"எனக்கும், என் கணவருக்கும் கொரோனா ஊரடங்கால் சரிவர வேலை கிடைக்கலை. வழக்கமாக கிடைச்சுக்கிட்டு இருந்த சொற்ப வருமானமும் கிடைக்கலை. அதனால், வாழ்வாதாரத்துக்காக நானும், என் மாமியாரும் வேப்பம்பழம் பொறுக்கி, அதை காயவைத்து, வேப்பங்கொட்டையாக விற்கிறோம்" என்று சோகம் கொப்பளிக்கும் வார்த்தைகளில் சொல்கிறார் ரஞ்சிதா.
Also Read: `எப்போ நல்ல வாழ்க்கை வரும்னு தெரியல!' - கலங்கவைக்கும் குளித்தலை இளைஞர்
உலக அளவில் அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருக்கும் கொரோனா வைரஸ், மக்களை பீதியில் தள்ளியிருக்கிறது. நாளுக்குநாள் அதன் தாக்கம் அதிகரித்துக்கொண்டிருக்கிறது. பலரது வாழ்வாதாரத்தை, வருமானத்தை, தொழிலை கலைத்துப் போட்டு, அவர்களுக்கு வாழ்க்கை மீதான பயத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
கரூர் மாவட்டம், குளித்தலை அருகிலுள்ள அய்யர்மலையைச் சேர்ந்த ரஞ்சிதாவின் குடும்பமும், கொரோனா ஊரடங்கால் நிலைகுலைந்து போயிருக்கிறது. கணவர் சிவக்குமார். மாமியார் பெரியக்காள், இரண்டு பிள்ளைகள் என்று அளவான குடும்பம். ரஞ்சிதாவும், அவரது கணவரும் கூலி வேலை, 100 நாள் வேலைக்குச் சென்று, அதில் கிடைக்கும் சொற்ப வருமானத்தில்தான், குடும்பத்தை நகர்த்தி வந்தார்கள்.
ஆனால், கொரோனா வைரஸ் பரவி, ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், இவர்களுக்கு ரெகுலராக கிடைத்துவந்த வேலை கிடைக்காமல் போய்விட்டது. இதனால், வருமானமின்றி தவிக்கத் தொடங்கியது ரஞ்சிதா குடும்பம். இந்த நிலையில்தான், ரஞ்சிதா தனது மாமியாரோடு சேர்ந்து, `வேப்பமரங்கள் எங்காவது தென்படுகிறதா? என்று தேடி அலைந்து கொண்டிருக்கிறார். எங்கேயாவது வேப்பமரங்கள் தென்பட்டால், முகத்தில் மகிழ்ச்சி பொங்க, அந்த மரத்தில் கீழே உதிர்ந்து கிடக்கும் வேப்பம்பழங்களைப் பொறுக்கி, கையோடு கொண்டுபோன சாக்கில் நிரப்பத் தொடங்கிவிடுகிறார்கள்.
அப்படி மரங்களின் கீழ் பொறுக்கி வந்த வேப்பம்பழங்களை, தனது வீட்டின் முன்பு பரப்பி உலர்த்திக்கொண்டிருந்த ரஞ்சிதாவை சந்தித்துப் பேசினோம்.
``என் கணவர் மண்வெட்டி வேலைக்குப் போவார். நான் 100 நாள் வேலைக்குப் போவேன். என் கணவருக்கு தினமும் 300 ரூபா சம்பளம் தருவாங்க. எனக்கு, 200 கிடைக்கும். இதைவச்சு, பெரிசா இல்லைன்னாலும், பழுதில்லாம குடும்பத்தை ஓட்டிக்கிட்டு வந்தோம். மூணாம் மனுஷனுக்கு குடும்பக் கஷ்டம் தெரியாம, கௌரவமா வாழ்ந்துகிட்டு வந்தோம். எங்களுக்கு ஒரு பையன், ஒரு பொண்ணுன்னு ரெண்டு பிள்ளைங்க. இரண்டு பேரும் அரசுப் பள்ளியில படிக்கிறாங்க. என்னோட அத்தை வீட்டு வேலையைப் பார்த்துக்குவாங்க.
இப்படி போய்க்கிட்டு இருந்த வாழ்க்கைதான், கொரோனா வைரஸ் வந்ததுக்கு பிறகு, இடிவிழுந்தாப்புல ஆயிட்டு. தினமும் வேலை கிடைக்கலை. ரேஷன் அரிசியை வச்சு வயித்துப்பாட்டை சமாளிச்சாலும், இதரச் செலவுகளுக்கு பணம் இல்லாத சூழல் ஏற்பட்டுச்சு. அதனால், கடனைஉடனை வாங்கி, ரெண்டுமாசத்தை சமாளிச்சோம். ஆனால், அதன்பிறகு, வருமானத்துக்கு சுத்தமா வழியில்லாம போயிட்டு.
Also Read: கரூர்: `கலங்காதே, நான் பார்த்துக்கிறேன்!' - இறந்த ஆசிரியரின் குடும்பத்தை நெகிழ வைத்த ஆட்சியர்
அதனால்தான், நானும், என் மாமியாரும் வேப்பம்பழங்களை பொறுக்கி, அதை காயவச்சு விற்க ஆரம்பிச்சோம். தினமும் காலையில் வேப்பம்பழங்களைப் பொறுக்கப் போவோம். எங்கெல்லாம் வேப்பமரங்கள் இருக்கோ, அதை தேடிக் கண்டுபிடிக்கவே ரொம்பக் கஷ்டமாயிடும். தினமும், 100 ரூபாய்க்கு பெறுமானமுள்ள பழங்களைப் பொறுக்குவோம். அதை கொண்டாந்து வீட்டுல காய வைப்போம். நல்லா காய்ஞ்சபிறகு, தோலுடன் வேப்பங்கொட்டையை வித்தா, கிலோ ரூ. 25-க்கு எடுத்துக்குவாங்க. தோல் நீக்கி, வெறும் வேப்பங்கொட்டையை மட்டும் வித்தா, கிலோ ரூ.30-னு எடுத்துக்குவாங்க. வீட்டுக்கே வந்து வியாபாரிங்க வாங்கிக்குறாங்க.
தினமும் மாஞ்சு மாஞ்சு இதுல வேலைப் பார்த்தா, ரூ.100 கிடைக்குது. அதைவச்சு, குடும்பத்தின் அன்றாடச் செலவுகளை சமாளிச்சுக்கிட்டு இருக்கோம். இன்னும் ஒரு மாதம் வேப்பம்பழம் கிடைக்கும். அதன்பிறகு, வருமானத்துக்கு என்ன பண்றதுன்னு புரியலை. இந்த கொரோனா எப்போ ஒழியும், எங்க கஷ்டம் எப்போ தீரும்னு ஒண்ணும் புரியலை. அதை நெனச்சா, ராத்திரிகள்ல தூக்கம் வரமாட்டேங்குது சார்" என்றார் வேதனையுடன்.
source https://www.vikatan.com/news/tamilnadu/karur-family-severely-affected-in-corona-imposed-lock-down
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக