Ad

சனி, 22 ஆகஸ்ட், 2020

படத்தின் முதல் காட்சியே நெஞ்சை தொட்டுவிடும்..! - 32 years of `உன்னால் முடியும் தம்பி’ #MyVikatan

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

வாழ்வின் எதார்த்தங்களின் மீதான அழகியிலே வாழ்வை அர்த்தமுள்ளதாகவும், அழகானதாகவும் மாற்றும் என்பதே இந்த பூமியும் மரங்களும் நமக்கு தரும் பாடம். எதோ ஒரு தருணத்தில் மக்களுக்கு மரங்களின் மீதான பிரியம் அதிகரிக்கும். ஒவ்வொரு தலைமுறைக்கும் இயற்கை மீதான பேரன்பினை உணர்த்த எங்கிருந்தோ உத்வேகம் பொழிந்து கொண்டே இருக்கின்றது. அப்படி ஒரு தலைமுறைக்கான உத்வேகம் தந்த படம், `இயக்குநர் சிகரம்` கே.பாலச்சந்தரின் `உன்னால் முடியும் தம்பி`.

Unnal Mudiyum Thambi

32 ஆண்டுகள் கடந்தும் அந்த படம் இன்றும், இன்றைய தலைமுறைக்கு பாடமாக இருக்கின்றது. அன்றைய இளைஞர்களுக்கு `உன்னால் முடியும் தம்பி, நம்பு` என்று எனர்ஜி டானிக்காக, உத்வேகமாக வாழ்ந்த எம்.எஸ்.உதயமூர்த்தி, அவரின் மக்கள் சக்தி இயக்கம், கே.பாலச்சந்தரின் டைரக்டர்'ஸ் டச் - இவைதான் இந்த படத்தின் மையம். அதனை மெருகேற்றி இருப்பார்கள், ஆச்சியும், ஜெமினி ஐயாவும், படத்தில் `சின்னவராக` வரும் நம்மவரும். கே.பாலசந்தர் என்னும் கலைக்காதலன், தனது அனைத்து கருத்துகளையும், அதன் சாரங்களையும் இந்த படத்தின் மூலம் வெளிப்படுத்தியிருப்பார்.

படத்தின் முதல் காட்சியே நெஞ்சை தொடுவதுதான். கண் தெரியாத ஒரு பாட்டி. அவளின் பசி பற்றியெரிய, அதனை கிஞ்சித்தும் கண்டுகொள்ளாமல் பழத்தை விட்டெறிந்து செல்லும் ஒரு பெரியவர். அந்த மூதாட்டி, தன நலிவுற்ற கரங்களால் பழத்தை தேடுவதை சிறுவனாய் உள்ள உதயமூர்த்தி குற்ற உணர்ச்சியே இல்லாமல் பார்த்துக்கொண்டே இருப்பான்.

வேறொரு பிச்சைக்காரன் வந்து அந்த பழத்தை எடுத்து மூதாட்டியிடம் கொடுத்து விட்டு, சிறுவன் உதயமூர்த்தியை யாரென விசாரிப்பார். மந்திரம் உச்சரிக்கும் உதயமூர்த்தியின் நாவசைவை கண்டு என்னவென கேட்பார்.

`காக்க காக்க கனகவேல் காக்க` என்றவுடன் சிரித்துவிட்டு `கடவுள் உன்னை மட்டும்தான் காப்பாற்ற வேண்டுமா? இரு கைகளில் ஒன்று மட்டுமே உனக்கு, மற்றது உதவி செய்ய' என்று புரிய வைக்க முயலுவார். அது சிறுவனின் மனதில் ஏறினாலும், அறிவு ஏற்காமல் போக கடந்து சென்று விடுவான்.

Unnal Mudiyum Thambi

வீட்டின் செல்லப்பிள்ளையாக, அண்ணியின் அன்புக்குள் வலம்வரும் உதயமூர்த்திக்கு அப்பா என்றாலே புலிசொப்பனம்தான் (கே.பி டச்!). அவரிடம் அனைத்திற்கும் உதவாக்கரை, செல்லாக்காசு என்று திட்டு வாங்குவதும், விட்டத்தில் தொங்குவதும்தான் உதயமூர்த்தியின் நாளில் அடக்கம். அப்படி ஒருநாள் சிறுபிள்ளைத்தனமாக மாடியின் விளிம்பில் இருந்து வேடிக்கையாய் விளையாடி கொண்டிருப்பார். அப்போது, அவர் வீட்டில் வேலை செல்லும் சமையல்கார தாத்தா, `இந்த மண்ணுல நம்ம பொறந்ததுக்கு எதாவது அர்த்தம் இருக்கணும்ன்னா நம்ம அதுக்கு எதாவது திருப்பி செய்யணும் அப்படிங்குறது ஒரு நம்பிக்கைப்பா.

குளமோ, பள்ளிக்கூடமோ என்னால கட்ட முடியுமா? முடிஞ்சத செய்யுறேன். செடிங்கள தொட்டியில வளர்க்குறேன். அது வளர்ந்த அப்புறம் வெளிய எங்காச்சும் கொண்டு போய் நடுறேன். தினத்துக்கு ரெண்டுன்னு ஒரு கணக்கு. இந்த உலகத்துக்கு நம்ம புள்ளகுட்டிங்களைத்தான் வுட்டுட்டு போகணும்னு இல்ல. சொல்லப்போனா நான் வளர்த்த மரங்கள்தான் எனக்கு புள்ளகுட்டிங்க" என்று பேசுவதை கேட்பார்.

சிறுவயது நிகழ்வும், அந்த சமையல்கார தாத்தாவின் வாசகங்களும் உதயமூர்த்தியை மனிதம் போற்றும் மனிதனாக மாற்றுகிறது. இந்த காட்சியில் கமலை விட சமையல்கார தாத்தாவாக வரும் வைரம் கிருஷ்ணமூர்த்தியும், அவரின் வழி வெளிவந்த கே.பி-யின் இயற்கை மீதான நேசமும், அதனை இசைவழி உணர்த்திய ராஜாவின் ராஜபோதைக்கும் ஈடுஇணையே கிடையாது.

Unnal Mudiyum Thambi

படத்தின் கருவே இங்குதான் தொடங்குகிறது. மனிதம் வேண்டி நிற்கும் மகன் உதயமூர்த்தியாய் கமலும், மேல்தட்டு மாகானுபாவனாக, சங்கீதம் மட்டுமே உலகமாக வாழும் பிலஹரி மார்த்தாண்டம் பிள்ளையாக ஜெமினியும் இரண்டு எல்லைகளில் பிரிந்து நிற்பதும், மனிதம் இறுதியில் வெல்வதும்தான் படம்.

மரம் வெட்டும் தொழிலாளிகளுக்காய் `புஞ்சை உண்டு நஞ்சை உண்டு' பாடலை பாடிவிட்டு வரும் உதயமூர்த்தியிடம் `நீ பாடின ராகம் எது` என்று மார்த்தாண்டம் பிள்ளையின் தர்பாரில் வழக்கு விசாரிக்கப்படும். `சுத்த தன்யாசி' என்பார் பிள்ளை. `அசுத்த தன்யாசி' என்பார் தந்தை. எளியோரை சேரும் இசையை, எளியோருக்கு மறுக்கப்படும் உரிமையை சண்டையிட்டுக்கொள்ள, அந்த முடிவிலியை தன் நாதத்தின் இசையால் முடிவுக்கு கொண்டு வருவார் அந்த குடும்பத்தின் தலைவாரிசு.

சாதி என்ற வர்ணம் பூசும் உலகினை, துணிவினால், அதன்வழி வந்த அறிவினால் வெல்லலாம் என்பதை லலிதகமலமாக சீதா நிரூபித்திருப்பார். சாதியில்லாமல், மதமில்லாமல் வரும் வேலை விண்ணப்பம் நிராகரிக்கப்படுகிறது என்றவுடன் அதனை கிழித்து எறிவது, அவரின் தந்தை வழக்கில் பெற்ற வெற்றிக்கு சமானமாக பீடியை நிறுத்த சொல்லி கேட்பது, `நீ ஹரிஜன பொண்ணுதானே?' என்று விசாரிக்கும் மார்த்தாண்ட பிள்ளையிடம், `ஏன்! ஹரிஜனம் பொதுஜனம் இல்லையா?' என்று இயல்பாய் கேட்பது போன்ற காட்சிகளெல்லாம் மிதமிஞ்சிய பெண்ணியம்.

Unnal Mudiyum Thambi

கச்சேரிக்கு செல்லும் மார்த்தாண்டம் பிள்ளையின் கார் நடுவில் மறிக்கப்பட்டு, ஒரு தொழிலாளியின் உயிர் காக்க உதவி கேட்பதும், `கடவுள் காப்பாத்துவார்' என்று கடந்து செல்லும் அவரின் மனமும் அதிகர்வத்தின் உச்சம். பின்பு அவன் இறந்துவிட, அதனை சாதாரணமாக கடந்து செல்லும் மார்த்தாண்டம் பிள்ளையும், தன் பாவமாக ஏற்று பரிகாரம் செய்ய நினைக்கும் மகனும் ஆச்சர்யத்தின் எல்லைகள். எல்லா தருணங்களிலும் மனதை வாள் கொண்டு கீறும் ரணம் அந்தக்காட்சி. எத்தனையோ முறை, பல்வேறு சூழ்நிலைகளால், பிரிகின்ற உயிரின் வலியை, 108 வரும் வரை Selfie எடுக்கும் தலைமுறைக்கு பாடமாய் காட்டும் காட்சி அது.

இதன் பின்பாட்டாக, சாருகேசி என்ற இளைஞனை தன் சங்கீத வாரிசாக அறிவித்து விடுவார் மார்த்தாண்டம். தகப்பன் மகன் உறவில் உள்ள விரிசல் பிரிவாகிறது. உதயமூர்த்தி வீட்டை விட்டுச்செல்லும் முன் தனக்கு அன்னையான அண்ணியிடம் பிரிவுபசாரம் பெற வருகிறார். ஆச்சிதான் அண்ணி அங்கயற்கண்ணி. எத்தனை இடம் இருந்தாலும் இந்த பிரிவின் வருத்தத்தில் சாப்பாடு கொடுத்து அனுப்பும் அந்த ஒற்றை நொடியும், அதனை மிக ஆழமாக கண்ணீரிலும், கண்டிப்பிலும் நகர்த்தும் ஆச்சியும் தொன்மம்.

Unnal Mudiyum Thambi

வீட்டை விட்டு வெளியேறிய பின் மதுவிலக்கு வேண்டி பணி செய்கிறார். நாசரை எதிர்ப்பதாகட்டும், ஜனகராஜ், சார்லி, கவிதாலயா கிருஷ்ணன் ஆகிய மூவரையும் மாற்றுவதாகட்டும், மார்த்தாண்டம் பிள்ளையின் தலையீட்டால் திருமணமே நின்று போனாலும், அமைதி புரட்சி இயக்கம் தோற்றுவித்து வழிநடத்துவதாகட்டும் எல்லா இடங்களிலும் பாலசந்தர் என்ற மகத்தான கலைஞனின் தொலைநோக்கு மிளிர்கிறது. அதிலும் அரசியல்வாதியாக வரும் டெல்லி கணேஷ்' அந்த பசங்களுக்கு மட்டும் அறிவு வளந்திருச்சு... நம்ம போகவேண்டியதுதான்` என்று சொல்லும் வசனம் அசுரனின் `படிப்புதான் நம்மளை காப்பதும்` என்பதனை ஒத்திருக்கின்றது. அதை ஒரு தலைமுறைக்கு முன்பே உரைத்தவர் கே.பி.

சீதாவின் தந்தையாகவும், எழுச்சிக்கு துணையாகவும் வரும் அஞ்சையாவாக மீசை.முருகேசன், `Bloody ` என்ற வார்த்தையை அடிக்கடி உச்சரிப்பதால் பாராளுமன்றத்தில் பேசவே செய்யாத எம்.பி.யாக வி.கே.ராமசாமி என அனைவரும் தங்கள் பங்கினை தெளிவாக நினைவிருக்கும்படி பதித்துவிட்டு சென்றுள்ளார்கள். இறுதியில், பாரதம் புகழும் மானிடனாக பிரதம மந்திரி கையினால் உதயமூர்த்தி விருது வாங்குவதாகவும், மார்த்தாண்டம் பிள்ளை மகனை உணர்ந்து அவர் பெருமை பேசுவதாகவும் படம் முடிவுறுகிறது.

Unnal Mudiyum Thambi

நாம் என்பது நம்மோடு இணைந்தவர்களை சேர்த்து குறிப்பிடும் பேசுபொருளாகும் போது, நாம் நம்மால் இயன்றதை இந்த பூமிக்கு திருப்பி செய்யலாமே! ஏனென்றால் நாமும் இந்த மண்ணில் பிறந்ததிற்கு எதாவது அர்த்தம் செய்ய வேண்டுமல்லவா?

- மனோ

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/



source https://www.vikatan.com/oddities/miscellaneous/an-article-about-kamal-haasans-unnal-mudiyum-thambi-movie

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக