Ad

சனி, 22 ஆகஸ்ட், 2020

கல்வியில் அமெரிக்காவை மிஞ்சியதா தமிழகம்..?! ஒரு விவாதம்!

கல்வி வளர்ச்சியில் அமெரிக்காவை விஞ்சுகிறதா தமிழகம் என்னும் கட்டுரையில் வாட்ஸ்அப் தகவல் என குறிப்பிடப்பட்டிருந்த தகவல்கள் DreamTN என்னும் புராஜெக்டுக்காக வெளியானவை என்பதை தெரிந்துகொண்டோம்.

DreamTN

கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருந்த தகவல்கள் குறித்தும், அதிலிருக்கும் பிரச்னைகள் குறித்தும் நம்மிடம் பேசினார் DreamTN குழுவின் தன்னார்வலரும், கிஸ்ஃப்லோ நிறுவனத்தின் தலைவருமான சுரேஷ் சம்பந்தம். அவர் கூறுகையில், "DreamTN என்னும் திட்டத்துக்காக வெளியான பவர் பாயின்ட் பிரசன்டேஷனில் இருந்த ஒரு ஸ்லைடு இது. தமிழகம் ஏன் இந்தியாவில் சிறந்த மாநிலம் என்பதற்கான பல்வேறு தகவல்களை நாங்கள் தொடர்ந்து பேசி வருகிறோம். யுனெஸ்கோ தகவல்களை இந்தத் தகவல்களுடன் ஒப்பிடக்கூடாது. காரணம் அவற்றில் Tertiary data எனப்படும் பிற தகவல்களும் அடங்கியிருக்கும். நாங்கள் எடுத்திருப்பது அமெரிக்காவின் National Center for Education Statistics (NCES) மற்றும் All India Survey on Higher Education 2018-19. இந்தத் தரவுகளும் அந்தந்தத் தளங்களிலேயே இருக்கின்றன. மேலும், அவை இரண்டும் தனியார் நிறுவனத் தகவல்கள் அல்ல. அந்தந்த அரசுகள் மிகப்பெரும் குழுக்களை வைத்து செய்யும் தரவுகள். அதனால்தான் அவை சரியானவை என்று கூறுகிறோம்" என்றார்.

அதே வேளையில். உயர்படிப்புக்கான இந்திய GER என்பது 18 முதல் 23 வயது மாணவர்களிடையே கணக்கிடப்படுகிறது. இந்த வயதில் இருக்கும் மொத்த இளைஞர்களுக்கும், மாணவர்களுக்குமான ஒப்பீடு தான் GER. அமெரிக்காவுக்கு இது 18 முதல் 24 வயது மாணாக்கர்களுக்கு இடையே கணக்கிடப்படுகிறது. உலக அளவில் பயன்படுத்தப்படும் GER என்பது 18 முதல் 22 வயது மாணவர்களுக்கு இடையே கணக்கிடப்படுகிறது. இப்படியாக வயது அளவிலேயே மாற்றங்கள் கொண்டிருக்கும் இரு தேசங்களின் மதிப்பீடுகளை ஒப்பிடுவதைத்தான் சுட்டிக்காட்டி இருந்தோம்.

கல்வி

Also Read: கல்வி வளர்ச்சியில் அமெரிக்காவை விஞ்சுகிறதா தமிழ்நாடு? #GER #FactCheck

இந்தியாவின் GER என All India Survey on Higher Education 2018-19-ல் குறிப்பிடப்பட்டிருப்பது 26 சதவிகிதம். அதே ஆய்வறிக்கையில் உலக GER கணக்கின்படி எடுத்துக்கொண்டால், இந்தியாவின் GER-ஐ 30% என மாற்றியிருக்கிறார்கள். காரணம் மாணவர்களின் வயது எண்ணிக்கையில் நிகழும் மாற்றங்கள். அப்படியாகத்தான் யுனெஸ்கோவுக்கு ஒவ்வொரு தேசமும் 18-22 வயதினருக்கான தகவல்களை மட்டும் தந்திருக்கிறார்கள். ஆனால், யுனெஸ்கோவோ இந்திய அரசாங்கமோ 18-22 வயதினருக்கான பட்டியலில் மாநிலங்களுக்கான அளவீடுகளை வெளியிடவில்லை. இதன் பொருட்டே இந்த ஒப்பீடுகளின் நம்பகத்தன்மையை கேள்வி எழுப்பியிருந்தோம். உதாரணமாக 18 முதல் 23 வயது வரை உள்ள மாணவர்கள் 4 லட்சம் என்றால், அதை 18 முதல் 22 வயது என சுருக்கும்போது 3 லட்சம் என்றாகிவிடும். அப்போது படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிட்டால், எண்ணிக்கையில் மாற்றங்கள் நிகழ் வாய்ப்புகள் அதிகம்.

அதேபோல், இந்தியாவின் பாடத்திட்டம் என்பது 3 அல்லது 4 ஆண்டு பாடப்பிரிவுகள். அமெரிக்காவில் அது இரண்டு அல்லது நான்காண்டுகளுக்கான பாடப்பிரிவுகள். அதனால், இதை முந்தைய கட்டுரையில் பொருந்தா ஒப்பீடுகள் என குறிப்பிட்டிருந்தோம். ஆகவே, தான் ஒரு தேசத்தையும் இன்னொரு தேசத்தையும் ஒப்பீடு செய்வதே நன்மை பயக்கும் என்கிறோம். அதே வேளையில் இந்தியாவில் சிறந்த GER என்பது தமிழகம்தான். அதில் யாருக்கும் எவ்வித மாற்றுக்கருத்துமில்லை.

GER என்பது தேவையற்றது, Eligibility Enrollment Ratio தான் எடுக்க வேண்டும். அப்படி எடுத்தால், இந்தியா டாப் 10 தேசப்பட்டியலில் வந்துவிடும் என்றுகூட ஓர் ஆய்வறிக்கை சொல்கிறது. ஆனால், தற்போது நம்மிடம் இருப்பது GER தான். ஆனால், அதுவுமே தேசத்துக்கு தேசம் மாறுபடுகிறது.

இச்சூழலில் அமெரிக்காவையும் தமிழகத்தையும் ஒப்பீடு செய்யலாமா என்பதை வாசகர்களாகிய உங்களின் முடிவுக்கே விட்டுவிடுகிறோம். உங்களின் சந்தேகங்களை கமென்ட் பாக்ஸில் பதிவு செய்யுங்கள்.


source https://www.vikatan.com/government-and-politics/education/analysis-regarding-the-comparison-of-tamil-nadu-and-america-in-ger

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக