கொரோனா லாக்டெளன் காரணமாகத் திருமணம், திருவிழா என அனைத்தும் முடங்கிப்போயுள்ளன. பொதுமக்கள் அதிக அளவு கூடாமல், திருமணம் போன்ற நிகழ்ச்சிகள் குறைந்த நபர்களைக்கொண்டே நடக்கின்றன. நெருங்கிய உறவுகள் இல்லாமலும், பெற்றோர் இல்லாமலும் நடந்த திருமணங்களும் உண்டு. இதற்கெல்லாம் மேலாக மணமகள் வர முடியாத காரணத்தால் தம்பதிகள் ஆன்லைன் மூலம் வீடியோவில் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு மொபைலுக்கு தாலிக்கட்டிக்கொண்ட நிகழ்வுகளும் கேரளத்தில் அரங்கேறின. இந்த நிலையில் பெங்களூரில் நடந்த மகனின் திருமணத்துக்காகத் தன் தாய் தந்தையரை அழைத்துச் செல்ல கேரள மாநிலம் பாலக்காடு பகுதிக்கு ஹெலிகாப்டர் அனுப்பிய நெகிழ்ச்சி சம்பவமும் இந்த லாக்டெளன் சமயத்தில் நடந்துள்ளது.
கேரள மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்த லெட்சுமி நாராயண பெருமாள் (90), சரஸ்வதி (85) ஆகியோரின் மகன் நாராயணன். நாராயணன் குடும்பத்துடன் பெங்களூரில் வசித்து வருகிறார். நாராயணனின் மகனுக்கு பெங்களூரில் வைத்து திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. லாக்டெளன் காரணமாக காரிலோ, ரயிலிலோ பெங்களூர் செல்லமுடியாத நிலை இந்த முதிய தம்பதியினருக்கு இருந்தது. இதற்கு இ-பாஸ் போன்ற தடைகளும் ஒரு காரணம். ஆனால், பேரனின் திருமணத்தில் கலந்துகொள்ள வேண்டும் என இவர்கள் விரும்பினார்கள். மேலும் தாத்தா பாட்டி ஆகியோரின் ஆசி வேண்டும் எனப் பேரனும் விரும்பியுள்ளார்.
இதையடுத்து லெட்சுமி நாராயண பெருமாள் - சரஸ்வதி தம்பதியினரை அழைத்துச் செல்ல பெங்களூரில் இருந்து ஹெலிகாப்டர் வாடகைக்கு எடுத்துக்கொண்டு வந்துள்ளார் அவர் மகன் நாராயணன். பெங்களூர் சிப்சன் கம்பெனியின் ஹெலிகாப்டரை வாடகைக்கு எடுத்து வந்துள்ளார் நாராயணன். கேரள மாநிலம் பாலக்காடு இந்திராகாந்தி முனிசிபல் ஸ்டேடியத்தில் வந்திறங்கிய ஹெலிகாப்டரில் லெட்சுமி நாராயண பெருமாளும் அவர் மனைவி சரஸ்வதியும் பெங்களூர் புறப்பட்டுச் சென்றனர்.
இதுகுறித்து 90 வயது முதியவர் லெட்சுமி நாராயண பெருமாள் கூறுகையில், "இதுவரை விமானம், ஹெலிகாப்டர் எதிலும் பயணித்ததில்லை. பேரனின் திருமணத்துக்காக முதன்முறையாக ஆகாய மார்க்கமாகப் பயணிக்கிறேன். வாழ்வின் மிகவும் மகிழ்ச்சியான நிகழ்வு இது" எனத் தெரிவித்தார். பாலக்காட்டில் இருந்து பெங்களூருக்கு ஹெலிகாப்டரில் ஒரு மணி நேரத்தில் சென்றுவிடலாம் என்பதால் முதிய தம்பதியினருக்கு பயணமும் இலகுவாக அமைந்துள்ளது.
தனியார் ஹெலிகாப்டரில் பயணிக்க ஒரு மணி நேரத்துக்கு ஒரு லட்சம் ரூபாய் வாடகை என்கிறார்கள். திருமணம் முடிந்து முதிய தம்பதிகளைத் திரும்பவும் கேரளத்துக்கு கொண்டு விடுவதற்கும் அதே ஹெலிகாப்டர் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதியவர்களை பாரமாக நினைத்து உதாசீனப்படுத்தும் இந்தக் காலகட்டத்தில் பேரனின் திருமணத்தை காண லட்சக்கணக்கில் செலவு செய்து ஹெலிகாப்டர் வாடகைக்கு எடுத்து அழைத்துச் சென்ற சம்பவம் கேரளத்தில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
source https://www.vikatan.com/news/general-news/90-year-old-grandfather-flew-in-a-helicopter-to-attend-his-grandsons-wedding
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக