சீனாவின் வுகான் நகரிலிருந்து கடந்த ஜனவரி மாதம் முதல் பரவத்தொடங்கியதாகக் கூறப்படும் கொரோனா வைரஸ் ஒட்டுமொத்த உலகத்துக்கும் பரவி மனிதகுலத்தின் இயல்பு வாழ்க்கையை வெகுவாகப் பாதித்துள்ளது. கொரோனாவால் உலகம் முழுவதும் 1.8 கோடிக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டு 6,97,189 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக வைரஸுக்கான தடுப்பு மருந்து கண்டுபிடிப்பு பணிகள் நடைபெற்று வந்தாலும், இதுவரை எந்த மருந்தும் அதிகாரபூர்வமாக வெளியிடப்படவில்லை.
இந்நிலையில், கொரோனாவுக்கான சரியான மருந்து கிடைக்காமலும் போகலாம் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக நேற்று ஜெனீவாவில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய WHO இயக்குநர் டெட்ரோஸ் அதானோம்,``உலகம் முழுவதும் இருக்கும் வைரஸ் பரவலை நாங்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். ஜனவரி 30-ம் தேதி நாங்கள் நடத்திய ஆய்வில் சீனாவுக்கு வெளியே கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 100 ஆக மட்டுமே இருந்தது, குறிப்பாக, ஒரு உயிரிழப்புகூட ஏற்படவில்லை. அதுவே, கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு நடந்த ஆய்வில் உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 மில்லியனாகவும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2 லட்சமாகவும் இருந்தது.
Also Read: கொரோனா: `தவறான திசை; நிலைமை மேலும் மோசமடையும்!’ - எச்சரிக்கும் WHO
ஆனால், தற்போதைய நிலவரத்தின்படி பாதிப்பு எண்ணிக்கை முன்பைவிட ஐந்து மடங்கு அதிகரித்து 17 மில்லியனாகவும் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 3 மடங்கு அதிகரித்து 6,80,000 ஆக உள்ளது. கொரோனா பரவல் நாளுக்கு நாள் வேகமெடுத்து வருகிறது. கடந்த வாரம், பல நாடுகளில் புதிதாக பெரும் வெடிப்பு ஏற்பாடுகளை நாங்கள் கண்காணித்தோம். கடுமையான நடவடிக்கைகளின் மூலம் மட்டுமே கொரோனா பரவலைக் குறைக்க முடியும். இந்த வைரஸை பற்றி நாங்கள் ஒவ்வொரு நாளும் புதிதாகக் கற்றுக்கொள்கிறோம். மேலும், கோவிட் 19 வைரஸின் தீவிர தாக்குதலிலிருந்து பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் சிகிச்சைகளில் உலகம் முன்னேற்றம் கண்டுள்ளது என்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்” என்று கூறிய அவர் தொடர்ந்து,
``உலகம் முழுவதும் கண்டுபிடிக்கப்பட்ட பல தடுப்பூசிகள் தற்போது மூன்றாம்கட்ட மருத்துவப் பரிசோதனைகளில் உள்ளன. மேலும், தொற்றுநோயைத் தடுக்க உதவும் பல பயனுள்ள தடுப்பூசிகள் கிடைக்கும் என்று அனைவரும் நம்புகிறோம். இருந்தாலும் கொரோனாவுக்கான சரியான மருந்து தற்போதுவரை இல்லை, அது ஒருபோதும் கிடைக்காமலும் போகலாம். இப்போதைக்கு வெடிப்புகளை நிறுத்துவது, பொது சுகாதாரம் மற்றும் நோய் கட்டுப்பாட்டின் அடிப்படைகளை அனைத்து நாடுகளும் தொடர்ந்து பின்பற்ற வேண்டும். நோயாளிகளைப் பரிசோதனை செய்தல், தனிமைப்படுத்துதல் மற்றும் சிகிச்சையளித்தல், அவர்களின் தொடர்புகளைக் கண்டறிந்து தனிமைப்படுத்துதல் ஆகியவற்றைச் செய்யுங்கள்.
Also Read: கொரோனா : `இது முதல் அலைதான்; இன்னும் பெரிதாக வரப்போகிறது!’ - WHO எச்சரிக்கை
தனி நபர்களைப் பொறுத்தவரை சமூக இடைவெளி பின்பற்றுவது, முகக் கவசம் அணிவது, தவறாமல் கைகளைச் சுத்தம் செய்தல், இருமல், காய்ச்சல், சளி உள்ளவர்களிடமிருந்து பாதுகாப்பாக விலகியிருங்கள். ஒவ்வொரு மனிதரும் இதை நிச்சயம் பின்பற்ற வேண்டும். இதன் மூலம்தான் கொரோனாவை கட்டுப்படுத்த முடியும், அனைத்து அரசுகளும் தங்களின் சுகாதார நடைமுறைகளை மேலும் வலுப்படுத்த வேண்டும். இன்று நாம் ஒன்றாகச் செயல்பட்டால் உயிர்களைக் காப்பாற்ற முடியும், எப்போதுமே இணைந்து செயல்பட்டால் நம் வாழ்வாதாரத்தைக் காப்பாற்ற முடியும்” என்று தெரிவித்துள்ளார்.
source https://www.vikatan.com/health/international/there-may-never-be-no-corona-vaccines-who-has-said
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக