உலகம் கொரோனாவுக்கு முன்பு, கொரோனாவுக்கு பின்பு என்று குறிப்பிடும் வகையில் கடந்த சில மாதங்களில் ஏராளமான மாற்றங்கள் வந்துவிட்டன. தொடக்கத்தில் கொரோனாவில் இருந்து தப்பிக்க வீடுகளில் இருந்த நாம், இப்போது கொரோனாவுடன் வாழப் பழகிக் கொண்டிருக்கிறோம். ஆனால், மருத்துவத் துறையில், மார்ச் மாதம் தொடங்கிய நெருக்கடி இப்போதுவரை தொடர்ந்து கொண்டிருக்கிறது.
Also Read: கோவை: `ஒருபுறம் கொண்டாட்டம்; மறுபுறம் களப்பணியாளரின் மரணம்!’ - கொரோனா அதிர்ச்சி
குடும்பங்களைப் பிரிந்து, உணர்வுகளைத் தொலைத்து கொரோனாவுடன் மல்லுக் கட்டிக் கொண்டிருக்கின்றனர் மருத்துவர்கள். ஆனால், இப்படிப்பட்ட சூழ்நிலையிலும் மருத்துவர்கள் தங்களது பணிகளை தொய்வில்லாமல் சிறப்பாக செய்து வருகின்றனர். அதை உறுதிப்படுத்தும் விதமாக ஓர் சம்பவம் கோவை அரசு மருத்துவமனையில் நடந்துள்ளது.
விக்ரம்குமார் என்ற புலம்பெயர் தொழிலாளி திருப்பூரில் பணியாற்றி வருகிறார். விபத்தில் படுகாயமடைந்து, திருப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வயிற்றுப் பகுதி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. எந்த அளவுக்கு என்றால், விபத்தில் வயிறு கிழிந்து குடலில் துளை ஏற்படும் அளவுக்கு பாதிப்பு. துளியும் தாமதிக்காமல் திருப்பூர் அரசு மருத்துவமனையில், அந்த இளைஞருக்கு அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது.
ஆனால், அது பலனளிக்கவில்லை. ரத்தக்கசிவும் நிற்காததால், ஆம்புலன்ஸ் மூலம் விக்ரம்குமார் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கோவையில் அந்த இளைஞருக்கு மீண்டும் அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்தனர்.
Also Read: நாட்டு வெடிகுண்டைக் கடித்த சிறுவன்! - 4 மணிநேரத்தில் முகத்தை சீரமைத்த அரசு மருத்துவர்கள்
அறுவை சிகிச்சை நிபுணர் வெங்டேசன், உதவி மருத்துவர் முருகதாசன், மயக்கவியல் துறைத் தலைவர் யாஷிங்ஷி, உதவி மருத்துவர் செந்தில்நாதன், பயிற்சி மருத்துவர்கள் சபரிகார்த்திக், பெரியசாமி, செவியலர் விஜயலட்சுமி அடங்கிய மருத்துவக் குழுவினர் நள்ளிரவு 2 மணிக்கு அறுவை சிகிச்சை தொடங்கினர். விக்ரமுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. ஆனால், முடிவுகளுக்கு காத்திருக்காமல் பி.பி.இ கிட் அணிந்து உடனடியாக அறுவை சிகிச்சையை தொடங்கினர்.
காலை 6.30 மணி வரை, கிட்டத்தட்ட 4.30 மணி நேரத்துக்கு நீடித்தது அந்த அறுவை சிகிச்சை. விக்ரம்குமாருக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, இயல்பு நிலைக்குக் கொண்டுவரப்பட்டார். அறுவை சிகிச்சைக்குப் பிறகு அவருக்கு கொரோனாவும் உறுதி செய்யப்பட்டுள்ளது. நெருக்கடியான நேரத்திலும், துரிதமாக செயல்பட்டு இளைஞரின் உயிரைக் காப்பாற்றிய அரசு மருத்துவர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
source https://www.vikatan.com/news/tamilnadu/coimbatore-government-doctors-successfully-performed-surgery-for-migrant-worker
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக