Ad

திங்கள், 24 ஆகஸ்ட், 2020

`மிஷன் 2021; பா.ஜ.க முதலமைச்சர் வேட்பாளர் ஆகிறாரா கங்குலி?' - தகிக்கும் மேற்குவங்க அரசியல்!

இந்திய கிரிக்கெட் அணியின் சிறந்த கேப்டன்களுள் ஒருவராகக் கருதப்படும் சவுரவ் கங்குலி, மேற்குவங்க மாநில ராஜ வம்சத்தைச் சேர்ந்தவர். இதனாலேயே அம்மாநில மக்களால் `பிரின்ஸ் ஆஃப் கொல்கத்தா' என்று செல்லமாக அழைக்கப்படுகிறார். களத்தில் ஆக்ரோஷமாகச் செயல்பட்ட அவரை கிரிக்கெட் ரசிகர்கள் `தாதா' என்றும் அழைப்பதுண்டு. சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர், பெங்கால் கிரிக்கெட் அசோசியேஷனின் தலைவராக இருந்துவந்த கங்குலி, தன்மீது எந்தவித அரசியல் சாயமும் விழாமல் கவனமாகப் பார்த்துக்கொண்டார்.

பிசிசிஐ தலைவர் கங்குலி

ஆனால், கடந்த ஆண்டு அக்டோபரில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவராக கங்குலி தேர்ந்தெடுக்கபட்டதற்குப் பின்னால் அரசியல் இருந்ததாக அப்போதே பேசப்பட்டது. பல்வேறு பிரச்னைகளுக்கு இடையில் கங்குலிக்கு அந்தப் பொறுப்பு கிடைத்தற்குப் பின்னால், உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் இரண்டு மத்திய அமைச்சர்களின் பங்கு பெரிய அளவுக்கு இருந்ததாகவும் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டது. அமித் ஷாவின் மகன் ஜெய்ஷா, கங்குலிக்குத் துணையாக பி.சி.சி.ஐ-யின் பொருளாளராகப் பொறுப்பேற்றுக்கொண்டதையும் அரசியல் உலகம் உன்னிப்பாக கவனித்தது. `கங்குலி பா.ஜ.க சார்புநிலையை எடுத்துவிட்டார்’ என்றும் மேற்கு வங்க அரசியலில் புகைச்சல் கிளம்பியது.

ஆனால், பி.சி.சி.ஐ தலைவராகத் தான் பொறுப்பேற்றதற்குப் பின்னால் எந்தவோர் அரசியலும் இல்லை எனத் திட்டவட்டமாக மறுத்தார் கங்குலி. பிரபல ஆங்கில இதழ் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், ``பி.சி.சி.ஐ தலைவர் பொறுப்பேற்புக்குப் பின்னால் அரசியல் இல்லை. மேற்குவங்கத்தில் நான் பெற்ற அன்பும் நன்மதிப்பும், ஒரு கிரிக்கெட்டராகவும் தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோ ஹோஸ்டாகவும் நான் நடந்துகொண்டவிதத்தைப் பார்த்து மக்கள் எனக்குக் கொடுத்தவை. மற்றபடி இதில் எந்த அரசியலும் இல்லை'' என்று விளக்கமளித்திருந்தார்.

தந்தை அமித் ஷா-வுடன் ஜெய் ஷா

இந்தசூழலில் மேற்குவங்க அரசு, கங்குலி தலைமையிலான அறக்கட்டளைக்கு அளித்திருந்த நிலத்தை, அவர் சமீபத்தில் திரும்ப அளித்திருப்பதாக ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது. இதையடுத்தே, `கங்குலி பா.ஜ.க-வில் இணையப்போகிறார்’ என்ற பேச்சு மீண்டும் வலுப்பெறத் தொடங்கியிருக்கிறது. மேற்குவங்கத்தை முன்னர் ஆண்ட இடதுசாரி அரசு, கொல்கத்தாவில் நிலமதிப்பு உச்சமாக இருக்கும் சால்ட் லேக் பகுதியில் பள்ளி ஒன்றைக் கட்டுவதற்காக கங்குலி தலைமையிலான 'கங்குலி எஜூகேஷனல் அண்ட் வெல்ஃபேர் சொசைட்டி'க்கு இரண்டு ஏக்கர் நிலத்தை ஒதுக்கியது. ஆனால், சில சட்டப் பிரச்னைகளால் அந்த நிலத்தில் எந்தவொரு பணியையும் கங்குலியின் அறக்கட்டளையால் மேற்கொள்ள முடியவில்லை.

Also Read: கங்குலி, தோனி, கோலி... கேப்டன்களை உருவாக்கும் 183 மேஜிக்! #Nostalgia

அதேபோல், மேற்குவங்கத்தைத் தற்போது ஆண்டுவரும் திரிணாமுல் காங்கிரஸ் அரசின் வீட்டு வசதித்துறை சார்பில் மேல்நிலைப் பள்ளி ஒன்றைக் கட்டுவதற்காக நிலம் ஒதுக்கப்பட்டது. ஆனால், இந்த நில விவகாரமும் சட்டரீதியான பிரச்னையை ஏற்படுத்தியது. இந்தச்சூழலில், அந்த நிலத்தை மேற்குவங்க அரசிடமே திரும்ப ஒப்படைக்க கங்குலி அறக்கட்டளை முடிவெடுத்துவிட்டதாகச் சொல்கிறார்கள். இது தொடர்பாக கங்குலியின் அறக்கட்டளை சார்பில் அரசுக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில், பிரச்னைக்குரிய அந்த நிலத்தை அரசிடமே திரும்ப அளிக்க விரும்புவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளதாக பிரபல ஆங்கில இதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அறக்கட்டளையின் கோரிக்கை ஏற்கப்பட்டு, பெயர் மாற்றம் உள்ளிட்ட சட்டரீதியான நடவடிக்கைகளுக்காக அந்தக் கடிதம் தற்போது நிதித்துறைக்கு அனுப்பப்பட்டிருப்பதாகவும் விவரமறிந்தவர்கள் சொல்கிறார்கள்.

பிசிசிஐ பதவியேற்பின்போது கங்குலி - ஜெய்ஷா உள்ளிட்டோர்

ராங் சிக்னல்!

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, கங்குலிமீது மிகுந்த மரியாதைகொண்டவர். `பெங்கால் கிரிக்கெட் அசோசியேஷன் தலைவராக கங்குலி வர வேண்டும்’ என வெளிப்படையாகவே சொன்னவர். அதனாலேய கங்குலியின் அறக்கட்டளை, அரசு வழங்கிய நிலத்தைத் திரும்பக் கொடுக்க முடிவு செய்தது முக்கியமான செய்தியை உணர்த்துவதாக அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள். மேற்கு வங்கத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், அதோடு இந்தச் சம்பவத்தையும் இணைத்தே மேற்கு வங்கத்தில் பேசத் தொடங்கியிருக்கிறார்கள்.

மேற்கு வங்கத்தில் பா.ஜ.க!

மேற்கு வங்கத்தில் தற்போதய சூழலில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் பல்வேறு நெருக்கடிகளைச் சந்தித்துவருகிறது. கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பிரச்னைகளோடு, கொரோனா மற்றும் ஆம்பன் புயலை எதிர்க்கொண்ட விதம் போன்றவையும் அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கின்றன. `பா.ஜ.கவின் முன்னணித் தலைவர்களுள் ஒருவரான ஷ்யாமா பிரசாத் முகர்ஜி பிறந்த மேற்கு வங்க மாநில அரசியலைத் தங்கள் பக்கம் திருப்ப இதுவே சரியான தருணம்’ என்றும் பா.ஜ.க தலைமை கருதுகிறது. இதற்காகவே, மேற்கு வங்கத்தை முன்னிறுத்திப் பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது.

மம்தா பானர்ஜியுடன் கங்குலி

Also Read: `வலிமையான தலைமை; கிரிக்கெட்டைப் புரிந்தவர்!’ - ஐசிசி தலைவராகக் கங்குலி; முன்மொழியும் ஸ்மித்

அதற்கேற்றபடி மேற்குவங்கத்தில் பா.ஜ.க மெல்ல வளர்ச்சி பெற்றுவருகிறது. கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் மொத்தமுள்ள 42 தொகுதிகளில் 18 தொகுதிகளை பா.ஜ.க கைப்பற்றியது. மொத்த வாக்குகள் விகிதத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைவிட மூன்று சதவிகித வாக்குகள் மட்டுமே அந்தக் கட்சி குறைவாகப் பெற்றிருந்தது. அதேசமயம், மேற்கு வங்க மாநிலத்திலுள்ள சிறுபான்மையினர் மத்தியில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி செல்வாக்குடன் விளங்குகிறது.

இந்தச்சூழலில் கங்குலி போன்ற பிரபலமான முகத்தை மேற்குவங்க பா.ஜ.க-வின் முகமாக மாற்ற, அக்கட்சித் தலைமை தீவிரமாக முயன்றுவருகிறது. தன்மேல் பா.ஜ.க-வின் ஆதரவாளர் என்ற சாயம் விழும்போதெல்லாம், பொதுவாக அரசியல் சார்பு இல்லை என்பதே கங்குலியின் பதிலாக இருந்தது. ஆனால், தான் பா.ஜ.க ஆதரவாளர் இல்லை என்பதை கங்குலி வெளிப்படையாக எந்த இடத்திலும் அறிவிக்கவில்லை. அதேபோல், அவருடைய ஆதரவாளர்களும் இந்தக் கருத்தை வெளிப்படையாக மறுக்கவில்லை என்கிறார்கள் மேற்கு வங்க அரசியல் வட்டாரத்தில். அதனால், 2021 சட்டசபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக பா.ஜ.க கங்குலியை முன்னிறுத்தினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை என்பதும் அவர்கள் கருத்தாக இருக்கிறது.

கங்குலி

அதேநேரம், `பா.ஜ.க-வின் முதல்வர் ரேஸிலிருக்கும் தற்போதைய மாநிலத் தலைவர் திலீப் கோஷ், மத்திய இணையமைச்சர் பபுல் சுப்ரியோ, திரிணாமுல் காங்கிரஸிலிருந்து விலகி பா.ஜ.க-வில் இணைந்த முகுல் ராய், மேகாலயா முன்னாள் ஆளுநர் தத கதா ராய் ஆகியோரின் நடவடிக்கைகளைப் பொறுத்தே கங்குலியின் தேர்வு அமையும்' என்கிறார்கள். இது தொடர்பாக இதுவரை கங்குலி தரப்பிலிருந்து எந்தவித அதிகாரபூர்வ அறிவிப்பும் வரவில்லை.

சூதாட்டச் சர்ச்சை மற்றும் அணியின் மூத்த வீரர்கள்மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் என மிகக் கடுமையான சூழலில் இந்திய அணி சிக்கித் தவித்துக்கொண்டிருந்த 2001 காலகட்டத்தில் அணியின் கேப்டனாக கங்குலி பொறுப்பேற்றார். இந்திய அணியைக் காக்கவந்த ஆபத்பாந்தவனாக மாறிய கங்குலி, அணியின்மீதான கறைகளைத் துடைந்தெறிந்தது மட்டுமல்லாமல், இந்திய அணியை புதிய உயரங்களுக்கு அழைத்துச் சென்றார். அத்துடன் எதிர்கால இந்திய அணிக்கான வலுவான அடித்தளத்தையும் அமைத்துக்கொடுத்தவர் கங்குலி. அதேபோல், `மேற்கு வங்கத்தில் பா.ஜ.க-வை கங்குலி கரைசேர்ப்பார்’ என்று நம்பிக்கையுடன் பேசிக்கொள்கிறர்கள் பா.ஜ.க-வினர்.



source https://www.vikatan.com/news/politics/ganguly-returns-land-allocated-for-his-trust-to-wb-government-irks-speculations-him-to-join-bjp

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக