Ad

வெள்ளி, 21 ஆகஸ்ட், 2020

`புதிய தாலுகா; 30 ஆண்டு காத்திருக்கணும்!’ - ராணிப்பேட்டை கலெக்டர்

வேலூரில் இருந்து பிரித்து உருவாக்கப்பட்ட ராணிப்பேட்டை மாவட்டத்தில், புதிய கட்டுமானப் பணிகளை நேற்று முன்தினம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைத்தார். அதைத்தொடர்ந்து, அரக்கோணம் பி.டி.ஓ அலுவலக அடிக்கல்நாட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டுபேசிய ராணிப்பேட்டை கலெக்டர் திவ்யதர்ஷினி, ``மாவட்டத் தலைநகரில் இருந்து 1 மணி நேரத்தில் எந்த இடத்துக்கு வேண்டுமானாலும் செல்லும் வகையில்தான் ராணிப்பேட்டை மாவட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

ராணிப்பேட்டை

மேலும், புதிய வருவாய் கோட்டம் தோற்றுவிக்கப்பட்டு தாலுகாக்களும் பிரிக்கப்பட்டுள்ளது. எனவே, அடுத்த 30 ஆண்டுகளுக்கு இந்த மாவட்டத்தில் புதிய தாலுகா உருவாக வாய்ப்பில்லை. அரக்கோணம் பி.டி.ஓ அலுவலகக் கட்டடம் ஓராண்டில் கட்டி முடிக்கப்படும். அரக்கோணத்தில் மார்ச் 29-ம் தேதியன்றுதான் முதல் கொரோனா நோயாளி கண்டுபிடிக்கப்பட்டார்.

அந்த நேரத்தில், நோய் பரவலைத் தடுக்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளுக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு தந்தனர். கொரோனாவுக்கு மருந்து சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதும், மாஸ்க் அணிவது மட்டுமே. இப்போது, கொரோனா சாதாரண காய்ச்சல் போன்று.. வந்தால் போய்விடும் என்ற நிலைமை உள்ளது. அதேநேரம், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களும் இறக்க நேரிடுகிறது.

கலெக்டர் திவ்யதர்ஷினி

நம்முடைய மாவட்டத்தில் தினமும் 1,400 பேருக்கு தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. இதில் 10 சதவிகித பேருக்குத்தான் `பாசிட்டிவ்’ வருகிறது. கொரோனா நோயாளிகளுக்காக 3,419 படுக்கை வசதிகளும் தயார் நிலையில் உள்ளது. 12 கோவிட் கேர் சென்டர்கள் இயங்கி வருகின்றன. நோயாளிகளின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால், 3 கோவிட் கேர் சென்டர்கள் மூடப்படும் நிலையில் உள்ளது. 6,000 நோயாளிகள் வந்தாலும் சிகிச்சை அளிப்பதற்கான வசதிகளும் ஏற்படுத்தப்படும்’’ என்றார்.



source https://www.vikatan.com/news/tamilnadu/no-new-taluks-in-another-30-years-says-ranipet-collector-divyadarshini

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக