Ad

செவ்வாய், 25 ஆகஸ்ட், 2020

கொரோனா: `இங்கதான் சவுகரியமா இருக்கு! - அரசு மருத்துவமனைக்கே திரும்பிய கந்தர்வகோட்டை எம்.எல்.ஏ

புதுக்கோட்டை மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த 20ம் தேதி கந்தர்வக்கோட்டை தொகுதி அதிமுக எம்.எல்.ஏ நார்த்தாமலை ஆறுமுகத்திற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர், புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கொரோனா சிறப்பு சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

கொரோனா

இதற்கிடையே, எம்.எல்.ஏ ஆறுமுகத்தின் மூத்த மகன், அவருடைய தம்பி மற்றும் தம்பி மனைவி ஆகியோருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டு கொரோனா சிறப்பு சிகிச்சை வார்டில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அனுமதிக்கப்பட்ட அன்று இரவே எம்.எல்.ஏ அங்கிருந்து திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். எம்.எல்.ஏ தனியார் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெறுவதற்கான ஏற்பாடுகள் அனைத்தையும் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்தான் செய்து கொடுத்தார் என்று கூறப்படுகிறது.

இந்தநிலையில், எம்.எல்.ஏ ஆறுமுகம் கடந்த 4 நாள்களாக திருச்சி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வந்த நிலையில், மீண்டும் 24-ம் தேதி இரவு புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டிருக்கிறார். கொரோனா சிகிச்சைக்காக கந்தர்வக்கோட்டை எம்.எல்.ஏ, மீண்டும் அரசு மருத்துவமனையையே நாடியிருக்கிறார்.

புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அமைச்சர் ஆய்வு

இதுபற்றி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டீன் பூவதியிடம் கேட்டபோது, ``கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு எம்.எல்.ஏ ஆறுமுகம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது, எல்லாருக்கும் போலவே தேவையான ஏற்பாடுகள் செய்தோம். ஆனாலும், தனியார் மருத்துவமனைக்குச் செல்வதாக அவர் விருப்பம் தெரிவித்ததால், இங்கிருந்து மாற்றப்பட்டார்.

இந்தநிலையில்தான், மீண்டும் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொள்வதாக விருப்பம் தெரிவித்து அவராக மீண்டும் வந்துள்ளார். அவரை அனுமதித்து தற்போது மீண்டும் ஒருமுறை டெஸ்ட் எடுத்திருக்கிறோம். 10 நாள் வரையிலும் தனிமைப்படுத்துத இருக்கிறோம். டெஸ்ட் ரிசல்ட் முடிவைப் பொறுத்து அவரை வீட்டுக்கு அனுப்பி, சில தினங்கள் வீட்டில் இருக்க அறிவுறுத்துவோம்" என்றார்.

எம்.எல்.ஏ ஆறுமுகம்

எம்.எல்.ஏ ஆறுமுகத்தை போனில் தொடர்புகொண்டு பேசினோம்.``அரசு மருத்துவமனையிலேயே எல்லா வசதிகளும் ஏற்படுத்தித் தந்தாங்க. விருப்பப்பட்டுதான் தனியார் மருத்துவமனைக்குப் போனேன். தனியார் மருத்துவமனையைவிட, அரசு மருத்துவமனை தான் சவுகரியமாக இருக்கு. அதனால மீண்டும் இங்க வந்திட்டேன். டெஸ்ட் எடுத்திருக்காங்க. தற்போது உடல் நிலை சீராக உள்ளது" என்றார்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/gandarvakkottai-mla-arumugam-shifted-private-to-government-hospital-for-corona-treatment

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக