர்டு தடுப்பூசி

ஆனால், இப்போதைக்கு நம்பிக்கையூட்டும் வகையில் சென்றுகொண்டிருக்கும் ஆராய்ச்சி ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழத்தின் தடுப்பூசிதான். இந்த ஆராய்ச்சியை நடத்தி வரும் ஆஸ்ட்ரா ஜெனிகா நிறுவனம், ``இந்தத் தடுப்பூசியை லாப நோக்கத்துக்காகக் கொடுக்கவில்லை" என்று கூறியுள்ளது. இதனால் இந்தியாவில் இந்தத் தடுப்பூசி தயாரிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வரும்போது, ஒரு தடுப்பூசி ரூ. 220-க்கு கிடைக்கும் என்று தெரிகிறது. இந்தத் தொகையில் தடுப்பூசியைக் கொள்முதல் செய்வது இந்தியாவுக்கு பெரிய சுமையல்ல. அரசு இலவசமாகவே அனைவருக்கும் கொடுக்கலாம்.

ஆனால், தடுப்பூசியை அனைவருக்கும் கொண்டு சேர்ப்பதில் சில நடைமுறை சிக்கல்கள் உள்ளன. முதலில் நம்முடைய உற்பத்தித் திறனைப் பார்க்க வேண்டும். தற்போது இந்தியாவில் பாரத் பயோடெக் மற்றும் சீரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் பூனே என இரண்டு பெரிய தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனங்கள் உள்ளன. அவற்றின் மூலம் அதிக உற்பத்தி (Mass Production) செய்யும்பட்சத்தில், நம் நாட்டின் மக்கள் தொகை அதிகம் என்பதால், என்னதான் வேகமாகத் தயாரித்தாலும் 100 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகளைத் தயாரிக்க குறைந்தது 2 வருடங்கள் ஆகும்.

யாருக்கு முதலில் தடுப்பூசி?

சரி, தயாரிக்க ஆரம்பித்துவிட்டோம்... யாருக்கு முதலில் கொடுப்பது?

முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி முதலில் கொடுக்கப்படும் என்று இந்திய பிரதமர் கூறியிருப்பது வரவேற்கத்தக்கது. ஆனால், இந்த விநியோகத்தை எவ்வாறு கட்டுப்படுத்துவது? பணக்காரர்களும் வல்லமை வாய்ந்தவர்களும் குறுக்கு வழியில் இதைப் பெற முயல அதிக வாய்ப்பு உள்ளது. கள்ளச்சந்தையில் தடுப்பூசி வர்த்தகம் நடைபெறவும் வாய்ப்புள்ளது. எனவே, தடுப்பூசி விநியோகத்தைத் தனியாரிடம் விட்டுவிடாமல் இந்தப் பொறுப்பை முழுமையாக அரசே ஏற்று, கட்டுப்பாடான விதிகளின்படி வழங்க வேண்டும்.

இது ஒருபுறமிருக்க தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள மாட்டேன் என்று ஒரு கூட்டம் இருக்கிறது. அப்படியானவர்களைக் கண்டுபிடித்து அவர்களின் சந்தேகங்களைப் போக்கி உரிய அறிவுரை அளித்து அவர்களையும் இந்தக் கொள்ளை நோய்க்கான தடுப்பூசியை எடுத்துக்கொள்ளச் செய்ய வேண்டும். அவர்களை மறைமுகமாக வற்புறுத்த வேண்டும்.

Dr.Dhileepan Selvarajan

திட்டமிடல் தேவை

கோவிட்-19 போன்ற பெருந்தொற்று பரவும் நேரத்தில் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளாமல் தவிர்ப்பவர்கள் மற்றவர்களுக்கும் பிரச்னையாக மாறுவார்கள். தடுப்பூசி போட மறுப்பவர்களுக்கு இந்திய தொற்றுநோய் தடுப்புச் சட்டத்தின்கீழ் தண்டனை கொடுத்தாலும் தவறில்லை. கர்ப்பிணிகளுக்கு இந்தத் தடுப்பூசியைக் கொடுக்கலாமா என ஆராய வேண்டும். தடுப்பூசி விஷயத்தில் கர்ப்பிணிகளின் பாதுகாப்பு பற்றி இதுவரை தெரியவில்லை.

சிறு குழந்தைகள் மற்றும் முதியோருக்கு இந்தத் தடுப்பூசியைக் கொடுக்க வேண்டியதன் அவசியத்தை ஆராய வேண்டும். ஆதார் எண் கொண்டு கோவிட்-19 தடுப்பூசி போடப்பட்டவர்களைக் கணக்கில் வைத்துக் கொள்ளலாம். தடுப்பூசி வழங்குவதில் பல கூறுகளும் பிரச்னைகளும் உள்ளதால், மத்திய அரசும் மாநில அரசுகளும் தனித்தனி குழுக்களை அமைத்து இப்போதிலிருந்தே இதற்கான திட்டமிடலைத் தொடங்க வேண்டும்.

vaccine and covid-19

இந்தியாவில் தடுப்பூசிகள்!

இந்தியாவின் தடுப்பூசி திட்டத்தால் இரண்டு பெரிய கொள்ளை நோய்களான பெரியம்மை மற்றும் போலியோவை ஒழித்துக்கட்டி உள்ளோம். இந்தியாவின் முதல் தடுப்பூசியான பெரியம்மை தடுப்பூசி முதன்முதலில் 1802-ம் ஆண்டு மும்பையில் செலுத்தப்பட்டது. பின் உலக சுகாதார நிறுவனத்தின் நீட்டிக்கப்பட்ட தடுப்பூசித் திட்டத்தின்கீழ் 1974-ம் ஆண்டு முதல் தீவிரமாகப் பெரியம்மை தடுப்பூசி வழங்கும் திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

சிலர் தடுப்பூசிக்கு பயந்து மரத்தில் ஏறி ஒளிந்துகொண்டனர். அவர்களையெல்லாம் தேடித்தேடி தடுப்பூசி போட்டது நினைவிருக்கலாம். தீவிரமாகத் தடுப்பூசித் திட்டம் முன்னெடுக்கப்பட்டதால் 1977-ம் ஆண்டு உலகில் இருந்தே பெரியம்மை நோய் ஒழிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. பின் போலியோ தடுப்பூசி, சொட்டு மருந்து வருடா வருடம் வழங்கப்பட்டது. 2012-ம் ஆண்டு முதல் ஒரு போலியோ நோயாளிகூட கண்டறியப்படவில்லை என்ற நிலை தற்போது உள்ளது.

Vaccine for all

Also Read: கோவிட்-19: வீட்டில் பாதுகாப்பு... ஆபத்தை எதிர்கொள்வது எப்படி?

பல முன்னேறிய நாடுகளுக்கு இணையாக, 1985-ம் ஆண்டிலிருந்து அனைவருக்கும் தடுப்பூசித் திட்டத்தின் கீழ் படிப்படியாகப் பல நோய்களுக்கு தடுப்பூசிகளை வழங்கி வருகிறோம்.

தடுப்பூசிகளை வழங்குவதற்குத் தேவையான அனைத்து மருத்துவ உள்கட்டமைப்பு வசதிகளும் போதுமான அளவுக்கு உள்ளன. குறிப்பாக, மருத்துவப் பணியாளர்கள் வீடுவீடாகச் சென்று தடுப்பூசியை வழங்கும் அளவுக்கு பொது சுகாதார அமைப்பும் உள்கட்டமைப்பு வசதிகளும் உள்ளன என்பதில் நமக்குப் பெருமையே.



source https://www.vikatan.com/government-and-politics/healthy/an-analysis-on-covid-19-vaccination-and-its-challenges-in-india

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக