Ad

வெள்ளி, 21 ஆகஸ்ட், 2020

சென்னை: `இன்ஸ்பெக்டர் செய்யச் சொன்னதை சங்கர் செய்யல!' - என்கவுன்டரில் உயிரிழந்தவரின் சகோதரி

சென்னை அயனாவரம் ஆவடி நியூ ரோட்டில் நேற்று அதிகாலை ரௌடி இளநீர் சங்கர், என்கவுன்டர் செய்யப்பட்டார். ரௌடி சங்கர் அரிவாளால் வெட்டியதால் காயமடைந்த காவலர் முபராக் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். என்கவுன்டர் குறித்து சென்னை போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால், நிருபர்களிடம் கூறும்போது என்கவுன்டர் தொடர்பாக மாஜிஸ்திரேட் விசாரணை நடத்தப்படும் எனக் கூறினார். அதன்படி, மாஜிஸ்திரேட் சிவசக்திவேல் கண்ணன், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை, சம்பவம் நடந்த இடம், காவலர் முபராக், அயனாவரம் காவல் நிலையம் ஆகிய இடங்களில் விசாரணை நடத்தினார்.

சங்கரின் குடும்பத்தினர்

என்கவுன்டர் நடந்த இடத்திலிருந்து 3 கிலோ கஞ்சா, அரிவாள் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளன. கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் மாஜிஸ்திரேட் விசாரணை செய்தபோது சங்கரின் குடும்பத்தினர் கண்ணீர்மல்க சில முக்கிய தகவல்களைத் தெரிவித்தனர். பின்னர் சங்கரின் சகோதரி ரேணுகா நிருபர்களிடம் கூறுகையில், ``என்னுடைய சகோதரன் சங்கரை போலீஸார் திட்டமிட்டு கொலை செய்துள்ளனர். சில தினங்களுக்கு முன் இன்ஸ்பெக்டர் நடராஜ் மீது, பெண் ஒருவர் பாலியல் புகார் கொடுத்தார். அந்தப் பெண்ணை கொலை செய்ய சங்கரை இன்ஸ்பெக்டர் தரப்பு வற்புறுத்தியுள்ளது.

ஆனால், சங்கர் அதற்கு மறுத்துள்ளார். அதனால்தான் அவரை என்கவுன்டர் செய்துவிட்டனர். இந்தத் தகவலை மாஜிஸ்திரேட்டிடம் கூறியுள்ளோம். நீதி கிடைக்க வேண்டும்" என்றார் கண்ணீர்மல்க.

கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை பிணவறையில் ரௌடி இளநீர் சங்கரின் சடலம் வைக்கப்பட்டுள்ளது. நேற்று நேரமானதால் அவரின் சடலம் பிரேத பரிசோதனை செய்யப்படவில்லை. அதனால் இன்று (22.8.2020) அவரின் சடலம் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.

என்கவுன்டர் நடந்த இடம்

இன்ஸ்பெக்டர் நடராஜனிடம் மாஜிஸ்திரேட் சிவசக்திவேல் கண்ணன் விசாரித்துள்ளார். அப்போது அங்கு என்ன நடந்தது என்பதை விரிவாக இன்ஸ்பெக்டர் நடராஜன் தெரிவித்துள்ளார். இந்தநிலையில், சங்கரின் குடும்பத்தினர் இன்ஸ்பெக்டர் மீது கூறியுள்ளார் புகார் தொடர்பாக விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. முதலில் புகாரளித்த பெண்ணிடம் விசாரணை நடத்தப்படவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையில் அயனாவரம் காவல் நிலையத்தில் சொகுசு கார் ஒன்று பறிமுதல் செய்யப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அது, சங்கரின் கார் என்றும் அந்தக்காரில் விஐபி பாஸ் ஓட்டப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

சங்கர் என்கவுன்டருக்குப் பின்னால், கஞ்சா பிசினஸ் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. ரௌட இளநீர் சங்கரும் கஞ்சா பிசினஸில் சில பிரபல ரவுடிகளுடன் சேர்ந்து ஈடுபட்டு வந்துள்ளார். கஞ்சா, குட்கா விற்பனையைத் தடுக்க சென்னை போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவிட்டதையடுத்து சமீபகாலமாக கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதைபொருள்கள் ரெய்டை சென்னை மாநகர போலீஸார் தீவிரப்படுத்தி கிலோ கணக்கில் கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதை பொருள்களை பறிமுதல் செய்துவருகின்றனர்.

ரவுடி சங்கர்

Also Read: சென்னை: `மூன்று கொலைகள்; 51 வழக்குகள்' - ரௌடி சங்கர் என்கவுன்ட்டர் பின்னணி

ஆவடி அருகே காட்டூர் பகுதியில் உள்ள குடோனில், 2 கோடி ரூபாய் மதிப்புள்ள, 25 டன் குட்கா போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் மூன்று பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். ஊரடங்கில் சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கஞ்சா விற்பனை அதிகரித்துள்ளதால் நீண்டநாள்களாக தேடப்பட்டு வந்த ரௌடி இளநீர் சங்கரையும் மற்றும் அவரின் கூட்டாளிகளான பெண் உள்பட 3 பேரை அயனாவரம் போலீஸார் பிடித்தனர். அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க போலீஸார் முடிவு செய்துள்ளனர்.

இன்ஸ்பெக்டர் நடராஜ் மீது புகாரளித்த பெண்ணைக் குறிப்பிட்ட செல்போன் நம்பரில் தொடர்பு கொண்டபோது அந்தப் பெண்ணின் அம்மா பேசினார். தன்னுடைய மகளுக்கும் தனக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை. அதனால் அவளிடமே பேசிக் கொள்ளுங்கள் என்று கூணி இணைப்பை அவர் துண்டித்துவிட்டார்.

இன்ஸ்பெக்டர் நடராஜை செல்போனில் தொடர்பு கொண்டபோது அவரும் பதிலளிக்கவில்லை. பலமுறைத் தொடர்புகொண்டும் நமக்குப் பதில் கிடைக்கவில்லை. அவர் விளக்கமளிக்கும் நிலையில், உரிய பரிசீலனைக்குப்பிறகு அதையும் வெளியிடத் தயாராக உள்ளோம்.

என்கவுன்டர் சம்பவத்தையடுத்து சங்கரின் குடும்பத்தினர் சொல்லும் குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



source https://www.vikatan.com/news/crime/chennai-rowdys-sister-gives-statement-to-magistrate-over-encounter

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக