பா.ஜ.க-வின் மாநிலத் தலைவராக எல்.முருகன் கடந்த மார்ச் மாதம் பொறுப்பேற்றார். அதன் பிறகு அந்தக் கட்சியின் முதல் மாநிலச் செயற்குழுக் கூட்டம் ஆகஸ்ட் 24-ம் தேதி நடைபெற்றது. காணொலி வாயிலாக நடைபெற்ற அந்தக் கூட்டத்தில், தமிழகம் முழுவதிலுமிருந்து பா.ஜ.க-வின் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர். டெல்லி தலைமையகத்திலிருந்து பா.ஜ.க-வின் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, தமிழகப் பொறுப்பாளரும் தேசிய பொதுச் செயலாளருமான முரளிதர் ராவ் ஆகியோர் பங்கேற்றனர்.
அந்தக் கூட்டத்தில் பேசிய ஜே.பி.நட்டா, தி.மு.க-வைக் கடுமையாக விமர்சித்தார். ``தேசவிரோதிகளின் புகலிடமாக தமிழ்நாடு இருக்கிறது. மாநில அரசு நிர்வாகமும், தி.மு.க-வும் தேசத்துக்கு விரோதமாகச் செயல்படுபவர்களுக்கு அடைக்கலம் கொடுக்கின்றன. தேசநலனுக்கு எதிராகச் செயல்படும் அப்படிப்பட்ட நபர்களுக்கு பா.ஜ.க தக்க பதிலடி கொடுக்க வேண்டும். முருகக் கடவுளை இழிவுபடுத்திய கறுப்பர் கூட்டத்துக்கு எதிராக பா.ஜ.க அமைதியான வழியில் போராட்டம் நடத்தியது. தமிழ்நாடு அரசு நிர்வாகமும் அரசியல் கட்சிகளும் பிரிவினைவாத சக்திகளுக்கு எதிராக விழிப்புடன் இருக்க வேண்டும். தி.மு.க எப்போதுமே தேசவிரோத உணர்வைத் தூண்டிவிடும் கட்சியாக இருக்கிறது’’ என்றார் ஜே.பி.நட்டா.
பா.ஜ.க-வின் தேசியத் தலைவரின் நேரடியான இந்தத் தாக்குதலுக்கு உடனடியாக பதிலடி கொடுத்த தி.மு.க தலைவர் ஸ்டாலின், ``தமிழ்ப் பண்பாட்டுக்கும் இந்திய ஒருமைப்பாட்டுக்கும் ஒரே எதிரி பா.ஜ.க-தான்” என்றார். ``பா.ஜ.க-வின் செயற்குழுக் கூட்டத்தில் பேசிய ஜே.பி.நட்டா, தன் கட்சியினருக்கு ஆக்கபூர்வமான ஆலோசனைகளை சொல்வதற்கு பதிலாக தி.மு.க-வைத் தேவையின்றி சீண்டியிருக்கிறார். `மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க., வளர்ச்சிக்கு எதிரான கட்சி, தேசிய உணர்வுக்கு எதிராக உணர்ச்சிகளைத் தூண்டிவிட்டு சீர்குலைக்கும் கட்சி’ என்று ஜே.பி.நட்டா பேசியிருக்கிறார். தி.மு.க என்பது ஜனநாயக இயக்கம். தேச உணர்வில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டு பாடுபட்டுவரும் இயக்கம்” என்று நீண்ட அறிக்கை ஒன்றை ஸ்டாலின் வெளியிட்டிருக்கிறார்.
இந்த விவகாரம் குறித்து பா.ஜ.க-வின் மாநிலத் துணைத் தலைவர் புரட்சிக்கவிதாசனிடம் பேசினோம். ``தேசத்துக்கு விரோதமாகவும், இந்து தெய்வங்களுக்கு எதிராகவும் மற்ற மாநிலங்களைவிட தமிழ்நாட்டில் அதிகமாகப் பேசப்படுகிறது. இப்படிப்பட்ட பேச்சுகளை ஜனரஞ்சகமாகப் பார்க்கக்கூடிய மாநிலமாக தமிழ்நாடு மாறியிருக்கிறது. உதாரணமாக, காஷ்மீரில் பயங்கரவாதிகள் எப்படிக் கொண்டாடப்படுகிறார்களோ, அதைப்போல தமிழ்நாட்டில் பிரிவினைவாதிகள் கொண்டாடப்படுகிறார்கள். பிரிவினைவாதத்தை தேசவிரோதமாக இங்கு யாரும் பார்க்கவில்லை. அது போன்ற ஒரு மனோபாவத்தை இங்கு வளர்த்துவைத்திருக்கிறார்கள். ஆந்திராவிலோ, கர்நாடகத்திலோ, கேரளாவிலோ இந்து தெய்வங்களுக்கு எதிராக இப்படியெல்லாம் கருத்து சொல்ல முடியாது.
தமிழ்நாட்டில் ராமருக்கு செருப்பு மாலை அணிவிக்க முடிகிறது, முருகக் கடவுளை இழிவுபடுத்த முடிகிறது. இது வேறு எந்த மாநிலத்திலும் முடியாது. இந்து தெய்வங்களை அவமதிப்பவர்களுக்கும், இந்திய தேசியத்தை அவமதிப்பவர்களுக்கும் ஒரு புகலிடமாக தமிழ்நாடு இருக்கிறது. இதைத்தான் எங்கள் கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா குறிப்பிட்டிருக்கிறார். நம் நாட்டின் பிரதமர் வரும்போது, `மோடியே திரும்பிப் போ’ என்று மிகப்பெரிய போராட்டத்தை இங்கு நடத்துகிறார்கள். அவர், இந்த நாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர். அவர் என்ன தேசவிரோதியா... பிரதமர் ஒரு மாநிலத்துக்கு வரக் கூடாது என்று சொன்னால் அதற்கு என்ன பெயர்... இது தேசவிரோதமில்லையா.... உலகம் முழுவதும் திருக்குறளின் பெருமைகளையும், தமிழர்களின் பெருமைகளையும் பிரதமர் மோடி பேசிக்கொண்டிருக்கிறார்.
`சம்ஸ்கிருதத்தைவிட தமிழ் மூத்தமொழி’ என்று பிரதமர் சொல்கிறார். அப்படிப்பட்ட பிரதமரை, `திரும்பிப் போ...’ என்கிறார்கள். இப்படி இந்தியாவுக்கு எதிராக ஒவ்வொரு விஷயத்திலும் பேசுவது ஒரு ஃபேஷனாக இருக்கிறது. அதை முற்போக்காகவும் இங்கு பார்க்கிறார்கள். தமிழக மக்கள் `ரிவர்ஸ் கியர்’ போட்டு இழுத்துச்செல்கிறார்களே என்பதுதான் எங்களுடைய வருத்தம். குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக தமிழ்நாட்டில் நடைபெற்ற போராட்டங்களில் தேசவிரோத முழக்கங்கள் எழுப்பட்டன. அந்தக் கூட்டங்களில் தி.மு.க-வினர் பங்கேற்றனர். அதற்கு என்ன அர்த்தம்? பட்டியலின மக்களுக்கு எதிராக ஆர்.எஸ்.பாரதியும், தயாநிதி மாறனும் பேசுகிறார்கள். இது நவீன தீண்டாமை இல்லையா... அதைத்தான் நாங்கள் கண்டிக்கிறோம்’’ என்றார் புரட்சிக்கவிதாசன்.
Also Read: குட்கா விவகாரம்: அ.தி.மு.க செய்த தவறு... குழப்பத்தில் தி.மு.க - நடந்தது என்ன?
இந்த விவகாரம் குறித்து தி.மு.க-வின் செய்தித் தொடர்பாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரனிடம் பேசினோம். ``வரும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை தி.மு.க பெறப்போகிறது. அதைக் கண்டு பா.ஜ.க பயப்படுகிறது. தி.மு.க பெறப்போகும் அபரிமிதமான வெற்றியில், சிறிது சேதாரத்தையாவது ஏற்படுத்திவிட பா.ஜ.க-வினர் முயல்கிறார்கள். தி.மு.க வெற்றி பெற்று ஆட்சியில் அமர்ந்துவிட்டால், தமிழகத்தில் பா.ஜ.க எந்த ஜென்மத்திலும் பேசப்படாமலேயே போய்விடும். எனவேதான், பா.ஜ.க-வின் மாநிலத் தலைவர்களும், தேசியத் தலைவர்களும் தி.மு.க-வுக்கு எதிராக அவதூறுகளை அள்ளிவீசுகிறார்கள்.
கடந்த ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க-வுக்குக் கிடைத்த மகத்தான வெற்றியை, `ராகுல் காந்திக்கு ஆதரவான அலை’ என்றும், `மோடிக்கு எதிரான ஓட்டு’ என்றும் பா.ஜ.க-வினர் சொல்கிறார்கள். ராகுலை, `பிரதமர் வேட்பாளர்’ என்று முன்னிறுத்தியதே எங்கள் தலைவர்தான். எங்கள் தலைவர்மீது நம்பிக்கைவைத்து தமிழக மக்கள் வாக்களித்தார்கள். அதை பா.ஜ.க-வினரால் ஜீரணிக்க முடியவில்லை. அதனால்தான் தி.மு.க மீது அவர்கள் பாய்கிறார்கள். எலி மாட்டிக்கொண்டால் நம்மீது தாவும். அந்தப் பாய்ச்சல் என்பது நம்மைக் கடிப்பதற்காக அல்ல, பயத்தால் அப்படி அது தாவும். அப்படித்தான், இப்போது பா.ஜ.க தலைவர்கள் தி.மு.க-வை நோக்கிப் பாய்கிறார்கள்.
Also Read: கோப சோனியா, கொந்தளித்த ராகுல்... கட்சிக்குள் எதிர்ப்பு ஏன்?
எதை எதையோ பேசுகிறார்கள். மதத்தையும் சாதியையும்வைத்து மக்களைப் பிரித்து அரசியல் செய்யும் இவர்களை தமிழக மக்கள் நன்றாகவே புரிந்துவைத்திருக்கிறார்கள். மதச் சண்டையை, சாதிச் சண்டையை ஏற்படுத்தித்தான் எல்லா இடங்களிலும் இவர்கள் ஆட்சிக்கு வந்திருக்கிறார்கள். அதுபோல, தமிழ்நாட்டில் கொள்கைரீதியாக அல்லாமல் சாதிச் சண்டை, மதச் சண்டையை ஏற்படுத்தி வெற்றி பெறலாம் என்று பார்க்கிறார்கள். தமிழ்நாட்டில் அவர்களின் திட்டம் தவிடுபொடியாகும்’’ என்கிறார் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்.
எட்டு மாதங்களுக்கு முன்பாகவே, தமிழக சட்டமன்றத் தேர்தல்களம் சூடுபிடிக்க ஆரம்பித்துவிட்டது.
source https://www.vikatan.com/government-and-politics/politics/bjp-and-dmk-tussle-turns-heat-in-tn-political-field
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக