Ad

புதன், 13 ஏப்ரல், 2022

'20 கி.மீ வேகத்தில் சென்றால்தான் யானைகளை பார்க்க முடியும்' ஆய்வு குழுவிடம் ரயில்வே அதிகாரிகள் தகவல்

கோவை மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக யானைகள் உயிரிழப்பு அதிகரித்து வருகிறது. முக்கியமாக, கோவை – பாலக்காடு ரயில் வழித்தடத்தில், யானைகள் ரயில் மோதி உயிரிழப்பது வாடிக்கையாகி வருகிறது.

ரயில் மோதி யானைகள் பலி

இந்த வழித்தடத்தில் கடந்த 19 ஆண்டுகளில், 29 யானைகள் ரயில் மோதி உயிரிழந்துள்ளன. கடந்த நவம்பர் மாதம் மங்களூர் – சென்னை ரயில் மோதி மூன்று பெண் யானைகள் மற்றும் வயிற்றில் இருந்த ஓர் கரு உள்பட 4 யானைகள் உயிரிழந்தன.

இதுகுறித்து விரிவான அறிக்கைத் தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், யானைகள் உயிரிழப்பு தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் சதீஷ்குமார், சுப்பிரமணியன் மற்றும் இளந்திரையன் ஆகியோர் எட்டிமடை - வாளையார் பகுதிகளில் ஆய்வு செய்தனர்.

ஏ லைன், பி லைன் வழித்தடம்

முக்கியமாக, அங்குள்ள 'ஏ' மற்றும் 'பி' ஆகிய இரண்டு ரயில் பாதைகளையும் ஆய்வு செய்தனர். போத்தனூர் ரயில் நிலையத்தில் இருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பரிசோதனை ரயில் இன்ஜினில் சென்று ஆய்வு செய்தனர்.

கடந்தாண்டு நவக்கரை அருகே யானைகள் உயிரிழந்தது தொடர்பாக அதிகாரிகள் விளக்கினர். தண்டவாளத்தின் ஓரங்களில் அமைக்கப்பட்டுள்ள சோலார் விளக்குகளை நீதிபதிகள் ஆய்வு செய்தனர். வாளையார் ரயில் நிலையத்தில் உள்ள தேனீ அலாரம் அமைப்பை ஆய்வு செய்தனர்.

ஆய்வு

மேலும், தண்டவாளத்தின் ஓரங்களில் உள்ள புதர்களை அகற்றி, யானைகள் கடப்பதற்காக தண்டவாளத்தின் குறுக்கே இருக்கும் சரிவுகள் மற்றும் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட உள்ள இடங்களையும் ஆய்வு செய்தனர்.

“இந்த வழித்தடத்தில் 20 கி.மீ வேகத்தில் ரயில் இன்ஜினை இயக்கும்போது, பாதை தெளிவாகத் தெரியும். இன்ஜின் 20 கிமீ வேகத்தை கடந்தால், பார்வை படிப்படியாக குறையும். முக்கியமாக 45 கிமீ வேகத்திற்கு மேல் சென்றால், லோகோ பைலட்டால் (ரயில் ஓட்டுநர்) விலங்குகளின் நடமாட்டத்தை பார்க்க முடியாது” என்று அதிகாரிகள் கூறினர்.

நீதிபதிகள் ஆய்வு

உயர்மட்ட பாதைகள், செயற்கை தண்ணீர் குட்டைகள், யானை நடமாட்டம் குறித்த வாட்ஸப் குழு, சூரிய மின்வேலி அமைத்தது போன்ற நடவடிக்கைகள் குறித்தும் அதிகாரிகள் விளக்கினர்.

இதையெல்லாம் கேட்ட நீதிபதிகள், “சர்வதேச வல்லுநர்களிடம் கலந்தாலோசித்து, நவீன தொழில்நுட்பத்தை அமல்படுத்தி யானை மரணங்களை தடுக்க வேண்டும்” என்று ஆலோசனை வழங்கினர்.

யானைகள் விபத்துக்குள்ளாகும் ரயில் தண்டவாளம்

இந்த ஆய்வின்போது வனத்துறை மற்றும் ரயில்வே துறை, மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர். ரயில் மோதி யானைகள் இறக்கும் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர் சூழல் ஆர்வலர்கள்.



source https://www.vikatan.com/government-and-politics/environment/high-court-judges-inspected-coimbatore-elephant-death-issue-in-rail-road

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக