Ad

திங்கள், 24 ஆகஸ்ட், 2020

விருதுநகர்: `பள்ளியில் சேர்ந்தாலே ஸ்மார்ட் போன்!’ - அசத்தும் அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர்

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகில் உள்ள படிக்காசுவைத்தான்பட்டி கிராமத்தில் உள்ளது ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி. இப்பள்ளியில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை 16 மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள். இப்பள்ளியில் தலைமை ஆசிரியர் ஒருவரும் ஆசிரியை ஒருவரும் மட்டுமே பணிபுரிந்து வருகின்றனர். மாணவர் சேர்க்கை எண்ணிக்கையை அதிகப்படுத்தும் விதமாக, இப்பள்ளியில் தற்போது புதிதாக கல்வி பயில சேரும் அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் தனது சொந்த செலவில் ரூ.6,500 மதிப்புள்ள புதிய ஸ்மார்ட் மொபைல்போனை வழங்கி ஊக்கப்படுத்தி வருகிறார். பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜெயகுமார் ஞானராஜ்

புதிய மாணவர் சேர்க்கை

இதுகுறித்து அவரிடம் பேசினோம், “இந்த படிக்காசுவைத்தான்பட்டி கிராமத்தில் மொத்தமே 60 வீடுகள்தான் உள்ளது. பனைத்தொழிலைத்தான் இப்பகுதி மக்கள் செய்து வருகிறார்கள். 1 முதல் 5-ம் வகுப்பு வரை மொத்தம் 16 மாணவர்களே தற்போது வரை படித்து வருகிறார்கள்.

தனியார் பள்ளிக்கு இணையாக அரசுப்பள்ளிகளிலும் மாணவர்களுக்கு கல்வி அளிக்கப்படுகின்றன. கல்வி பயில தேவையான அனைத்து உதவிகளையும் அரசு வழங்கி வருகிறது. ஆனால், இதைப் புரிந்து கொள்ளாமல் பெற்றோர்கள் குழந்தைகளை தனியார் பள்ளிகளில் சேர்க்கின்றனர். இந்தப் பள்ளியில் பயிலும் 16 மாணவர்களுக்குமே கல்வியைத் தாண்டி நல்லொழுக்கம், பேச்சுப்பயிற்சி, எழுத்துப்பயிற்சி, தலைமைப்பண்பு, யோகா, மூச்சுப்பயிற்சி, சேமிப்பு உள்ளிட்ட பல பயிற்சிகளை அளிக்கிறோம்.

இலவச பாடநூல் வழங்கும் தலைமை ஆசிரியை

இதைக்கேள்விப்பட்டு 2 கி.மீ தொலைவில் உள்ள பக்கத்து ஊரைச் சேர்ந்த 2 மாணவர்கள் இப்பள்ளியில் கடந்த ஆண்டு சேர்ந்தனர். அவர்களுக்கு தினமும் பள்ளிக்கு வந்துபோகும் ஆட்டோ செலவு ரூ.800-ஐ எனது சொந்த நிதியிலிருந்தே கொடுக்கிறேன். தற்போதைய கொரோனா ஊரடங்கினால் இணையத்தின் மூலம் கல்வி கற்றுத்தரப்படுகிறது. இந்த ஆண்டு, இப்பள்ளியில் புதிதாக சேரும் அனைத்து மாணவர்களுக்கும் இலவசமாக புதிய ஸ்மார்ட் மொபைல்போன் வழங்கிட முடிவு செய்தேன்.

இதுவரை புதிதாக 4 மாணவர்கள் சேர்ந்துள்ளார்கள். இன்னும் எத்தனை மாணவர்கள் சேர்ந்தாலும் அவர்கள் அனைவருக்கும் மொபைல்போன் வழங்க திட்டமிட்டுள்ளேன். பள்ளி துவங்கிய நாளில் அனைத்து மாணவர்களுக்கும் உண்டியல் வழங்கப்படும். வகுப்பறையில் ஒழுக்கம், தன் சுத்தம், வீட்டுப்பாடங்கள் முடித்தல், பிழையற எழுதுதல், எழுத்துப்பயிற்சி, மனப்பாடம் உள்ளிட்ட ஒவ்வொரு நடவடிக்கையையும் பாராட்டி மாணவர்களுக்கு ஒரு ரூபாய் வழங்குகிறேன். அதேநேரத்தில் இந்த பண்புகளை கடைபிடிக்காமல் இருந்தாலோ, வீட்டில் பெற்றோருக்கு கீழ் படியாமல் இருந்தாலோ அதில் இருந்து ஒரு ரூபாய் எடுக்கப்படும்.

சேமிப்பு உண்டியல்களுடன் மாணவர்கள்

அந்த மாணவர்கள் பள்ளியைவிட்டுச் செல்லும் போது உண்டியலில் சேர்ந்துள்ள பணம் அந்தந்த மாணவரின் வளர்ச்சிக்காக பெற்றோருக்கே வழங்கப்படும். கடந்த இரண்டு ஆண்டாக செயல்படுத்தப்பட்ட இத்திட்டத்தின் மூலம் மாணவர்களிடையே கற்றல் மேம்பாடு அடைந்துள்ளது. இதுபோன்ற மாணவர்களின் ஊக்கப்படுத்தும் பல திட்டங்களால் தற்போது பள்ளியில் மாணவர் சேர்க்கை படிப்படியாக அதிகரித்து வருகிறது” என்றார் உற்சாகத்துடன்.



source https://www.vikatan.com/news/education/free-smart-phone-for-everyone-joining-the-government-school-by-hm

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக