Ad

சனி, 22 ஆகஸ்ட், 2020

``ஆத்தீ... என்னமோ ஆயிடுச்சு!'' - திகைப்பூட்டிய முதல் விமானப் பயண அனுபவம் #MyVikatan

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

80-களின் பிற்பகுதியில் பிறந்தவர்களுக்கு எல்லாமே ஆச்சர்யம்தான். ஊருக்குள் வரும் அம்பாசிடர் காரினை அரை கிலோ மீட்டருக்கு துரத்திப் போவதும், ஜன்னல் வழியே அதன் ஸ்டீயரிங்கை தொட்டுப்பார்ப்பதும் அலாதிப் பிரியம். மணல் கொட்டும் தூக்கு லாரியினை அலங்கார பூசை செய்த அம்மனைப் பார்ப்பது போல் பார்ப்பது, கூட்டமாக கொக்கு பறந்தால் `கொக்கே கொக்கே பூ போடே'னு ஓடியதை நினைத்தும் கொள்வோம்.

அப்படித்தான் பன்னிரண்டாவது முடித்து கவுன்சிலிங்கிற்கு சென்னை வரும் போது முதல் ரயில் பயணத்தில் அன்ரிசர்வ் பெட்டி எங்கிருக்கிறதென தெரியாமல் போக... ``மஞ்சள் - கறுப்பு வரி இருக்கும்... ஓடிப்போ!" என ஒரு குரல் கேட்டதும் கில்லி பிரகாஷ்ராஜ் போல வண்டியோடு ஓடிய நிகழ்வெல்லாம் நடந்தது.

நகரத்தில் முதன்முதலில் அடுக்குமாடி லிஃப்டில் ஏறும்போது மோட்டுவளையைப் பார்த்து ஜிவ்வென வயிற்றில் ஓடும் பட்டாம்பூச்சியை பிடிப்பது போல, இனம்புரியாத ஒரு திகைப்பும் சிரிப்பும். தன்னைப்போலவே யாராவது சிரிக்கிறார்களா என உறுதிப்படுத்திக் கொண்டு சிரித்துக் கொள்வது ஒரு சுவாரஸ்யம். நகரும் படிக்கட்டில் வலதுகாலை எடுத்து வைக்க தயங்கும் புது மருமகளைப்போல நடுங்கியதும் ஒரு காலம்.

#ஏரோப்ளேன்

எலிமென்ட்ரி ஸ்கூலில் படிக்கும்போதே `ஏலோப்ளேன்' என்பது வாயில் நுழையாத பெயர்களில் ஒன்று. இன்டர்வலில் விளையாடும்போதும், உணவு இடைவேளையில் சாப்பிடும்போது ஏதாவது ஏரோப்ளேன் போகும்போது அப்படியே விட்டுவிட்டு ஒரு கும்பலே ஆச்சர்யமாய் வானத்தை அண்ணாந்து பார்க்கும். அதில் யார் முதலில் ஏரோப்ளேன் எங்கு வருகிறதென வானத்தில் கண்டுபிடிக்கிறானோ அவனே பெரிய சூரன்.

கண்டுபிடித்த அவன் அனைவருக்கும் கடவுளைப்போல என் கைக்கு நேரா பாருனு கண் டாக்டர் கண்பார்வையை சரிபார்ப்பது போலான நிகழ்வு. அவன் கையை பார்த்த திசையில் கண்டுபிடிப்பது ஆர்.டி.ஓ முன்னால் எட்டுப் போட்டதுபோல் இன்பமானது.

Representational Image

நான் நேத்து ஒரு ஏரோப்ளேன் பார்த்தேன் கீழாழ போனது என சொல்பவனை வியப்பாய் பார்ப்போம்.

Also Read: ``ஒன் பிட்ச் கேட்ச்... ஆஃப் சைட் ரன்!’’ - எவர் கிரீன் Street கிரிக்கெட் நினைவுகள் #90s #MyVikatan

இன்னும் விடுமுறை நாளில் ஒரு குரூப்பு, ``வெள்ளைக்காரா, வெளிய வந்தால் சுட்டுப்போடுவேன்"னு சொல்லிட்டு கைவிரலை துப்பாக்கி போல் வைத்துக் கொண்டு ஓடும். இப்படியெல்லாம் இருக்கும் ஒருவன் முதல்முறை ஏரோப்ளேன் பயணம் என்பது சலூன் கடை சண்முகம் ரஜினியை நேரில் பார்த்த கதைதான். அடேய் நீதானா நீதானா... ப்ளைட்டில் போகப் போறது நான்தானா நான்தானா..!

#வான்வெளிப் பயணங்களில்

சென்னையிலிருந்து கோவைக்கு ப்ளைட் டிக்கெட் எடுத்ததிலிருந்து சக்தியை பார்க்க காத்திருக்கும் தேவர்மகன் மாயனைப் போலத்தான் காத்திருந்தோம். காலை 9-15 ப்ளைட்டுக்கு 7 மணிக்கே வந்து எல்லாரையும் வேடிக்கைப் பார்த்துட்டு இருந்தோம். அங்கப் போய் கூப்பில உட்காருனு சொல்லும் கவுண்டர் மாதிரி 14-வது கேட்ல போய் உட்காருங்கனு செக்யூரிட்டி சொன்னாங்க. எப்பவும் மெட்டல் டிடக்டருக்குள்ள போகும் போது எங்க கீ கீ னு சத்தம் வருமோனு ஒரு பயம் இருக்கும். அதையும் கடந்து கொண்டு... வந்து லக்கேஜை வைத்தால் ஒரு சுத்து சுத்திட்டு வரும். பிரசவ அறைக்கு வெளியில் காத்திருக்கும் கணவன் போல காத்திருந்தால் சுகபிரசவமான குழந்தை போல நம் கையில் லக்கேஜை வாரி அணைத்து எடுத்துச் செல்லலாம்.

Airport

அந்தப் பக்கம் பார்த்தால் இன்டர்நேஷனல் விமானம் நின்றது. நம்மூர் மஃப்சல் பஸ் போல. நீங்கெல்லாம் டவுன் பஸ் ஸ்டாண்ட்டுக்கு போங்கனு செக்யூரிட்டி சொன்னார். சின்னாளபட்டி, செம்பட்டி பஸ் போல வா வா னு கூப்பிட்டது. பக்கத்தில் போக போக வயித்துக்குள்ள வடை சுடுற மாதிரியே இருந்தது. படிக்கட்டில் ஏறும்போது உடல் முழுக்க அட்ரினல் சுரப்பது போல வேகம்.

Also Read: 90'ஸ் கிட்ஸ் vs 2k கிட்ஸ்..! - ஒரு டீப் ஜாலி கேலி அலசல் #MyVikatan

ஒரு தலைமுறையின் முதல் பட்டதாரிபோல் முதல் விமானப் பயணி நான்தான் எனும் பெருமிதம். சீட் நெம்பர் பார்த்து, `கோன் ஐஸா... அது பண்டிகை காலத்தில வெளிய விற்பாங்க'னு சொல்லும் பிச்சுமணி போல கைகாட்டி சொன்னாங்க. உள்ளே போனால் 23-ம் நெம்பர் சீட். இருவர் வீதம் 46 பேர் அமரும் நம்ம ஊர் மினி பஸ் போல. அதில் பின்னால் கடைசி சீட்தான் கிடைச்சது எங்களுக்கு. எங்க தூக்கி தூக்கி போடுமோனு கேட்டதற்கு சிரிச்சாங்க ஏர் ஹோஸ்டஸ்.

தியேட்டருக்குள் நுழைந்தவுடன் மெல்லிய சென்ட் மணம் போல வந்தது. பக்கத்து வண்டி எடுத்தவுடன் நம்ம வண்டி எடுத்திடுவாங்கனு ஒரு சந்தோசம். ஏர் ஹோஸ்டஸ் கதவைத் திறந்தவுடன் ஒரு கேப்பில் ஷேர் ஆட்டோ ஓட்டும் சின்ன பையன் சாயலில் ஒரு பைலட் ட்ரைவர் இருந்தார். பெல்ட் போட்டவுடன் இடம் மாறக்கூடாது பேசினால் பேர் எழுதி வச்சிடுவேனு சொல்லும் வகுப்பு லீடர் மாதிரி அறிவிப்பு சொன்னதும்... ஒரு வழியா வண்டி உறும ஆரம்பித்தது.

மாரியாத்தா காளியாத்தா ஊர் கொண்டு போய் சேர்த்திடுனு வேண்டிக்கிட்டு ஜன்னல் வழியா பார்த்ததும் பூமியை விட்டு மேலெழும்பியது. வண்டி நிக்குதா போகுதானு தெரியாம இருந்தது.

Representational Image

விமானங்கள் மேலேழும்போதும், கீழிறங்கும்போதும் காற்றழுத்தம் மாறுவதால் காது அடைத்தது. ஆத்தீ... என்னமோ ஆயிடுச்சுனு காது மூக்கை தொட்டுத் தொட்டுப் பார்த்தேன். திரும்பி பார்த்தால் எல்லோரும் காதை தொட்டதால் கொஞ்சம் நிம்மதியாச்சு. ஒரு சிலர் கொரோனா டெஸ்ட் எடுக்க வந்தது போல் கொஞ்சம் பீதியுடன் இருந்தாங்க. சிலர், `நான் பொறந்ததே ப்ளைட்லதாங்க' எனும் ரேஞ்சிலேயே இருந்தனர்.

#விமானம் இயங்குவது

கீழிறங்கும்போதும், மேலேறும் போதும் பார்த்துள்ளேன்... இறக்கைகள் இயல்பாய் சிறிது உயர்ந்துகொள்ளும். இறங்கியவுடன் தார்ச்சாலையில் திரும்பும் போது பின்புற மேல் இறக்கை மீனின் துடுப்பு போல் இடது வலதாக திரும்பும்.

*பறவைக்கு திரும்பிய திசையெங்கும் வழிகள் போல் அல்ல விமானிக்கு... கட்டுப்பாட்டு அறைக்கு கட்டுப்பட்டவர்.

*விமான ஜன்னல்கள் பிளெக்ஸிகிளாஸால் ஆனவை. அதிக அழுத்தங்களைத் தாங்க வல்லது. பெரும்பாலும் ஓவல் வடிவத்தில் இருக்கும்.

*விமானம் தரையிறங்கும் கியர் முக்கியமானது. முழு எடையை தாங்கும் வகையில் இருக்கும்.

பொதுவாக கியர் அதிகபட்சமாக 60,000 தரையிறக்கங்களுக்குப் பயன்படுத்தப்படுவதாக சொல்லப்படுகிறது.

*விமான டயர்கள் ரப்பர், நைலான் மற்றும் எஃகு ஆகிய மூன்று முக்கிய கூறுகளைக் கொண்டுள்ளன. 38 டன் எடைதாங்கும் வலிமையும் 288 மைல் வேகத்தில் இறங்கினாலும் எடை தாங்கும் வலிமையும் இதற்கு உண்டு. ஒரு டயர் 500 முறை தரை இறங்க பயன்படுத்தப்படும்.

Representational Image

*விமான டயரில் நைட்ரஜன் வாயு நிரப்பப்படும். நைட்ரஜனில் ஆக்ஸிஜன் இல்லாததால் தீப்பிடிப்பது இல்லை.

*90 விநாடிகளுக்குள் அவசர காலத்தில் அனைவரையும் வெளியேற்றும் வகையில் விமான அமைப்பு இருக்கும்.

*விமானம் ஒரு மைலுக்கு சராசரியாக ஐந்து கேலன் எரிபொருளை மட்டுமே பயன்படுத்துகிறது.

*நடுவானில் காற்றழுத்தம் காரணமாக விமான கதவை திறக்க முடியாது.

#பறப்பது எட்டாத கனவா

இன்னும் ஏழு கழுதை வயசானாலும் எப்ப சத்தம் கேட்டாலும் ஏரோப்ளேன் எங்க வருதுனு வானத்தில் பார்ப்பது பால்யத்தின் மிச்சம்.

எஸ்.ரா ஒரு கட்டுரையில் எழுதியிருப்பார்.. இளமையிலிருந்து ஒருவர் விமானப்பயணம் செல்ல வேண்டும் என எண்ணியிருப்பார். மும்பையில் வேலை பார்க்கும் அவர், தாய் இறந்ததால் அவசரத்தில் விமானத்தில் வருவார். எதையும் ரசிக்க முடியாமல் அம்மாவின் இறப்பினையே நினைத்து வருவார். துக்கம் வடிந்து 15 நாட்களுக்குப் பிறகு முதல் விமானப்பயணம் இப்படி சோகமாய் முடிந்ததாய் வருந்துவார்.

இன்னும் பலருக்கு ஒத்தி வைக்கப்பட்ட கோவா பயணம் போல விமானப்பயணமும் தள்ளிப்போய்க் கொண்டே இருக்கும். விமானத்தின் மீதான பிரம்மிப்பும் அது சாமானியனுக்கு ஆனதல்ல என சிறுவயதிலிருந்தே கற்ற பாலபாடமும் இன்னும் தாழ்வு மனப்பான்மையிலேயே டாட்டா காட்ட வைத்துக் கொண்டிருக்கிறது. இதெல்லாம் ஒரு பிரச்னையே இல்லை, ஈசியா பறக்கலாம் எனச் சொன்னாலும் அதற்கான காலமும் நேரமும் வராமல் இன்னும் பலர் வானத்தை அண்ணாந்து பார்த்தே வாழ்கின்றனர்.. ஒரு நாள் நானும் பறப்பேன் எனும் உந்துதலோடு..!

- மணிகண்டபிரபு

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/



source https://www.vikatan.com/oddities/miscellaneous/reader-shares-his-first-flight-travel-experience

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக