கடந்த 2007-ம் ஆண்டில் இலங்கை விடுதலை புலிகள் அமைப்பிற்கு கடத்தி செல்லப்பட்ட போது பிடிபட்ட வெடிமருந்து தயாரிக்கப்படும் பயன்படும் பொட்டாசியம் குளோரைடு கமுதி அருகே 13 ஆண்டுகளுக்கு பின் செயலிழக்கச் செய்யப்பட்டது.
லெபனான் தலைநகர் பெய்ரூட் துறைமுகக் கிடங்கில் வைக்கப்பட்டிருந்த சுமார் 27.5 லட்சம் கிலோ அம்மோனியம் நைட்ரேட் மருந்து கடந்த 4ம் தேதி வெடித்தது. 6 ஆண்டுகளாக துறைமுகக் கிடங்கில் வைக்கப்பட்டிருந்த இந்த ரசாயன பொருளால் ஏற்பட்ட விபத்தில் பல நூறு கட்டடங்கள் தரைமட்டமாகின. இதில் சிக்கிய 150-க்கும் மேற்பட்டோர் உயிர் இழந்தனர். 4,000-த்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இச்சம்பவத்தால் லெபனானில் அரசுக்கு எதிராக போராட்டங்கள் நடந்து வருகின்றன. இதையடுத்து, மொத்த அமைச்சரவையும் ராஜினாமா செய்தது.
Also Read: `5 ஆண்டுகள்; 750 டன்!’ - லெபனான் விபத்துக்குக் காரணமான அமோனியம் நைட்ரேட் சென்னையிலும் சேமிப்பு
இந்நிலையில், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் சுங்கத்துறை அதிகாரிகளால் சென்னையில் கைபற்றப்பட்ட 7.4 லட்சம் கிலோ அமோனியம் நைட்ரேட் மணலி பகுதியில் உள்ள குடோனில் வைக்கப்பட்டிருப்பதாகவும், லெபனானில் ஏற்பட்ட விபத்து ஏற்படும் முன் அவற்றை அப்புறப்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இதையடுத்து அவை அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டன. இதேபோல் 13 ஆண்டுகளுக்கு முன் க்யூ பிரிவு போலீஸார் கைபற்றிய 2.50 லட்சம் டன் வெடிமருந்து கமுதியில் உள்ள ஆயுதப்படை முகாமில் வைக்கப்பட்டிருந்தது. இதனால் ஆயுதப்படை முகாமின் அருகாமையில் வசித்து வரும் மக்கள் அச்சத்துடனேயே இருந்து வந்தனர்.
ராமநாதபுரத்திலிருந்து கடல் வழியாக கடந்த 2007 -ல், இலங்கை விடுதலை புலிகள் கடத்த முயன்ற 2.5 டன் பொட்டாசியம் குளோரைடு க்யூ பிரிவு போலீஸாரிடம் பிடிபட்டது. வெடிகுண்டுகள் தயாரிக்கப் பயன்படும் இவற்றின் அப்போதைய மதிப்பு ஒரு கோடியே 75 லட்ச ரூபாய். பரமக்குடி நீதிமன்றத்தில் நடந்து வந்த இது தொடர்பான வழக்கு விசாரணை முடிந்த நிலையில், ராமநாதபுரம் நீதிமன்றத்தில் நடைபெற்ற மேல்முறையீட்டு வழக்கு கடந்த மார்ச் மாதம் முடிவடைந்தது கடத்தலில் ஈடுபட்டவருக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. இவ்வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட 50 கிலோ எடையுள்ள 50 மூட்டை பொட்டாசியம் குளோரைடு, கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் கமுதி தனி ஆயுதப்படை வளாகத்தில் உள்ள தனி அறையில் வைத்து பாதுகாக்கப்பட்டு வருகிறது.
ஆபத்தை விளைவிக்க கூடிய பொட்டாசியம் குளோரைடு வெடிமருந்துப் பொருளை அழிக்க நீதிமன்ற உத்தரவினை போலீஸார் எதிர்பார்த்திருந்த நிலையில், சென்னை வெடிபொருள் கண்டறிதல், அழித்தல் குழுவுக்கு தகவல் அளிக்கப்பட்டு பாதுகாப்பான முறையில் விரைவில் அவற்றை அழிக்க, நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து சென்னை வெடிபொருள் கண்டறிதல், அழித்தல் இன்ஸ்பெக்டர் ஜெயராமன் தலைமையில், போலீஸார், முதல் கட்டமாக 500 கிலோ வெடி மருந்து பொருட்களை கமுதி அருகே சேகநாதபுரம் பகுதியில் வைத்து செயல் இழக்க செய்து அழித்தனர். இதனால் அப்பகுதியில் புகை மண்டலமாக காணப்பட்டது.
இதுகுறித்து சென்னை வெடிபொருள் கண்டறிதல், அழித்தல் இன்ஸ்பெக்டர் ஜெயராமன் கூறுகையில்,``ஒரே நேரத்தில் இரண்டரை டன் வெடி மருந்து மூலப்பொருளான பொட்டாசியம் குளோரைடை அழிக்க முடியாது. எனவே, கொஞ்சம், கொஞ்சமாக அழிக்க முடிவு செய்யபட்டுள்ளது’’ என்றார். போலீஸாரின் இந்த நடவடிக்கையால் அப்பகுதி மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
source https://www.vikatan.com/news/tamilnadu/25-tonnes-of-explosives-destroyed-after-13-years-in-kamuthi
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக