Ad

திங்கள், 24 ஆகஸ்ட், 2020

நாகை: `கொரோனா இல்லை... இருக்கு; மன உளைச்சலில் நாடு திரும்பிய இளைஞர்!’ - நடந்தது என்ன?

சிங்கப்பூரிலிருந்து தாயகம் திரும்பிய இளைஞருக்கு முதலில் கொரோனா இல்லை என்றும், பிறகு இருக்கு என்றும் அலைகழிக்கப்பட்டதால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி தற்போது மீண்டு வந்துள்ளார்.

Nagai government hospital

நாகை மாவட்டம் தரங்கம்பாடியை அடுத்த நல்லாடை கிராமத்தைச் சேர்ந்தவர் பாலகுரு. இவருக்கு மனைவியும் 2 பெண் குழந்தைகளும் உள்ளனர். இவர் கடந்த 18 ஆண்டுகளாக சிங்கப்பூரிலுள்ள தனியார் நிறுவனம் ஒன்றில்  பணிபுரிந்து வருகிறார். இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை சொந்த  ஊருக்கு வந்து செல்வார். சிங்கப்பூரில் 15 தினங்களுக்கு ஒரு முறை அனைவருக்கும் கொரோனா டெஸ்ட் எடுப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். அதன்படி சிங்கப்பூரில் 3 முறை கொரோனா  டெஸ்டுகள்  எடுக்கப்பட்ட பாலகுருக்கு  நெகட்டிவ் என்றே ரிசல்ட் வந்திருக்கிறது.

இந்நிலையில் கடந்த 22 -ம் தேதி சிங்கப்பூரிலிருந்து புறப்படுவதற்கு முன் கம்பெனி மருத்துவரிடம் முழு உடல் பரிசோதனை செய்து, `கொரோனா தொற்று இல்லை’ என்று சான்றிதழ் பெற்று திருச்சி ஏர்போர்ட் வந்திருக்கிறார். திருச்சி ஏர்போர்ட்டில் கொரோனா டெஸ்ட்  எடுக்கப்பட்டு, அங்கிருந்து  நாகப்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு மறுநாள் காலை கொண்டுவந்து,  மீண்டும் ஒரு டெஸ்ட் எடுத்து ஒரு வாரம் மருத்துவமனையில் இருக்க அறிவுறுத்தியுள்ளனர்.

ஆனால் மருத்துவமனை சுகாதாரச்  சீர்கேட்டின்  மையமாக இருப்பதாக கூறும் அவர், பழுதடைந்த படுக்கைகள், துர்நாற்றம் வீசும் கழிவறைகள் என அங்கு தங்க முடியாமல் மருத்துவமனை நிர்வாகம் வழிகாட்டிய தனியார் லாட்ஜ் ஒன்றில் வந்து தங்கியிருக்கிறார். நாளொன்றுக்கு ரூ. 500 வாடகை. உணவு செலவுகள் தனி. இரண்டு நாட்களில் தரவேண்டிய கொரோனா டெஸ்ட்  முடிவை ஒரு வாரம் கழித்து பாலகுரு வலிய சென்று கேட்டபோது தான் சொல்லியிருக்கிறார்கள்.

"உங்களுக்ககு நெகட்டிவ்  என்று ரிசல்ட் வந்துள்ளது. இருந்தாலும் நீங்கள் ஒரு வாரம் கழித்து ஊருக்கு செல்ல முடியும்" என்று கூறியிருக்கிறார்கள். அதன்படி ஒரு வார முடிவில் ஊருக்கு புறப்பட்டபோது மீண்டும் ஒரு டெஸ்ட்  எடுத்து, இரண்டே நாளில்  பாசிட்டிவ் என்று ரிசல்ட் வந்திருப்பதாக கூறி, `மருத்துவமனையில் தங்குகிறீர்களா அல்லது இந்த லாட்ஜிலேயே தனிமைப்படுத்திக் கொள்கிறீர்களா?’ என்று கேட்டிருக்கிறார்கள்.

Mayiladuthurai government hospital

அதன்பின் நடந்தவற்றை பாலகுரு நம்மிடம் விளக்குகிறார், "சிங்கப்பூரில் 3 முறையும், திருச்சி ஏர்போர்ட்டில் 1 முறையும், நாகையில் 1 முறையும் என 5 முறையும் எனக்கு நெகட்டிவ் என்று ரிசல்ட் வந்த நிலையில், திடீரென ஒரு டெஸ்ட் எடுத்து, பாசிட்டிவ் என்று சொல்லி, அந்த மருத்துவமனையில் தங்க முடியாது என்பது தெரிந்தும், லாட்ஜில் தனிமைப்படுத்திக் கொள்கிறீர்களா என்று கேட்கிறார்கள். இதில் ஏதோ உள்ளர்த்தம் இருப்பதாகவே எனக்குத் தோன்றியது.

மேலும் பாசிட்டிவ் என்பதற்கான ஆதாரம் எதுவும் காட்டவில்லை. வாய் மொழியாகவே சொல்கிறார்கள். மேலும் 15 நாட்கள் லாட்ஜில் தங்கினால் அதன்மூலம் சிலருக்கு ஏதோ லாபம் கிடைக்கும் போல் தோன்றியது. எனவே என்னை மயிலாடுதுறைக்கு அனுப்பி விடுங்கள் என்றுக் கேட்டுக்கொண்டேன். அதன்படி மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தார்கள். இங்கு எல்லாமே சிறப்பாக இருந்தது. இங்கு மீண்டும் ஒரு டெஸ்ட் எடுத்ததில் நெகட்டிவ் என்று ரிசல்ட் வந்ததால் வீட்டுக்கு அனுப்பிவிட்டார்கள். ஆனால் நானும் என் குடும்பத்தினரும் அடைந்த மன உளைச்சலை வார்த்தைகளில் சொல்லமுடியாது. தஞ்சை, திருவாரூர் போன்ற இடங்களில் வெளிநாடுகளிலிருந்து வருபவர்களை 5 நாட்கள் மட்டுமே வைத்து அனுப்பிவிடுகிறார்கள். நாகையில்தான் இவ்வளவு பிரச்னைகள்" என்றார்.

Also Read: நாகை: `3 குடும்பத்தாருக்கு முடி வெட்டக் கூடாது!' - அதிர்ச்சி கொடுத்த கிராமப் பஞ்சாயத்து

இதுபற்றி  நாகை அரசு மருத்துவமனை கொரோனா தடுப்பு அலுவலர் லியாகத் அலியிடம் பேசினோம். ``வெளிநாட்டில் இருந்து  வருபவர்களுக்கு  இரண்டு  டெஸ்ட் எடுக்கப்படும். முதல் டெஸ்டில் தெரியாது. இரண்டாவது டெஸ்டில்தான் சரியான முடிவு தெரியும். பாசிட்டிவ் என வந்தால் நாகை அல்லது மயிலாடுதுறை மருத்துவமனையில்தான் இருக்கமுடியும். மறுபடி அவருக்கு மயிலாடுதுறையில் டெஸ்ட் எடுக்க வாய்ப்பில்லை. இதெற்கெல்லாம் நான் ஒண்ணும் சொல்லமுடியாது" என்றார்.



source https://www.vikatan.com/news/tamilnadu/young-man-return-from-abroad-faces-issue-in-corona-testing-results

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக