Ad

வெள்ளி, 21 ஆகஸ்ட், 2020

ஆபத்சகாய விநாயகர், பிரளயம் காத்த பிள்ளையார்... 9 விநாயகர் திருத்தல மகிமைகள்!

கவலை தீர்க்கும் கை காட்டி விநாயகர்

கைகாட்டி விநாயகர்

திருவாரூர்- திருத்துறைப்பூண்டி சாலையில் மாவூர் கூட்டுரோடு ரயில் நிலையத்திலிருந்து 9 கி.மீ தொலைவில் உள்ளது திருநாட்டியத்தான்குடி. சுந்தரமூர்த்தி சுவாமிகள், கோட்புலி நாயனாரைச் சந்தித்துவிட்டுத் திரும்புகையில் அங்கு ரத்னகிரீஸ்வரர் எனும் திருநாமத்தோடு சிவபெருமான் எழுந்தருளியிருக்கும் கோயிலுக்குச் சென்றார். ஆனால் அம்மையும் அப்பனும் அப்போது அங்கு இல்லை. இதைக் கண்டு திகைத்த சுந்தரர் அங்கிருந்த விநாயகர் பெருமானிடம், ‘அம்மையும் அப்பனும் எங்கே?’ என்று கேட்டார். உடனே, சிவனும் தேவியும் நாற்றுநட்டுத் திருவிளையாடல் செய்துகொண்டிருக்கும் ஈசான்ய திசையைக் காட்டி அருளினார். உடனே, சுந்தரர் அங்கு சென்று ஈசனைத் தரிசித்தார். சுந்தரப்பெருமானுக்குக் கைகாட்டி அருளியதால் அந்த விநாயகருக்குக் கைகாட்டி விநாயகர் என்னும் திருநாமம் ஏற்பட்டது. உழவுத் தொழிலின் மேன்மையை ஈசனே விளக்கிய இந்தத் திருவிளையாடலை சுந்தரருக்கும் நமக்கும் வெளிப்பட வைத்த இந்த விநாயகரை மனதார வணங்கி உணவுப் பஞ்சமில்லாத ஆண்டை வரமாகப் பெறுவோம்.

பாவங்கள் தீர்க்கும் பாலச் சந்திர விநாயகர்

பாலச்சந்திர விநாயகர்

திருச்சியிலிருந்து தஞ்சை செல்லும் வழியில் உள்ளது திருவெறும்பூர். எறும்பு ஈசனை வழிபட்ட தலம் இது. இங்கு விநாயகர் பாலச்சந்திர விநாயகராக அருள்புரிகிறார். தன் அழகினால் அகங்காரம் கொண்டு அவமதித்த சந்திரனை விநாயகப் பெருமான் சாபமிட்டார். இதனால் கலக்கமடைந்து ஓடி ஒளிந்த சந்திரனுக்கு விநாயகப்பெருமானை வழிபட்டு நன்னிலை அடையுமாறு தேவர்கள் அறிவுருத்தினர். அதன்படி சந்திரனும் விநாயகரைப் பூஜித்து தன் சாபம் நீங்கப்பெற்றார். அதன் அடையாளமாக பிறைச்சந்திரனைத் தன் கிரீடத்தில் சூடி பாலச்சந்திர விநாயகராக விநாயகப் பெருமான் காட்சி கொடுக்கும் தலம் இது. இங்கு வந்து வேண்டிக்கொண்டால் மனதில் உள்ள அகந்தை நீங்கி எப்போதும் சுடர்விடும் ஞான ஒளி மனதில் பிறக்கும் என்பது நம்பிக்கை.

அச்சம் தீர்க்கும் அம்பர் மாகாளம் விநாயகர்

அம்பர் மாகாள விநாயகர்

சோமாசி நாயனார் செய்த வேள்விக்கு இறைவனை அழைத்துவருவதாக சுந்தரர் வாக்கு செய்தார். வேள்வி அன்று ஈசன், அரைக்கால் சட்டை அணிந்து, தோளில் இறந்துபோன கன்றுக்குட்டியின் உடலைப் போட்டுக் கொண்டு, தோலால் செய்த கள் குடுவையைச் சுமந்தபடி, நான்கு வேதங்களையும் நாய்களாக மாற்றிக்கொண்டு கழுத்தில் தொங்கிய பறையை இசைத்தவாறு வந்தார். அவரோடு பார்வதிதேவி, கையில் கள் பானையை ஏந்திவர உடன் கணபதியும் முருகனும் சிறுவர்களாக உருக் கொண்டு ஆடிப் பாடியவாறே வந்தனர். யாக சாலையில் இருந்தவர்கள் அஞ்சி ஓட, சிறுவனாக இருந்த கணபதி மட்டும், ‘அஞ்ச வேண்டாம், வந்திருப்பது நாங்களே’ என்று சொல்லித் திருவுரு காட்டி அருளினார். எனவே இந்த விநாயகரை வணங்கினால் மனபயம் நீங்கி மகிழ்ச்சி உண்டாகும் என்பது ஐதிகம்.

வாழ்வை இனிமையாக்கும் கரும்பாயிரம் விநாயகர்

கரும்பாயிரம்

கும்பகோணத்தில் இருக்கும் வராக தீர்த்தக் கரையில் கோயில்கொண்டு அருள்பவர் கரும்பாயிரம் விநாயகர். ஒரு மகாமக தினத்தில் கரும்பு விற்பனை செய்த வியாபாரியோடு விநாயகர் நிகழ்த்திய திருவிளையாடலே இந்தப் பெயருக்குக் காரணம். விநாயகப் பெருமான் சிறுவனாக மாறி கரும்பு வியாபாரி ஒருவனிடம் ஒரு கரும்பு கேட்டார். அவனோ தரமறுக்க விநாயகப் பெருமான் வந்திருப்பது யார் என்று உணர்த்த ஆயிரம் கரும்புகளையும் சக்கையாக்கி மறைந்தார். வியாபாரி தன் தவற்றை உணர்ந்து மன்னிப்புக் கேட்டு விநாயகப் பெருமானை வழிபட்டார். உடனே ஆயிரம் கரும்புகளும் முன்னைவிட சத்துள்ள கரும்புகளாக மாறின. இதனால் இந்த விநாயகருக்குக் கரும்பாயிரம் விநாயகர் என்று பெயர் வந்தது. வாழ்வில் விரக்தியும் தோல்வியும் சந்தித்து வருபவர்கள் கரும்பாயிரம் விநாயகரை மனதார நினைத்து வழிபட தோல்விகள் நீங்கி வெற்றிகளும் இனிய மன நலனும் வாய்க்கப் பெறும் என்கிறார்கள் பக்தர்கள்.

திருத்தணிஆபத் சகாய விநாயகர்

ஆபத் சகாய விநாயகர்

ஆபத்தில் உதவுபவரே ஆபத் சகாயர். திருத்தணிகையில் அருளும் விநாயகருக்கு ஆபத் சகாய விநாயகர் என்று பொருள். இந்த விநாயகர், முருகப் பெருமானுக்கே ஆபத்தில் உதவியவர். வள்ளியைக் கைப்பிடிக்க, காதல் கைகூட அருளியவர். திருத்தணிகை மலை மேல் உள்ள முருகன் கோயிலில் 2-வது பிராகாரத்தின் வட கிழக்கில் இந்த ஆபத்சகாய விநாயகர் அருள்பாலிக்கிறார். அடியார்களுக்கு எந்த இடையூறு ஏற்பட்டாலும், உடனே அவர்களைக் காத்து உதவிபுரிய அவர் தயாராக இருப்பவர். அவரை மனதில் நினைத்துக் கூப்பிட்டால், முருகனுக்கு உதவியதுபோல் ஓடிவந்து காப்பார் என்பது நம்பிக்கை.

பாரதி போற்றிய மணற்குள விநாயகர்

மணற்குள விநாயகர்

தேவர்கள் வழிபட்ட ஆலயங்களைப் போலவே சித்த புருஷர்களால் உருவாக்கப் பட்ட கோயில்களும் சிறப்புடையவை. தொள்ளைக்காசு சுவாமிகள் என்னும் மகான் மணற்குளக் கரையில் அமர்ந்திருந்தபோது விநாயகப்பெருமான் மணற்குளத்தில் இருப்பதாக அசரீரி கேட்டது. உடனே சுவாமிகள் குளத்தில் இறங்கி விநாயகர் திருமேனியை வெளிக்கொணர்ந்து ஆலயம் அமைத்தார். இந்த விநாயகருக்கு வெள்ளைக்காரப் பிள்ளையார் என்றும் பெயர். விநாயகப் பெருமான் சிலையைக் கடலில் போடுமாறு சொன்ன வெள்ளைக்காரரின் கண் பார்வை பறிபோகத் தன் தவற்றை உணர்ந்து மீண்டும் கோயிலில் பிள்ளையாரை எழுந்தருளச் செய்து கோயிலைப் பெரிதுபடுத்திக் கட்டினார். இந்த விநாயகப்பெருமானை மகாகவி பாரதி பாடி வணங்கியிருக்கிறார். நாமும் மனதார பிள்ளையாரை வணங்க, சகல நன்மைகளும் கைகூடும்.

திருப்புறம்பியம் பிரயளம் காத்த பிள்ளையார்

பிரளயம் காத்த விநாயகர்

கும்பகோணத்துக்கு வடமேற்கில் சுமார் 10 கி.மீ. தொலைவில், மண்ணியாற்றங் கரையில் அமைந்துள்ளது திருப்புறம்பியம். ஒரு பிரளயத்தின்போது, சிவபெருமானின் ஆணைப்படி ஸ்ரீவிநாயகப் பெருமான் அந்தப் பிரளயத்தை அடக்கிக் காத்தாராம். அப்போது வருணன், கடலில் உள்ள பொருட்களான சிப்பி, சங்கு முதலானவற்றைக் கொண்டு இந்த விநாயகரைச் செய்து வழிபட்டனர். பிரளயத்திலிருந்து ஊரைக் காத்ததால் இங்குள்ள கணபதிக்கு ஸ்ரீபிரளயம் காத்த விநாயகர் என்று பெயர். விநாயக சதுர்த்தியன்று இவருக்குக் குடம் குடமாகத் தேன் அபிஷேகம் நடைபெறுகிறது. அபிஷேகம் செய்யும் தேன் முழுவதையும் பிள்ளையார் உறிஞ்சிக்கொண்டு விடுகிறார் என்பதால், இவரை தேன் உறிஞ்சும் விநாயகர் என்பார்கள். இந்த விநாயகரை வணங்கினால் துன்பங்கள் நீங்கி வாழ்வில் இன்பம் பெருகும் என்கின்றனர் பக்தர்கள்.

ஔவைப் போற்றிய திருக்கோவிலூர் விநாயகர்

திருக்கோவிலூர் விநாயகர்

ஒளவையால் பூஜிக்கப்பட்டு, அவருக்கு விஸ்வரூபம் காட்டி, நாமெல்லாம் விநாயகர் அகவல் பெறக் காரணமாக இருந்தார் திருக்கோவிலூரில் அருள்புரியும் விநாயகப்பெருமான். விழுப்புரத்தில் இருந்து சுமார் 35 கி.மீ. தூரத்திலும், திருவண்ணாமலையில் இருந்து சுமார் 35 கி.மீ. தூரத்திலும் உள்ளது இந்தத் தலம். இங்குள்ள வீரட்டேஸ்வரர் கோயிலின் முகப்பு வாயிலில் வலப் புறம் காட்சியளிப்பவர் புகழ்பெற்ற பெரியானைக் கணபதியார். இங்கு, ஒளவையார் கயிலை செல்லும் சிற்பக் காட்சியும் உள்ளது. இந்த விநாயகரை அகவல் பாடிப் போற்றினால் கல்வியில் மேன்மையும் முக்தியும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

Also Read: விநாயகருக்கு உகந்த 21 இலைகள், மலர்கள், இரட்டை அறுகம்புல்... கஷ்டங்கள் தீர்க்கும் கணபதி வழிபாடு!

திருக்கடவூர் கள்ள விநாயகர்

திருக்கடவூர் ஆனைமுகன்

திருக்கடவூரில் அருளும் விநாயகருக்கு கள்ள விநாயகர் என்று பெயர். பாற்கடலைக் கடைந்தபோது விநாயகரை வழிபட மறந்தனர் தேவர்கள். அதனால் அவர்கள் பல இடர்களை அடைந்தனர். கடைசியில் அவர்கள் அமிர்தம் கிடைத்தும் அதை அருந்த முடியாமல் திண்டாட, விநாயகரை வழிபட்டு வழிபெறுமாறு சிவபெருமான் வழிபாட்டினார். அதன்படி தேவர்கள் திருக்கடவூரில் கணபதியை வழிபட்டு அமிர்தம் கிடைக்கப் பெற்றனர். இந்தத் தலத்தில் விநாயகப் பெருமானை வணங்கினால் அமிர்தம் அருந்தாமலேயே நீடித்த ஆயுளைப் பெறலாம் என்பது நம்பிக்கை. எனவே, நல் ஆரோக்கியம் அருளும்படி திருக்கடவூர் கள்ள விநாயகரை வணங்கி மகிழ்வோம்.

இந்த 9 சிறப்புமிக்க விநாயகரையும் இந்த நாளில் மனதார வேண்டிக்கொண்டு நவ செல்வங்களையும் பெறுவோம்.



source https://www.vikatan.com/spiritual/temples/nine-special-temples-of-vinayagar-and-their-history

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக