Ad

திங்கள், 24 ஆகஸ்ட், 2020

`ஒரே நாளில் 60,975 பேருக்கு தொற்று; 848 உயிரிழப்புகள்!’ - இந்தியாவில் கொரோனா நிலவரம் #NowAtVikatan

இடிந்து விழுந்த அடுக்கு மாடி குடியிருப்பு!

மகாராஷ்டிரா மாநிலம் ராய்காட் மாவட்டத்தில் கஜல்புரா என்ற பகுதியில் 5 மாடிகள் கொண்ட அடுக்கு மாடி குடியிருப்பு நேற்றிரவு 7 மணியளவில் இடிந்து விழுந்தது. 35 குடியிருப்புகள் கொண்ட அந்த கட்டடம் இடிந்து விழுந்ததில் குழந்தைகள் உள்பட பலர் சிக்கி கொண்டனர்.

விரைந்து வந்த போலீஸார் மற்றும் தீயணைப்புத்துறையினர் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணிகளை தொடங்கினர். இருவர் உயிரிழந்த நிலையில், பலர் மீட்கப்பட்டனர். இன்னமும் இடிபாடுகளில் சிக்கியுள்ள 18-க்கும் மேற்பட்டோரை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தேசிய பேரிடர் மீட்பு படை இயக்குநரிடம் பேசிய, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வேண்டிய உதவிகளை செய்ய உத்தரவிட்டுள்ளார்.

இந்தியாவில் கொரோனா நிலவரம்!

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 31,67,324 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் 24 மணி நேரத்தில் 60,975 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

கொரோனா

கொரோனா தொற்றால் 24 மணி நேரத்தில் மட்டும் 848 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 58,390 ஆக அதிகரித்திருக்கிறது. அதேபோல், தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 24,04,585 ஆகவும் உயர்ந்துள்ளது.

பா.ஜ.கவில் இணைகிறார் அண்ணாமலை! 

அண்ணாமலை

முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரியான அண்ணாமலை இன்று காலை 11 மணிக்கு பாரதிய ஜனதா கட்சியில் இணைகிறார். டெல்லி பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில் கட்சியில் இணைகிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. அரசியல் ஆர்வம் காரணமாக தனது பதவியை ராஜினாமா செய்த அண்ணாமலை சில மாதங்களுக்கு முன்னர் தற்சார்பு விவசாயத்தில் கவனம் செலுத்தினார். தொடர்ந்து ரஜினிக்கு ஆதரவான கருத்துகளை வெளியிட்டு வந்த அண்ணாமலை தற்போது, பா.ஜ.க வில் இணையவுள்ளது குறிப்பிடத்தக்கது

இ-பாஸ் - 29ம்தேதி முதல்வர் முக்கிய ஆலோசனை!

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

தமிழகத்தில் தற்போது அமலில் இருக்கும் இ-பாஸ் நடைமுறையை தொடரலாமா அல்லது ரத்து செய்யலாமா என்பது குறித்து இறுதி முடிவு எடுக்க, வரும் 29ம் தேதி முதலமைச்சர் ஆலோசனை நடத்த இருக்கிறார். மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நடத்தும் இந்த ஆலோசனை கூட்டத்தில் செப்டம்பர் மாதம் முதல் அளிக்கப்பட இருக்கும் ஊரடங்கு தளர்வுகள் குறித்தும் ஆலோசனை நடத்தப்படும் என தெரிகிறது.



source https://www.vikatan.com/news/general-news/25-08-2020-just-in-live-updates

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக