Ad

வெள்ளி, 21 ஆகஸ்ட், 2020

செங்கல்பட்டு:`என்னுடன் பழகுவதை நிறுத்திக்கொள்!' - அழகுக்கலை நிபுணருக்காக கொலைசெய்த நண்பர்கள்

செங்கல்பட்டு மாவட்டம் மேற்கு தாம்பரத்தை சேர்ந்தவர் நிரஞ்சன் (20). இவர், டாட்டூ போடும் வேலை செய்து வந்தார். இவர், கடந்த 18-ம்தேதி காட்டாங்கொளத்தூர் பஸ் நிறுத்தம் அருகே தாம்பரம் நோக்கி பைக்கில் சென்றார். அப்போது காரில் வந்த 4 பேர் கொண்ட கும்பல், நிரஞ்சன் சென்ற பைக்கை வேகமாக மோதி இடித்து தள்ளியது. பின்னர், நிரஞ்சனை உருட்டுக்கட்டையால் தாக்கிவிட்டு தப்பிச் சென்றது. ரத்தவெள்ளத்தில் கிடந்த நிரஞ்சன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து மறைமலைநகர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர்.

அழகுகலை நிபுணர் அமலா

செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடி அருகே போலீஸார், வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த ஒரு காரை போலீஸார் வழிமறித்து சோதனை செய்தனர். போலீஸாரிடம் காரில் இருந்த 4 இளைஞர்கள், டிரைவர் உள்பட 5 பேரும் முன்னுக்குப்பின் முரணான தகவல்களைத் தெரிவித்தனர். இதையடுத்து அவர்களை போலீஸார் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். விசாரணையில் நிரஞ்சனை கொலை செய்ததை அவர்கள் ஒப்புக் கொண்டனர்.

இதையடுத்து நிரஞ்சன் கொலை வழக்கில் மறைமலைநகரைச் சேர்ந்த சபரிநாதன் (19), தினேஷ் (31), கோகுல் (21), பாலாஜி (19), அருண் (19) ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். அவர்கள் 5 பேரும் அளித்த தகவலின்பேரில் காட்டாங்கொளத்தூர் ராஜாஜி தெருவில் வசிக்கும் நிரஞ்சனின் தோழி அமலாதேவி (25) என்பவரையும் போலீஸார் கைது செய்தனர். போலீஸ் விசாரணையில் அமலாதேவி பரபரப்பான தகவல்களைத் தெரிவித்துள்ளார்.

எப்ஐஆர்

இதுகுறித்து மறைமலைநகர் காவல் நிலையத்தில் நிரஞ்சனின் தந்தை கண்ணியப்பன் கொடுத்த புகாரில், நான் தாம்பரம் மேற்கு லட்சுமிபுரம் காந்திரோட்டில் குடியிருந்து வருகிறேன். எனக்கு 2 மகள்கள், நிரஞ்சன் (22) என்ற மகன். நிரஞ்சனுக்கு இன்னும் திருமணமாகவில்லை. பொத்தேரியில் உள்ள கடையில் பச்சை குத்தும் வேலை செய்து வந்தான். அப்போது காட்டாங்கொளத்தூர் பகுதியைச் சேர்ந்த அமலாதேவி என்பவர் தைலாவரத்தில் அழகுக் கலை நிபுணராக வேலைப்பார்த்து வந்தார். அமலாதேவிக்கு 2016- ம் ஆண்டு பிரகதீஸ் என்பவருடன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு மூன்றரை வயதில் மகன் உள்ளனர். அமலாதேவியும் பிரகதீஸும் பிரிந்து வாழ்கின்றனர்.

Also Read: சென்னை: `தங்கையின் காதல், தொழில் போட்டி; சுதந்திர தினச் சம்பவம்!' - பழிக்குப் பழியாக ரௌடி கொலை

அமலாதேவிக்கும் தினேஷ் என்ற இளைருக்கும் பழக்கம் உள்ளது. என் மகனுக்கும் (நிரஞ்சன்) அமலாதேவிக்கும் பிரச்னை ஏற்பட்டு இனிமேல் என்னுடன் பழகுவதை நிறுத்திக்கொள், வீட்டிற்கு வருவதையும்நிறுத்திக் கொள் என்று அமலாதேவி என் மகனை மிரட்டியுள்ளார். அதையும் மீறி வீட்டிற்கு வந்தால் நான் தினேஷிடம் கூறி உன்னைக் கொன்றுவிடுவேன் என்று கூறியுள்ளார். கடந்த வாரம் என் வீட்டிற்கு நண்பர்களுடன் வந்த தினேஷ், என் மகன் நிரஞ்சன் குறித்து விசாரித்தார். அப்போது நிரஞ்சன் இனிமேல் காட்டாங்கொளத்தூர் பக்கம் வந்தால் நாங்கள் அவனை கொன்றுவிடுவோம் என்று என்னிடம் மிரட்டிவிட்டு சென்றனர்.

கொலை

கடந்த 18.8.2020-ல் அமலாதேவி, என் மகனுடன் செல்போனில் பேசியுள்ளார். பின்னர் நிரஞ்சன் பைக்கில் காட்டாங்கொளத்தூருக்கு செல்வதாக என்னிடம் கூறினான். அதனால், நான் தாவது விபரீதம் ஏற்பட போகிறது என்று நினைத்து என் உறவினருடன் காட்டாங்கொளத்தூருக்குச் சென்றேன். நிரஞ்சன் அமலாதேவியைச் சந்தித்து பேசியபோது அவர்களுக்குள் பிரச்னை ஏற்பட்டுள்ளது. உடனே அமலாதேவி, தினேஷுக்கு போன் செய்து, நிரஞ்சன் என்னை தொல்லை செய்கிறான் உடனடியாக வரும்படி கூறியுள்ளார்.

அதன்படி தினேஷ், அவரின் நண்பர்கள் சபரிநாதன், கோகுல், பாலாஜி அருண் ஆகியோர் காரில் வந்தனர். காட்டங்கொளத்தூர் பஸ் நிலையம் அருகே நிரஞ்சனை வழிமறித்து அடித்து கொலை செய்துள்ளனர். என் மகனை கொலை செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டிருந்தார்.

Also Read: சென்னை: `மூன்று கொலைகள்; 51 வழக்குகள்' - ரௌடி சங்கர் என்கவுன்ட்டர் பின்னணி

புகாரின்பேரில் எஸ்.ஐ ஆனந்தஜோதி ஐபிசி 147, 148, 341, 302 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்துள்ளார். இதுகுறித்து போலீஸ் உயரதிகாரி ஒருவர் நம்மிடம் கூறுகையில், ``அமலாதேவி, அழகுக் கலை நிபுணராக உள்ளார். கணவரைப்பிரிந்து வாழ்ந்துவருகிறார்.

அப்போதுதான் நிரஞ்சனுக்கும் அமலாவுக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்தச் சமயத்தில் அமலாவுக்கு மறைமலைநகரைச் சேரந்த தினேஷ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இதனால் நிரஞ்சனுக்கும் அமலாவுக்கும் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அமலா, தினேஷிடம் விவரத்தைக் கூறினார்.

கொலை

பின்னர், நிரஞ்சனை கொலை செய்ய அவர்கள் திட்டமிட்டனர். காட்டாங்கொளத்தூர் பஸ் நிலையம் அருகே நிரஞ்சனை தினேஷ் தலைமையிலான கும்பல் அடித்து கொலை செய்துள்ளது. அந்தத் தகவலை அமலாவிடமும் போனில் தெரிவித்துள்ளனர். இதையடுத்து 6 பேரையும் கைது செய்து செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளோம். அமலாவின் தனிப்பட்ட வாழ்க்கையில் காதலும், கல்யாணமும் சரியாக அமையவில்லை. அதனால்தான், அவர் கொலை வழக்கில் சிக்கிக் கொண்டார். அமலாவுக்காக 5 பேர் நிரஞ்சனை கொலை செய்துள்ளனர்" என்றார்.



source https://www.vikatan.com/news/crime/chengalpattu-youth-murdered-and-his-lover-arrested

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக