Ad

திங்கள், 24 ஆகஸ்ட், 2020

Congress CWC: `சலசலப்பை ஏற்படுத்திய கடிதம்’ - ராகுல் கருத்தும் அதிருப்தியும்...!

2019 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்குக் கிடைத்த தோல்வியைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு தனது கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் ராகுல் காந்தி. அதைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவராக சோனியா காந்தி பொறுப்பேற்றார். அவர் இடைக்கால தலைவராகப் பொறுப்பேற்றும் ஓராண்டு கடந்துவிட்டது. இதனால் தற்போது, `கட்சிக்குத் தலைவர் யார்?’ என்ற விவாதம் வலுத்துள்ளது. இதற்கிடையே, இன்று காணொலி வாயிலாக காங்கிரஸ் கட்சியின் செயற்குழுக் கூட்டம் நடைபெற்று வருகிறது.

சோனியா காந்தி

இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் குறித்து விவாதங்கள் நடைபெற்று வருகிறது. முன்னதாக அக்கட்சியை சேர்ந்த குலாம் நபி ஆசாத், ஆனந்த் சர்மா, கபில் சிபல், முகுல் வாஸ்னிக், மணீஷ் திவாரி, சசி தரூர், ஹரியானா முன்னாள் முதல்வர் பூபேந்திரசிங் ஹூடா உள்ளிட்ட 24 மூத்த நிர்வாகிகள் மற்றும் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் பலர் இணைந்து ஒரு கடிதத்தை, சோனியா காந்தியிடம் கொடுத்திருக்கிறார்கள். அதில் குறிப்பிடப்பட்டுள்ள விஷயங்கள் இன்னும் அதிகாரபூர்வமாக வெளியாகவில்லை. எனினும், `கட்சியின் அமைப்பை முழுமையாக மாற்றியமைக்குமாறு’ கடிதம் மூலம் கோரிக்கை வைத்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Also Read: `புதிய தலைவர் விவாதம்; சோனியாவிடம் ஒப்படைக்கப்பட்ட கடிதம்!’ - நாளை காங்கிரஸ் செயற்குழுக் கூட்டம்

தற்போது இந்தக் கடிதம் கூட்டத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. ``இடைக்காலத் தலைவராக வந்து ஒரு வருடம் கடந்துவிட்டது. கட்சியின் நலனுக்காக, எனது கடமைகளிலிருந்து என்னை விடுவித்து, மாற்றத்திற்கான ஒரு இடத்தை வைக்க செயற்குழுவை நான் கேட்டுக்கொள்கிறேன்” என சோனியா காந்தி கேட்டுக்கொண்டதாகத் தெரிகிறது.

சோனியா காந்தி - ராகுல் காந்தி

இதனிடையே, ``கட்சித் தலைமையின் சீர்திருத்தங்களுக்காக சோனியா காந்திக்குக் கடிதம் எழுதியது பா.ஜ.கவுடன் இணைந்து செய்யப்பட்ட பணி” என்று ராகுல் காந்தி கூறியதாக, ஏ.என்.ஐ ஊடகம் அவர்களின் சோர்ஸ் மூலம் கிடைத்த தகவலாக வெளியிட்டு இருந்தது. ராகுல் காந்தியின் இந்தக் கருத்து, கடிதம் எழுதிய மூத்த நிர்வாகிகளுக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது.

இந்த நிலையில், ``பா.ஜ.கவுக்கு உதவுவதற்காக இதனை செய்திருப்பதாகவோ அல்லது அக்கட்சியின் உத்தரவின் பேரில் இதைச் செய்திருப்பதாகவோ நிரூபித்தால், தான் ராஜினாமா செய்வேன்” என்று குலாம் நபி ஆசாத் தெரிவித்திருக்கிறார்.

கபில் சிபல் ட்வீட்

ராகுல் காந்தியின் பதிலால், மூத்த காங்கிரஸ் தலைவர் கபில் சிபலும் தனது அதிருப்தியை ட்விட்டர் மூலம் தெரிவித்திருக்கிறார். அவர் தனது ட்விட்டர் பதிவில், `ராகுல் காந்தி, `நாங்கள் பா.ஜ.க-வுடன் கூட்டு வைத்திருக்கிறோம் என்கிறார். ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தில் காங்கிரஸ் கட்சியைப் பாதுகாத்து வெற்றி பெற்றோம். பா.ஜ.க அரசை வீழ்த்த மணிப்பூரில் கட்சியைக் காத்தோம். கடந்த 30 ஆண்டுகளில் எந்தவொரு பிரச்னையிலும் பா.ஜ.கவுக்கு ஆதரவாக ஒரு அறிக்கையும் வெளியிடவில்லை. ஆயினும்கூட`நாங்கள் பா.ஜ.க.வுடன் கூட்டு என்கிறார்கள்” என வருத்தம் தெரிவித்தார்.

இதனிடையே காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஏ.கே அந்தோணி, காங்கிரஸ் நிர்வாகிகளின் கடிதத்தை `துரதிர்ஷ்டவசமானது மற்றும் கொடூரமானது’ என குறிப்பிட்டுள்ளார். முன்னதாக செயற்குழுக் கூட்டத்தில் சோனியா பதவியில் தொடர மன்மோகன் சிங் மற்றும் ஏ.கே.அந்தோணி ஆகியோர் ஆதரவு தெரிவித்ததாகவும் அதற்கு கபில் சிபல் உள்ளிட்ட சில நிர்வாகிகள் மன்மோகன் சிங் மற்றும் அந்தோணி ஆகியோரை விமர்சித்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.



source https://www.vikatan.com/government-and-politics/politics/congress-cwc-meeting-updates

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக