ஈரோடு மாவட்டத்திலுள்ள சென்னிமலை பகுதி கைத்தறி போர்வைகளுக்கு பிரசித்தி பெற்றது. இங்கு தயாரிக்கப்படும் போர்வைகள் இந்தியா முழுவதும் அனுப்பப்பட்டு வருகின்றன. சிறியதும் பெரியதுமாக சென்னிமலையில் உள்ள 30-க்கும் மேற்பட்ட கைத்தறி கூட்டுறவு சங்கங்களில், 20,000 பேர் கைத்தறிப் போர்வை நெசவைச் செய்து வருகின்றனர். அப்படி சென்னிமலையிலுள்ள பிரபலமான `சென்டெக்ஸ் கூட்டுறவுச் சங்கத்தில்’ போர்வை வடிவமைப்பாளராக இருப்பவர் அப்புசாமி. இவர், கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனிக்கு பரிசளிக்க, கைகோர்வை மூலமாக கைத்தறி போர்வை ஒன்றைத் தயாரித்திருக்கிறார்.
இதுகுறித்து அப்புசாமியைத் தொடர்புகொண்டு பேசினோம். ``நான் பாராம்பர்யமான நெசவுக் குடும்பத்தைச் சேர்ந்தவன். பி.காம் படிச்சிருந்தாலும், 4 மாசம் டெக்ஸ்டைல் டிஸைனிங் கத்துக்கிட்டு இப்போ போர்வை டிஸைனராக இருக்கேன். இந்த ஃபீல்டுக்கு வந்து கிட்டத்தட்ட 20 வருஷம் ஆகிடுச்சி. நாம இருக்க ஃபீல்டுல ஏதாவது வித்தியாசமாக செய்யணும்னு நினைச்சேன். அப்படித்தான் வேலை நேரம் போக, எனக்குப் பிடித்த தலைவர்கள், பிரபலங்களின் படங்களை போர்வைகளில் டிஸைன் செய்ய ஆரம்பிச்சேன்.
முதன்முதலாக சென்னிமலையில் கைத்தறி சொஸைட்டியை ஆரம்பிச்சி, சென்னிமலை போர்வையை இந்தியா முழுக்க பிரபலமாக்கிய எம்.பி.நாச்சிமுத்து அவர்களுக்கு மரியாதை செய்யும் விதமாக அவரது படம் போட்ட போர்வையை உருவாக்கினேன். எனக்கு கிரிக்கெட் ப்ளேயர் சச்சின் ரொம்பப் பிடிக்கும். அவர் 100-வது செஞ்சுரி அடிச்சப்ப அவரோட 100 புகைப்படங்களை வைத்து ஒரு போர்வையை தயார் செஞ்சு அனுப்பினேன். அவர், ஒருமுறை கோயமுத்தூர் வந்தப்ப என்னை நேர்ல வரச்சொல்லி பாராட்டுனார். அப்போது சச்சின்ங்கிற பெயரை பத்து மொழியில் எழுதி டிஸைன் செய்த போர்வையை அவருக்கு அன்பளிப்பா கொடுத்தேன். அது ஒரு நெகிழ்ச்சியான தருணம். அதேபோல முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி, ஜெயலலிதா, முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் ஆகியோருக்கும் இதேபோல கைகோர்வை மூலமாக, அவரது படங்கள் கொண்ட போர்வையைத் தயாரிச்சு அனுப்பியிருக்கேன். அந்த வரிசையில் தான் தோனிக்கு ஒரு போர்வையை தயாரிச்சிருக்கேன்” என்றார்.
Also Read: முடியாததைச் செய்பவனே ஹீரோ... தோனி ஹீரோ மட்டுமல்ல, சூப்பர் ஹீரோ... ஏன்? #DhoniRetires
தொடர்ந்து பேசியவர்,``தோனியை ஒரு கிரிக்கெட் பிளேயராக இல்லாம, சிறந்த அப்பாவாக எனக்கு ரொம்ப பிடிக்கும். சென்னை ஐ.பி.எல்ல அவரை சந்திச்சு அவருக்கு ஒரு போர்வையை அன்பளிப்பா கொடுக்கணும்னு தயார் செஞ்சேன். கடந்த சில நாள்களுக்கு முன்பு சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப் போவதாக தோனி அறிவித்திருந்தார். சரி அதுக்கான ஒரு நினைவுப் பரிசாக இந்த போர்வையை கொடுக்கலாம்னு முடிவெடுத்திருக்கேன். தோனி அவருடைய மகளை கொஞ்சுவது போன்ற படத்தை போர்வையில் தத்ரூபமாக கொண்டு வந்திருக்கிறேன். 15 நாள்களாக தினமும் காலை மாலை என 4 மணி நேரம் ஒதுக்கி, கைகோர்வை மூலமாக இந்தப் போர்வையை உருவாக்கியிருக்கிறேன். விரைவில் தோனியை சந்தித்து இந்தப் போர்வையை கொடுப்பேன்” என்றார் உற்சாகமாக.
source https://sports.vikatan.com/cricket/erode-designers-tribute-to-cricketer-ms-dhoni
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக