Ad

திங்கள், 24 ஆகஸ்ட், 2020

``கைதியைப்போல உணர்ந்தேன்; வாழ்க்கையை வெறுத்தேன்!" - கடந்த காலத்தைப் பகிரும் பாரிஸ் ஹில்டன்

உலகளவில் பிரபலங்களாக இருக்கும் பலரின் தனிப்பட்ட வாழ்க்கை அல்லது கடந்து வந்த பாதை என்பது மிகவும் வேதனைக்குரிய சோகமான நிகழ்வுகள் நிறைந்ததாகவே இருக்கும். திரைக்கு முன்னால் அல்லது பொதுவெளியில் தோன்றும் அவர்களின் வாழ்க்கை பிம்பத்தை உடைத்து தங்களது வாழ்க்கையில் நடந்தவற்றைப் பிரபலங்கள் புத்தகமாகவோ, ஆவணப்படமாகவோ வெளியிடும்போது அவை அதிர்ச்சி அலையை ஏற்படுத்தலாம். அவ்வகையில், அமெரிக்காவின் நடிகையும் மாடலும் தொழிலதிபருமான பாரிஸ் ஹில்டன் வெளியிட உள்ள ஆவணப்படம் ஒன்றில் இடம்பெற்றுள்ள அவரின் இளமைக்காலம் பற்றிய தகவல்கள் பலரையும் கலங்க வைத்துள்ளன. பாரிஸ் ஹில்டன் பற்றிய ஆவணப்படம் `திஸ் இஸ் பாரிஸ்’ என்ற தலைப்பில் வெளியாக உள்ளது என்பதும் கவனிக்கத்தக்கது.

பாரிஸ் ஹில்டன்

`தி சிம்பிள் லைஃப்’ என்ற தொலைக்காட்சி தொடர் 2003-ம் ஆண்டு வெளியானது. இதன் வழியாக பாரிஸ் மிகவும் பிரபலமடைந்தார். அதற்கு முன்பு இருந்த அவரது வாழ்க்கையை இந்த ஆவணப்படம் எடுத்துரைக்கிறது. ஆவணப் படத்தில் தன்னுடைய இளமைக்காலத்தில் அனுபவித்த மனம், உணர்வு மற்றும் உடல் ரீதியான துன்புறுத்தல்களைப் பற்றி பேசியுள்ளார். ஆவணப்படம் தொடர்பாக 39 வயதான பாரிஸ் பேசும்போது, ``என் வாழ்க்கையில் நடந்த உண்மைகளை இவ்வளவு காலமாகப் புதைத்து வைத்திருந்தேன். ஆனால், நான் வலிமையான பெண்ணாக உருவானதில் பெருமையடைகிறேன். என்னுடைய வாழ்க்கையில் அனைத்து விஷயங்களும் எளிதாகக் கிடைத்துவிட்டதாக மக்கள் கருதலாம். ஆனால், அவர்களுக்கு எனது உண்மையான உலகத்தைக் காட்ட விரும்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

Also Read: மிஸ் இந்தியாவில் 21, யு.பி.எஸ்.சி-யில் 93... மாடல் ஐஸ்வர்யா ஷெரன் ஐ.ஏ.எஸ் ஆன கதை!

பாரிஸ் ஹில்டன் தனது தொடக்க காலத்தில் நியூயார்க்கில் தன் பெற்றோர் மற்றும் உடன் பிறப்புகளுடன் வசித்து வந்தார். ``பெற்றோருடன் இருக்கும்போது கிளப் மற்றும் பார்ட்டிக்கு செல்வது என்பது மிகவும் எளிமையாக இருந்தது. எனினும், என் பெற்றோர் மிகவும் கண்டிப்புடன் இருந்தனர். என்னுடைய மொபைல் போன் மற்றும் கிரெடிட் கார்டுகளைப் பறித்தனர். ஆனால், இவை எதுவும் என்னைத் தடுத்து நிறுத்தவில்லை. நான் என் பாதையில் சென்றுகொண்டிருந்தேன்” என்று நினைவுகளைப் பகிர்ந்துள்ளார். அதிருப்தி அடைந்த பெற்றோர், பாரிஸ் ஹில்டனை 1990-களின் இறுதியில் உறைவிடப் பள்ளிக்கு அனுப்பி வைத்துள்ளனர். சுமார் 11 மாதங்கள் பாரிஸ் அப்பள்ளியில் தங்கியுள்ளார்.

பாரிஸ் ஹில்டன்

பள்ளியில் அவர் தங்கியிருந்த மிகவும் கடினமான அந்த நாள்களை நினைவுகூர்கையில், ``அந்த அனுபவம் எல்லாவற்றையும்விட மிகவும் மோசமானதாக இருக்கும் என்பது எனக்குத் தெரியும். வகுப்புகளில் எங்களால் கவனம் செலுத்த முடியவில்லை. காலையில் தூக்கத்தில் இருந்து எழுந்தது முதல் இரவு தூங்கச் செல்வதுவரை முகத்தின் மேல் கத்தி தொங்கிக்கொண்டிருப்பது போன்ற உணர்வு இருக்கும். தொடர்ந்து எங்களைத் துன்புறுத்திக்கொண்டே இருப்பார்கள். மிகவும் கொடூரமான விஷயங்களை எங்களிடம் சொல்வார்கள். எங்களைப் பற்றி நாங்களே மிகவும் மோசமாக உணரும்படி செய்வார்கள். எங்கள் மனதைத் தளரச் செய்வதையே அவர்கள் குறிக்கோளாக வைத்துச் செயல்பட்டார்கள் என்று நினைக்கிறேன். உடல்ரீதியாக எங்களை மிகவும் துன்புறுத்தினர். அடித்தார்கள். கழுத்தை நெரித்தார்கள். அவர்களைப் பார்த்து அதிகளவில் பயந்தோம்” என வேதனையை வெளிப்படுத்தியிருக்கிறார்.

பாரிஸின் வகுப்புத் தோழர்களும் இந்த ஆவணப்படத்தில் பேசியுள்ளனர். பள்ளியில் அவர்கள் தங்களை துஷ்பிரயோகம் செய்ததையும் கடுமையாகத் தண்டனை அளித்ததையும் கவலையுடன் நினைவுகூர்ந்து பேசியுள்ளனர். அங்கிருந்து மாணவர்கள் தப்பிக்க முயன்றால் குறைந்தது 20 மணி நேரம் அவர்களைத் தனிமைச் சிறையில் வைத்து சித்ரவதை செய்ததாகவும் பாரிஸ் குறிப்பிட்டுள்ளார். ``ஒவ்வொரு நாளும் அழுதுகொண்டே இருப்பேன். மிகவும் பரிதாபமான நிலையில் இருப்பதாக உணர்ந்தேன். ஒரு கைதியைப் போல உணர்ந்தேன். இந்த வாழ்க்கையை வெறுத்தேன். வெளி உலகத் தொடர்பில் இருந்து முழுவதுமாகத் துண்டிக்கப்பட்டேன். இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு ஒருமுறைதான் என் குடும்பத்தினருடன் தொடர்புகொள்ள முடிந்தது. என் கஷ்டங்களை அவர்களுக்குத் தெரிவிக்கவும் ஒருமுறை முயற்சி செய்தேன்” என்றும் தெரிவித்துள்ளார்.

பாரிஸ் ஹில்டன்

பெற்றோருக்கு பாரிஸ் தன் கஷ்டங்களைத் தெரியப்படுத்த முயன்றபோது போனை பறித்துக்கொள்வார்கள் அல்லது கடிதங்கள் வழியாகத் தெரிவிக்கும்போது கிழித்து எறிவார்கள் என்றும் குறிப்பிடுகிறார். இதையடுத்து அங்கிருப்பவர்கள், `யாரும் உங்களை நம்ப மாட்டார்கள். இங்கிருப்பவர்கள் உங்கள் பெற்றோர்களிடம் குழந்தைகள் பொய் சொல்வதாகக் கூறி விடுவார்கள்’ என்று சொல்வார்கள் என்றும் இதனால், என் பெற்றோருக்கு என்ன நடக்கிறது என்பது பற்றி எந்தத் தகவலும் தெரியாது என்றும் வருத்தத்துடன் பாரிஸ் தெரிவித்துள்ளார். தன்னுடைய 18 வயதில் திரும்பி வந்தபோது தன் அனுபவங்கள் குறித்து பேச மறுத்துவிட்டார். ``அதை மீண்டும் நினைவுகூர விரும்பவில்லை” என்று தனது நிலையையும் விளக்கியுள்ளார். வரும் செப்டம்பர் 14-ம் தேதி பாரிஸ் ஹில்டனின் யூடியூப் சேனலில் `திஸ் இஸ் பாரிஸ்’ வெளியாக உள்ளது. இந்த ஆவணப்படத்துக்கு மிகுந்த எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.



source https://www.vikatan.com/news/world/paris-hilton-opens-up-about-abuse-she-faced-during-her-school-days

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக