Ad

செவ்வாய், 25 ஆகஸ்ட், 2020

ஆவின்: விவசாயிகளிடம் பாலை வாங்காமல் திருப்பியனுப்பும் சங்கங்கள்... என்னதான் பிரச்னை?

அத்தியாவசியமான பொருள்கள் வரிசையில் எப்போதும் முதலிடத்தில் இருப்பது பால். கொரோனா ஊரடங்கு காலத்தில் எல்லா கடைகளுமே அடைக்கப்பட்டாலும் பால் விற்பனை மட்டும் முழுமையாக நடந்து வந்தது. இந்த கொரோனா காலகட்டத்தில் ஆவினின் வளர்ச்சி 28 சதவிகிதம் வளர்ந்திருக்கிறது. கடந்த ஆண்டைவிட 10 கோடி ரூபாய் லாபத்தில் இயங்கி வருவதாக ஆவின் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதே நேரம், ``பல இடங்களில், பால் கூட்டுறவு சங்கங்களில் பால் கொள்முதல் செய்யப்படுவதில்லை. சில இடங்களில் குறைந்த விலைக்குப் பால் கொள்முதல் செய்கிறார்கள்" என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. குறிப்பாக சேலம், நாமக்கல், கோவை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்கள் இதில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து பால் உற்பத்தியாளர்கள் சிலரிடம் பேசினோம்.

ஜெயக்குமார்

சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த பால் உற்பத்தியாளர் ஜெயக்குமார், ``உடம்பு ஆரோக்கியத்தைக் கெடுக்குற சாராயத்தை 180 மில்லி 250 ரூபாய் வரைக்கும் விற்பனை செய்யுது அரசாங்கம். ஆனா, ஆரோக்கியத்தைக் கொடுக்குற பால் லிட்டருக்கு ரொம்ப கம்மி விலை கொடுக்குது. இது பகல் கொள்ளை. இப்ப கொரோனா காலம்ங்கிறதால பள்ளிகள், கல்லூரிகள் செயல்படாம இருக்குறதால பால் தேவை குறைஞ்சு போச்சு. அதனால, தனியார் கம்பெனிக்காரங்க பாலை வாங்குறதில்லை. அப்படியே வாங்கினாலும் அடிமாட்டு விலைக்கு வாங்குறாங்க.

சேலம் மாவட்ட ஆவின் பால் உற்பத்தியாளர் சங்கத்தில 7 லட்சம் லிட்டர் பால் கூடுதல் கொள்முதல் ஆகுது. 12,000 டன் பால் பவுடர் ஸ்டாக் இருக்கு. அதனால 10 லிட்டர் பால் ஊத்துனா 2 லிட்டர் பாலை திருப்பிக் கொடுத்திடுறாங்க. இதனால பால் உற்பத்தியாளர்கள் கஷ்டப்படுறோம். தனியார் நிறுவனங்கள் கைவிட்ட நேரத்துல ஆவினைத்தான் நம்பி இருக்கிறோம். ஆனால், ஆவினே பாலை வாங்காம இருக்கலாமா? கொரோனா காலத்திலும் சரி, அதுக்கு முன்னாடியும் சரி… பால் உற்பத்தியாளருக்கு ஆதார விலை ஒரு லிட்டருக்கு சராசரியாக 28 ரூபாய்தான் கொடுக்குறாங்க. இது எங்களுக்குப் போதுமானதாக இல்லை. ஒரு லிட்டர் பால் உற்பத்தி செய்ய 44 ரூபாய் செலவாகிறது. இதனால் ஒரு லிட்டருக்கு நாங்கள் 16 ரூபாய் நஷ்டம் அடைகிறோம். இதைப் பற்றி ஆவின் நிர்வாகம் எந்த அக்கறையும் கொள்வதில்லை’’ என்றார் ஆதங்கத்தோடு.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஐகுந்தம் கிராமத்தைச் சேர்ந்த ஆவினுக்கு பால் ஊற்றி வரும் பால் உற்பத்தியாளர் துரையிடம் பேசினோம். ``எங்க கூட்டுறவு சங்கத்தில ஒரு லிட்டர் பாலை 25 ரூபாய்க்குக் கொள்முதல் பண்றாங்க. பேட், எஸ்.என்.எஃப் எதையும் கணக்குல எடுத்துக்க மாட்டாங்க. எல்லாருக்கும் ஒரே விலைதான். இதே ஊர்ல தனியார் பால் வாங்குறாங்க. அங்க பேட், எஸ்.என்.எஃப்பை பொறுத்து ஒரு லிட்டர் பால் 24 ரூபாய் முதல் 40 ரூபாய் வரைக்கும் வாங்குறாங்க. ஆனா, கவர்மென்ட் சொசைட்டில அந்த மாதிரி இல்ல” என்றார்.

வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை ஆகிய நான்கு மாவட்டங்களில் கொரோனா காரணமாக ஏற்பட்ட மந்த நிலையைக் காரணம் காட்டி ஆவின் நிறுவனம் பால் கொள்முதலைக் குறைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. தனியார் நிறுவனங்களும் அடாவடியாகக் கொள்முதல் விலையைக் குறைத்து விவசாயிகளை வஞ்சித்து வருவதாகவும் புகார் எழுந்துள்ளது.

இதுகுறித்து, வேலூரைச் சேர்ந்த விவசாயி பல்லேரி ராஜா பேசும்போது, ``கொரோனா மந்த நிலைக்கும் பால் கொள்முதலுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. கொள்முதலில் குளறுபடி செய்யவே கூட்டுறவுச் சங்கங்கள் திட்டம் போட்டுள்ளன. ஒரு பகுதியில் 10 கூட்டுறவு சொசைட்டிகள் இருக்கின்றன என்றால் அதில் வாரத்துக்கு ஒரு சொசைட்டியில் 100 லிட்டர் பாலை கொள்முதல் செய்ய மறுத்துத் திருப்பிக் கொடுக்கிறார்கள். ஊரடங்குக்கு முன்புவரை தனியார் நிறுவனங்களில் பாலை ஊற்றிக்கொண்டிருந்தவர்கள், இப்போது கூட்டுறவு சொசைட்டிக்கு வந்தாலும் புறக்கணிக்கப்படுகிறார்கள். பாலில் கிடைக்கும் வருமானத்தை நம்பிதான் வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் லட்சக்கணக்கான குடும்பங்கள் வாழ்கின்றன. பால் உற்பத்தியாளர்களின் வாழ்வாதாரத்தை அரசு காப்பாற்ற வேண்டும்’’ என்றார்.

ராம கவுண்டர்

கிருஷ்ணகிரி மாவட்ட தமிழக விவசாயிகள் மாநிலத் தலைவர் ராம கவுண்டரிடம் பேசினோம். ``மொத்த பால் கொள்முதலில் தற்போது 5-லிருந்து 10 சதவிகிதம் திருப்பி அனுப்பப்படுகிறது. முன்பு இதைவிடக் கூடுதலாக இருந்தது. பால் உற்பத்தியாளர்கள் ஒன்று சேர்ந்து குரல் கொடுத்ததால் தற்போது குறைந்துள்ளது. கொரோனாவால் பால் பொருள்களின் விற்பனை குறைந்துள்ளது. பால் உற்பத்தியாளர்களின் உழைப்பு, பராமரிப்பு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு ஒரு லிட்டருக்கு 40 ரூபாய் வழங்கினால்தான் கட்டுப்படி ஆகும். கொழுப்புச்சத்து, இதரச்சத்து கணக்கில் கொண்டு இப்போது ஆவினில் அதிகபட்சம் 32 ரூபாய் வழங்கப்படுகிறது. தனியார் பால் நிறுவனங்கள் 18 ரூபாய்க்குத்தான் பாலைக் கொள்முதல் செய்கிறார்கள். ஆவின் வழங்கும் பால் விலை போதாது. இதை உயர்த்தி வழங்க வேண்டும். இந்தக் கொரோனா காலத்தில் பால் விவசாயிகளைக் காப்பது ஆவினின் கடமை” என்றார்.

வையாபுரி

இதை ஆமோதித்துப் பேசுகிறார் சேலம் மாவட்டம், தலைவாசல் பகுதியைச் சேர்ந்த ஐக்கிய விவசாயிகள் சங்கத் தலைவர் சி.வையாபுரி. ``தனியார் பால் நிறுவனங்கள், பல இடங்களில் பாலை வாங்க மறுத்து வருகிறது. இந்த நிலையில் ஆவின் எந்த மறுப்புமின்றி விவசாயிகள் கொண்டு வரும் பாலை வாங்க வேண்டும். ஆவின் ஒரு நாளைக்கு 36 லட்சம் லிட்டர் பாலைத்தான் பதப்படுத்த முடியும் என்றால் அதற்கு மேல் வரும் பாலை கையாளும் மாற்று வழிகளை ஆராய வேண்டும். அதற்காக விவசாயிகளிடம் பால் வாங்காமல் திருப்பி அனுப்புவது இரக்கமற்ற செயல். ஏற்கெனவே படாதபாடு பட்டுத்தான் பாலை ஊற்றி வருகிறார்கள். அவர்கள் வயிற்றில் பால் ஊற்றவில்லையென்றாலும் பரவாயில்லை. வயிற்றில் அடிக்காமல் இருந்தால் சரி” என்றார்.

இது தொடர்பாக ஆவின் மேலாண்மை இயக்குநர் வள்ளலாரிடம் பேசினோம். ``இந்த இக்கட்டான காலகட்டத்தில் வழக்கமாகப் பால் ஊற்றும் உற்பத்தியாளர்களுடன் சேர்த்து கூடுதலாக அதிக உற்பத்தியாளர்களிடம் பால் வாங்குகிறோம். ஆவின், பால் கூட்டுறவுச் சங்கம் மூலமாகவே பால் கொள்முதல் செய்கிறது. சில இடங்களில் பால் கூட்டுறவுச் சங்கங்களில் சில முறைகேடுகள் நடப்பதும், அதனால் பாலை கொள்முதல் செய்யாமல் திருப்பி அனுப்புவதாகவும் புகார் வருகிறது. ஆனால், அது சொசைட்டி நிர்வாகிகள் செய்யும் தவறு. அப்படி வரும் புகார்களை விசாரித்துச் சரிசெய்து வருகிறோம். தவறு செய்தவர்கள்மீது நடவடிக்கை எடுத்து வருகிறோம். அதுபோல பல சங்கங்களில் சராசரி விலையாக லிட்டருக்கு 25 ரூபாய் கொடுப்பது போன்ற புகாரும் வருகிறது. அது உண்மைதான். காரணம், பல சங்கங்களில் எஸ்.என்.எஃப் சோதனை செய்யும் ஸ்கிரீனிங் மெஷின்கள் பழுதாகிக் கிடக்கின்றன. அவற்றைச் சரிசெய்யும் பணியைச் செய்து வருகிறோம். பல இடங்களுக்குப் புதிய மெஷின்களை வாங்க ஏற்பாடு செய்திருக்கிறோம்.

வள்ளலார் ஐ.ஏ.எஸ்

சில பகுதிகளில் சங்கத்தில் உறுப்பினராக இருந்தும் பால் ஊற்றாத விவசாயிகள் பெயரில் சங்கப் பணியாளர்கள் மற்றும் நிர்வாகிகள் தனியார் நிறுவனத்தில் லிட்டர் 18 ரூபாய்க்கு பால் வாங்கி, உறுப்பினர் கணக்கில் ஆவினுக்குக் கொடுத்து லிட்டருக்கு 25 ரூபாய் வாங்குவதாகச் செய்தியும் வருகிறது. அந்தச் சொசைட்டியில் வழக்கமான பாலைவிடக் கூடுதலாக வந்தால் கேள்வி எழும் என்பதற்காக உறுப்பினர்கள் பாலை குறைத்துக்கொள்வது, வாங்காமல் விடுவதும் ஆங்காங்கே நடப்பதாகத் தகவல்கள் வருகின்றன. சில பகுதிகளில் இப்படிப் போலி பெயரில் வரும் பாலை வாங்குவதில்லை.

இதனால் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சில பகுதிகளில் வேண்டுமென்றே உறுப்பினரிடம் பால் கொள்முதல் செய்யாமல் திருப்பி அனுப்புவதும் நடக்கிறது. அது போன்ற பகுதிகளில் விசாரித்து, முறைகேட்டில் ஈடுபடுபவர்கள்மீது நடவடிக்கை எடுத்து வருகிறோம். நீங்கள் சொன்ன பகுதிகளில் உடனடியாக ஆய்வு செய்யச் செய்து, பால் கொள்முதல் செய்வதற்கான நடவடிக்கையை எடுக்கிறேன்'' என்றவர், மேலும் சில விவரங்களைப் பகிர்ந்துக்கொண்டார்.

``இதுவரை பால் கொள்முதலில் சில சிக்கல்கள் இருந்தன. பெரும்பாலும் மேனுவல் முறையில் கொள்முதல் நடைபெறுகிறது. அனைத்தையும் டிஜிட்டல் முறையில் கொண்டு வரும் நடவடிக்கையில் இறங்கியிருக்கிறோம். இனி விவசாயி பால் ஊற்றியவுடன், மெஷினிலிருந்து அவருக்கு ஸ்லிப் வந்துவிடும். செல்போனுக்கு எஸ்.எம்.எஸ் சென்றுவிடும். அவரது வங்கிக் கணக்கில் பணம் சேர்ந்துவிடும். அதற்காக விவசாயிகளிடம் ஆதார் அட்டை, வங்கிக் கணக்கு எண் வாங்கும் பணி நடந்து வருகிறது. அந்த முறை நடைமுறைக்கு வந்தால் சொசைட்டிகளில் நடக்கும் முறைகேடுகள் குறையும். அடுத்ததாகப் பத்து பதினைந்து சொசைட்டிகளின் பால்களைச் சேகரிக்கும் `பல்க் மில்க் கூலர்' மையங்களுக்கு வரும் பாலும் சென்சார் மூலம் கண்காணிக்கப்படும். கம்யூட்டர் முறையில் எடை, எஸ்.என்.எஃப். சரிபார்த்து வாங்கப்படும். இந்த வேலையில் பாதி முடிவடைந்து விட்டது. மூன்றாவதாக டேங்கர் லாரிகளிலும் சென்சார் வைக்கும் முயற்சி ஆய்வில் இருக்கிறது. இதற்காக ராஜஸ்தானில் உள்ள இந்திய அரசு நிறுவனத்திடம் பேசி வருகிறோம். லாரிகளில் ஏற்றும்போது இருக்கும் கொழுப்பு மற்றும் எஸ்.என்.எஃப். இறக்கும்போதும் இருக்க வேண்டும். அதை சென்சார் கண்காணிக்கும். இந்த நடைமுறை விரைவில் செயல்பாட்டுக்கு வரும். அது வந்த பிறகு, முறைகேடு என்பதே இருக்காது.

Aavin Milk

Also Read: அசத்தும் ஆவின் வளர்ச்சி... `களையெடுத்த' ஐ.ஏ.எஸ் அதிகாரிக்கு கொலை மிரட்டல்?

மேலும், இந்தியா முழுவதிலும் பல கூட்டுறவு நிறுவனங்கள் பால் கொள்முதல் விலையைக் குறைத்துவிட்டன. தமிழ்நாடு, கேரளா இரண்டு மாநிலங்கள்தான் விலை குறைக்காத மாநிலங்கள். காரணம் பால் தொழில் மிகப்பெரிய நெருக்கடியில் இருக்கிறது. பவுடர் இருப்பு அதிகமாக இருக்கிறது. அதற்கான உரிய விலை இல்லை. இவை எவ்வாறு இருப்பினும் அரசினுடைய உத்தரவுக்கிணங்க பால் விலையை விவசாயிகளுக்குக் கொடுப்பதற்கு நாங்கள் பல்வேறு முயற்சிகளை எடுத்து அவற்றை எவ்வளவு விரைவாகக் கொடுக்க முடியுமோ அவ்வளவு விரைவாகக் கொடுத்து வருகிறோம். பல்வேறு இடர்பாடுகளுக்கு இடையிலும் விவசாயிகள் எந்த விதத்திலும் பாதிக்கக் கூடாது எனச் செயல்பட்டு வருகிறோம்.

சில இடங்களில் கொள்முதல் மற்றும் விலை குறைவாகக் கொடுப்பது சங்க நிர்வாகிகள் செய்யும் தவறு. தமிழகத்தில் எங்கு தவறு நடந்தாலும் ஆவின் அதிகாரிகள் கவனத்துக்கோ, என்னுடைய கவனத்துக்கோ கொண்டு வந்தால் உடனடி நடவடிக்கை எடுத்துத் தவறு சரிசெய்யப்படும்'' என்றார்.

தற்போதைய நிலையில், சத்துணவில் முட்டைக் கொடுப்பது போல், முட்டையுடன் சேர்த்தோ, தனியாகவோ பால் பவுடரையும் கொடுக்க அரசு முன் வர வேண்டும். அப்படிச் செய்தால் பால் பவுடர் தேங்காது. பால் உற்பத்தியாளர்களின் நலனைக் கொண்டு அரசு இதைச் செயல்படுத்த வேண்டும் என்பது பெரும்பாலான உற்பத்தியாளர்களின் கருத்தாக இருக்கிறது.



source https://www.vikatan.com/government-and-politics/agriculture/milk-producers-suffer-due-to-aavin-milk-procurement-decreased

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக