சளிப் பரிசோதனையின் மூலம் கோவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டதும் அறிகுறிளற்ற, லேசான பாதிப்புள்ளவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்திக்கொள்ளவோ, அரசின் க்வாரன்டீன் மையங்களிலோ அனுமதிக்கப்படுகின்றனர். மிதமான மற்றும் தீவிர பாதிப்புள்ளவர்களை மருத்துவமனையில் அனுமதிக்கின்றனர்.
அவ்வாறு அனுமதிக்கப்படும்போது நுரையீரலில் தொற்றின் தீவிரத்தைப் பரிசோதிக்க நெஞ்சுப் பகுதியில் சி.டி ஸ்கேன், எக்ஸ்-ரே பரிசோதனைகள் செய்யப்படும். இந்த நடைமுறை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் சிகிச்சை நெறிமுறைகளிலும் இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில் சென்னை சாலிகிராமம் ஜவஹர் பொறியியல் கல்லூரியில் அமைந்துள்ள தமிழகத்தின் முதல் சித்தா கொரோனா பராமரிப்பு மையத்தில் நோய் உறுதி செய்யப்பட்டவர்களுக்கு சில ரத்தப் பரிசோதனைகள் செய்யப்படுவதாகவும் அதற்கு ரூ.6,000 கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. எதற்காக இந்தப் பரிசோதனைகள் செய்யப்படுகின்றன என்று தெரிந்துகொள்ள மையத்தை நடத்திவரும் சித்த மருத்துவர் வீரபாபுவிடம் பேசினோம்.
``கோவிட்-19 நோயால் பாதிக்கப்படுபவர்களுக்கு ரத்தத்தின் சில கூறுகளின் அளவு அதிகரிப்பதால் ரத்த உறைவு ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படுகிறது. இதைத் தடுப்பதற்காக எங்கள் மையத்தில் அனுமதிக்கப்படும் நோயாளிகளில் நான்கு நாள்களுக்கு மேல் தீவிர காய்ச்சல், மூச்சுத்திணறல் பிரச்னை இருப்பவர்களுக்கு ரத்தத்தில் D-Dimer, ferritin, il6 ஆகிய கூறுகளின் அளவைப் பரிசோதிக்கிறோம்.
நோயாளிக்கு சர்க்கரைநோய் இருந்தால் hba1c பரிசோதனையும் செய்யப்படுகிறது. அளவில் மாற்றங்கள் இருக்கும்பட்சத்தில் ரத்தம் உறையாமல் இருப்பதற்காக சித்த மருந்துகள், கஷாயம் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன. சிகிச்சைக்குப் பிறகு மீண்டும் பரிசோதனை செய்யப்பட்டு அவை கட்டுக்குள் வந்துவிட்டனவா என்பதையும் பார்க்கிறோம். அதன் காரணமாகவே எங்கள் மையத்தில் இதுவரை உயிரிழப்புகள் எதுவும் நிகழாமல் தடுக்கப்பட்டுள்ளது.
தொடர் காய்ச்சல், மூச்சுத்திணறல் இல்லாதவர்களுக்கு இந்தப் பரிசோதனை தேவையில்லை. இந்தப் பரிசோதனைகளைத் தனியார் ஆய்வகத்தில்தான் எடுக்க வேண்டும் என்று யாரையும் கட்டாயப்படுத்துவதில்லை. அரசு மருத்துவமனைகளில் பரசோதித்து ரிப்போர்ட்டைக் கொடுத்தாலும் போதுமானது.
Also Read: கோவிட்-19: வீட்டில் பாதுகாப்பு... ஆபத்தை எதிர்கொள்வது எப்படி?
இந்தப் பரிசோதனை கோவிட்-19 சிகிச்சை நெறிமுறைகளில் இடம்பெறவில்லை. மருத்துவமனைகளில் நிகழும் உயிரிழப்புகளின் அடிப்படையில் ரத்தம் உறைதல்தான் முக்கியக் காரணம் என்று கண்டறியப்பட்டுள்ளது. ரத்த உறைதல் ஏற்படுவதைத் தடுப்பதற்காகவே இந்தப் பரிசோதனைகள் செய்யப்படுகின்றன" என்றார்.
source https://www.vikatan.com/health/healthy/clarification-over-covid-19-siddha-care-centres-costly-blood-test-for-patients
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக