Ad

வெள்ளி, 21 ஆகஸ்ட், 2020

மதுரை: உசிலம்பட்டி வயல்களைச் சிதைக்கும் வெட்டுக்கிளிகள்... வேளாண் அதிகாரிகள் சொல்வது என்ன?

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியில் வெட்டுக்கிளிகள் படையெடுத்து பயிரை நாசம் பண்ணிய சம்பவத்தால் அப்பகுதி விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ள நிலையில், வந்துள்ளது என்ன வகையான வெட்டுக்கிளி என்று மாவட்ட நிர்வாகமும் வேளாண் விஞ்ஞானிகளும் ஆய்வு செய்து வருகிறார்கள்.

வெட்டுக்கிளிகள்

உசிலம்பட்டி அருகே புத்தூரில் சீமைப்புல் வகை சோளம் பயிரிட்டுள்ளார் பூபதி. கடந்த சில நாள்களாக இப்பயிரை எங்கிருந்தோ கிளம்பி வந்த வெட்டுக்கிளிகள் நாசம் செய்து வந்துள்ளன. முதலில் சிறிய அளவில் தென்பட்ட வெட்டுக்கிளிகள், தற்போது அந்தப் பகுதி முழுக்க வியாபித்து நாசம் செய்து வருகின்றன.

ஒட்டுமொத்தமாகப் பயிரை அளிக்கும் வடமாநில பாலைவன வெட்டுக்கிளிகள் இங்கு வந்துவிட்டதோ என்று பதறிப்போன இப்பகுதி விவசாயிகள் வேளாண்துறை அதிகாரிகளிடம் முறையிட்டார்கள். அவர்கள் உடனே ஆய்வில் இறங்கியுள்ளனர்.

பூபதி

விவசாயி பூபதி, ``ஏற்கெனவே போதிய தண்ணி வசதி இல்லாமல் இப்பகுதியில் விவசாயம் செய்றது கஷ்டமா இருக்குற நிலையில இப்ப இந்த வெட்டுக்கிளி படையெடுத்து வந்துள்ளது எங்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 20 நாளைக்கு முன்னதான் வெட்டுக்கிளி இங்க நாசம் பண்ண ஆரம்பிச்சதைப் பார்த்தோம். உடனே தோட்டக்கலை அதிகாரிங்ககிட்டே போய் சொன்னோம். உடனே வந்து பார்வையிட்டாங்க. கிருமிநாசினி கொடுத்து தினமும் அடிக்கச் சொன்னாங்க. அப்படி அடிச்சும் வெட்டுக்கிளியை அழிக்க முடியல. இந்த விஷயம் மக்கள்கிட்ட பரவினதும், எங்க ஊர் எம்.எல்.ஏ-வுக்கு தகவல் தெரிந்ததால் அமைச்சர், கலெக்டர், வேளாண்மை அதிகாரிங்க எல்லாம் வந்து பார்த்தாங்க.

ரெண்டு மூணு நாளில் இதை ஒழிக்க நடவடிக்கை எடுப்போம்னு சொல்லிருக்காங்க. எங்களுக்கு என்ன சந்தேகம்னா, இது நம்ம ஊருல உள்ள சாதாரண வெட்டுக்கிளிகளா, வட மாநிலத்தில சமீபத்துல நாசம் செஞ்ச மோசமான வெட்டுக்கிளிகளா என்பதுதான். நம்மூரு வெட்டுக்கிளின்னுதான் அதிகாரிங்க சொல்றாங்க. ஆனா, நாளுக்கு நாள் அதிகமாகிட்டே இருக்குறதுதான் பதற்றத்தை ஏற்படுத்துது.

வெட்டுக்கிளி பற்றி அமைச்சர் ஆய்வு

இந்த ஒரு ஏக்கர்லயே ஒரு லட்சம் வெட்டுக்கிளிகள் இருக்கும்போல. அது இன்னும் இனப்பெருக்கம் ஆகும்னு வேற சொல்றாங்க. அப்படி ஆனால், பக்கத்து வயல்லயும் நாசமாக்க ஆரம்பிச்சுடும். இதுல 4 வகையான வெட்டுக்கிளிகள் இருக்கு, எல்லாத்தையும் ஆய்வுக்கு எடுத்துட்டு போயிருக்காங்க. சீக்கிரம் இதுங்க இங்கிருந்து போயிடனும்'' என்றார்.

இதே கருத்தையே அங்குள்ள மற்ற விவசாயிகளும் கூறுகிறார்கள். உசிலம்பட்டி பகுதியில் வெட்டுக்கிளிகள் வயல்களை நாசம் செய்யும் தகவல் மதுரை மட்டுமல்லாமல் அண்டை மாவட்ட விவசாயிகளுக்கும் தெரிந்து தங்கள் ஊருக்கு வந்துவிடுமோ என்ற அதிர்ச்சியில் உள்ளனர்.

வெட்டுக்கிளியை விரட்டுகிறார்கள்

இந்த நிலையில் புத்தூருக்கு வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், கலெக்டர், வேளாண்துறை இணை இயக்குநர், வெட்டுக்கிளி தடுப்பு அலுவலர்கள், வேளாண் விஞ்ஞானிகள் என அனைவரும் வருகை தந்து நீண்ட நேரம் அப்பகுதியில் ஆய்வு செய்தனர்.

இதுபற்றி நம்மிடம் பேசிய வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், ``இந்த வெட்டுக்கிளிகள் என்ன வகையானது, எங்கிருந்து வந்தது என்பது பற்றி ஆய்வு நடத்தப்படும். விவசாயிகள் அச்சப்படத் தேவையில்லை. பிற பயிர்களுக்கு இவை பரவாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது சேதம் ஏற்பட்டுள்ளதற்கு இழப்பீடு வழங்க ஏற்பாடு செய்யப்படும்" என்றார்.

வெட்டுக்கிளி

நம்மிடம் பேசிய வேளாண்துறை அலுவலர்கள், ``இவை பாலைவன வெட்டுக்கிளிகள் அல்ல. நெற்பயிர்களை உணவாகக் கொள்ளும் சாதாரண வகை வெட்டுக்கிளிகள்தான். `ஆக்சிய வலோக்ஸ்' வகையைச் சேர்ந்ததாக இருக்கலாம். இதனால் விவசாயிகளுக்கு பாதிப்பு வராது. ஆனாலும், இவை மொத்தமாக இங்கே கூடியிருப்பதுதான் ஆபத்து. இவை இனப்பெருக்கம் செய்யும் காலம். அதனால், இங்கு அதிகம் தங்கியுள்ளன. இவற்றை இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்ட மருந்துகளைத் தெளித்து அழிக்கலாம். அதிகமாக இங்கு நெற்பயிர்கள் இல்லாததால் சோளப்பயிற்றை சாப்பிட வந்துள்ளது. இவற்றை விரைவில் அழித்துவிடலாம்'' என்றனர்.

அதிகாரிகள் பயம் வேண்டாம் என்று கூறினாலும், வெட்டுக்கிளிகள் அனைத்தும் இங்கிருந்து சென்ற பிறகுதான் இப்பகுதி விவசாயிகள் நிம்மதி அடைவார்கள்.



source https://www.vikatan.com/news/agriculture/swarm-of-grasshoppers-attacks-maize-fields-in-madurai

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக