`2021-ல் மாஸ்டர் படமும் ரிலீஸ்... மாஸ்டரின் பொலிட்டிகல் படமும் ரிலீஸ்... அதாங்க அரசியல் கட்சியைத் தொடங்கிடுவாரு எங்க மாஸ்டர்’ என உற்சாகமாக வலம்வருகிறார்கள் விஜய் ரசிகர்கள்.
சமீபத்தில் சென்னை பனையூரில் தன்னுடைய மக்கள் இயக்கத்தினரைச் சந்தித்துப் புகைப்படங்கள் எடுத்திருக்கிறார் நடிகர் விஜய். அதன் பிறகு சமூக வலைதளங்களில் இப்படியான பதிவுகளும், போஸ்டர்களும் அதிகரிக்க, தமிழ்நாட்டில், `திரைத்துறை சார்ந்த ஒருவரிடமிருந்து மற்றுமொரு புதிய கட்சி உதயமா?' என்ற கேள்வியோடு விஜய் மக்கள் இயக்கத்தைச் சார்ந்த மூத்த நிர்வாகிகளைத் தொடர்புகொண்டோம்.
``சமீபத்தில்தான் எங்க அகில இந்தியத் தலைமை, மாவட்டங்களை இரண்டு மூன்றாகப் பிரிச்சு புதிய நிர்வாகிகளை நியமிச்சுருக்காங்க. கொரோனா தொடக்க காலத்தில் தலைவர் விஜய் யாரையும் சந்திக்கவேயில்லை. புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்ட பிறகுதான் வெளியே வந்தார். அதையொட்டி புதிய நிர்வாகிகளை அழைச்சு வாழ்த்துகளையும் தெரிவிச்சாரு. அந்தப் படங்களைத்தான் ஆர்வத்தோடு சமூக வலைதளங்களில் ரசிகர்கள் வெளியிட்டிருக்காங்க. சந்திப்பின்போது, `வீட்ல எல்லோரும் எப்படி இருக்காங்க...’, `கொரோனா காலத்தில் எல்லோரும் பாதுகாப்பா இருக்காங்களா...’, தொழிலெல்லாம் எப்படிப் போகுது...’ என வழக்கம்போலவே அக்கறையாகக் கேட்டிருக்கார்.
அடுத்ததா, சமீபத்தில எம்.ஜி.ஆர் போல நிறைய போஸ்டர்களெல்லாம் ஒட்டியிருந்தாங்க இல்லையா... அதையொட்டி, `உங்க அன்புக்கு நன்றி. ஆனாலும், போஸ்டர்கள் ஓட்டும்போது அதில் இடம்பெறும் வாசகம் பற்றித் தலைமையிடம் அனுமதி வாங்கிய பிறகே ஓட்ட வேண்டும்' என்றும் வலியுறுத்தியிருக்காரு. மொத்தத்தில் புதிய நிர்வாகிகளை உற்சாகப்படுத்தவே இந்தத் திடீர் சந்திப்பை நிகழ்த்தியிருக்கார் தலைவர் விஜய். மற்றபடி தீவிரமான எந்த அரசியல் டிஸ்கஷனுமில்லை" என்றார்கள்.
ஆனாலும், ``எதுவுமில்லாமல்தான் தேர்தல் நெருங்கும்போது இந்த திடீர் சந்திப்பை நிகழ்த்தியிருக்கிறாரா விஜய்?" என நிர்வாகிகளிடம் கேள்விகளை முன்வைத்தோம். ``விட மாட்டேங்குகிறீங்களே...’’ எனப் புன்னகைத்தவர்கள், தொடர்ந்து, ``வழக்கமா விஜய்யைச் சந்திப்பவர்கள் என்ன சொல்வார்களோ அதேபோல இந்தச் சந்திப்பிலும், `நீங்க அரசியல் கட்சி தொடங்கி தேர்தலைச் சந்திக்கணும்ணே...' என்றனர் அனைவரும் ஒருமித்த குரலோடு. `அதுதான் ஏற்கெனவே தி.மு.க., அ.தி.மு.க., பி.ஜே.பி-னு பல கட்சிகள் இருக்கே... புதுசா நானும் தொடங்கணுமா?’ என்றார் விஜய். `தேசியம், திராவிடம்னு கட்சிகளுடைய ஆட்சிகள் மீது மக்களுக்கு அதிருப்தி இருக்கு. நீங்க தமிழர்களுக்காகக் கட்சி தொடங்கணும்’ என்றனர், இயக்கத்தின் புதிய நிர்வாகிகள். `சரி... கட்சி தொடங்கினால் எவ்வளவு சதவிகித வாக்குகளை நாம வாங்குவோம் சொல்லுங்க?’ என்றிருக்கிறார் விஜய்.
`மதுரை மாநகரத்தில் 10 தியேட்டர்கள்ல உங்க படம் வெளியாகுதுன்னா முதல் ஒரு வாரம் நான்கு காட்சிகளும் ஹவுஸ்ஃபுல் ஆகுது. முதல் காட்சி மட்டும்தான் ரசிகர் மன்றக் காட்சி. அப்படின்னா பலதரப்பட்ட மக்களும் உங்க படத்தை விரும்புறாங்கனு அர்த்தம். அதனால, எப்படியும் 40 சதவிகித வாக்குகள் பெற முடியும்' என மத்திய மாவட்டத்தின் புதிய நிர்வாகிகள் தெரிவிக்க, `படம் பாக்குறவங்கல்லாம் ஓட்டுப் போடுவாங்களா?’ என வேடிக்கையாகச் சிரித்தார் விஜய். இளம் நிர்வாகிகள் என்பதால் பொதுவாக மட்டுமே இந்த மீட்டிங்கில் விஜய் பேசினார். ஆனால், இதற்கு முன்பாக மாநில அளவிலான முக்கிய நிர்வாகிகள் சிலரை அழைத்துப் பேசியிருக்கிறார் விஜய். பல மாவட்டத் தலைமைகளை செல்போனில் தொடர்புகொண்டும் பேசியிருக்கிறார்.
சமகால அரசியல் குறித்து மாவட்ட நிர்வாகிகள் தெரிவிக்கும் கருத்துகளைக் கூர்ந்து கவனிச்சிருக்காரு விஜய். அதில் ஒரு முக்கியமான விஷயம், ஷூட்டிங் இல்லாதது, ஊரடங்கு போன்ற காரணங்களால் இந்த கொரோனா காலத்தில் நிறைய புத்தகங்கள், அரசியல் டிஜிட்டல் கட்டுரைகளையும் வாசிச்சிருக்கார். யூடியூபிலும் பல அரசியல் வீடியோக்கள், விவாதங்களைப் பார்த்திருக்கிறார். தனக்கு நெருக்கமான அரசியல் தொடர்புகள், நண்பர்களிடமும் சமகால அரசியல் பிரச்னைகள் குறித்தும் அவர்கள் பேசுவதைக் கேட்டிருக்கார். முன்பெல்லாம் `நீங்க கட்சி தொடங்கி அரசியலுக்கு வந்திடணும்' என்று நிர்வாகிகள் தங்கள் ஆசையை வெளிப்படுத்தினால் சிரித்தபடியே அடுத்த விஷயத்துக்குப் பேச்சை மாற்றிடுவார். ஆனால், தற்போது நிறைய கேள்விகளைக் கேட்கிறார்.
உதாரணமாக, டெல்டா மாவட்டத்தினர், `ஹைட்ரோ கார்பன் திட்டம் உள்ளிட்டவை இங்கு பிரச்னையாக இருக்கின்றன’ என்று தெரிவித்தபோது, `ஆமா, விவசாய நிலங்களில் இது போன்ற திட்டங்களை அமல்படுத்தினால் அலையாத்திக் காடுகளைக்கொண்ட பிச்சாவரம் போன்ற வனப்பகுதி அழிய வாய்ப்பிருக்குனு சொல்றாங்க... அப்படியா?’ என்று எதிர்க் கேள்வியும் கேட்கிறார் விஜய். வட்டாரரீதியாக இருக்கும் தலைவர்கள் பற்றியும், அவங்க செயல்பாடுகள் பற்றியும்கூட விசாரிக்கிறார். மதுரை என்றால், அங்கே அழகிரி எப்படி இருக்கிறார் எனக் கேட்கிறார் .
இதெல்லாம் அவர் தீவிரமாக வாசிக்கிறார், சமகால அரசியல் நிகழ்வுகளை கூர்ந்து கவனிக்கிறார் என்று உணர்த்துகின்றன. அதனாலேயே முன்புபோல் அரசியலுக்கு வாங்கன்னு பொத்தாம் பொதுவா எங்க ஆசையா வெளிப்படுத்தாம, இப்போதெல்லாம் தளபதி விஜய்யிடம் பேசும்போது பல தரவுகளோடுதான் பேசுகிறோம்’’ எனத் தெரிவித்தவர்கள், ``சமகால அரசியல் சூழலை ஒட்டி ஒரு சர்வேயும் எடுத்திருக்கிறோம்'’ என்று அதைப் பகிரத் தொடங்கினர்.
`இந்த ஆட்சி எப்படி நடக்கிறது, எதிர்க்கட்சி செயல்பாடு எப்படி இருக்கிறது, கமல் சாரின் கட்சியை மக்கள் எப்படிப் பார்க்கிறாங்க, ரஜினி சார் கட்சி தொடங்கினால் எப்படியிருக்கும், முக்கியமா நம்ம மக்கள் இயக்கத்தை மக்கள் எப்படிப் பார்க்கிறார்கள்...’ உள்ளிட்ட கேள்விகளை, மத்திய, கிழக்கு, மேற்கு, டெல்டா மண்டலங்களிலுள்ள மக்கள் இயக்கத்தினர் சத்தமில்லாமல் ஒரு சர்வே எடுத்தாங்க. அதில் ஏழைகள் முதல் பெரும் தொழிலதிபர்கள் வரை பலரிடமும் கேள்விகளை முன்வெச்சாங்க. விவசாயிகள், ஆட்டோ ஓட்டுநர்கள், தேநீர்க் கடை வைத்திருப்பவர்கள் என சிறு, குறு தொழில் செய்பவர்களிடம் அதிக அளவில் சர்வே எடுக்கப்பட்டிருக்கிறது.
எடப்பாடி - ஓ.பி.எஸ் உட்கட்சி மோதல், மு.க.ஸ்டாலினை முழுமையாக மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை, நகர்ப்புறங்களில் கமல் சாருக்கு இருக்கும் ஆதரவு, ரஜினி சார் இன்னும் கட்சியே தொடங்கவில்லை... என்று பலவற்றையும் மக்கள் தெரிவிச்சிருக்காங்க. அடுத்து, `மெர்சல்’ தொட்டு ஜல்லிக்கட்டு, தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்களின் குடும்பத்தைச் சந்தித்தது, அனிதா குடும்பத்தைச் சந்தித்தது, இப்போதுகூட ரெய்டுக்குப் பிறகு பஸ் மீது ஏறி செல்ஃபி எடுத்தது... என இதெல்லாம் மக்களிடம் உங்களுக்கு நல்ல வரவேற்பைக் கொடுத்திருக்கிறது. அதேநேரம், இந்த கொரோனா நேரத்தில் ஏதாவது பேசுவீர்கள் என எதிர்பார்த்தார்கள். `ஏன் விஜய் எதுவும் பேசவில்லை' என்ற கருத்தும் பல இடங்களில் கேட்கப்பட்டது’ என தளபதி விஜய்யிடம் முழுமையான அறிக்கையைக் கொடுத்திருக்கிறார்கள் அவர்கள்.
Also Read: `மக்கள் பணிகள் தொடரட்டும்..!’ - மக்கள் இயக்கம் நிர்வாகிகளுடன் திடீர் ஆலோசனையில் நடிகர் விஜய்
இதையெலாம் கூர்ந்து கவனித்த விஜய், `சரி, அப்படியென்றால், நாம் நேரடி அரசியலில் களமிறங்கலாமா, எப்போது களமிறங்கலாம், தனித்தா, கூட்டணியா?’ என வரிசையாகக் கேள்விகளை மீண்டும் அடுக்கியிருக்கிறார். கருணாநிதி, ஜெயலலிதா என இரு பெரும் தலைவர்கள் இல்லாத இந்த வெற்றிடத்தை இப்போதே பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
தூத்துக்குடி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருச்சி , மதுரை, சேலம், நாகப்பட்டினம், கடலூர், சென்னை இங்கெல்லாம் நாம் மிக வலிமையாக இருக்கிறோம். கிட்டத்தட்ட 175 தொகுதிகள் வரை நாம் முழுமையாக பூத் கமிட்டியை அமைத்திருக்கிறோம். இப்போது தேர்தலில் நின்றாலும் சுமார் 70 தொகுதிகளில் ஜெயிக்கலாம். கூட்டணி என்றால் ஆளும்கட்சிக்கு எதிரான கூட்டணியை அமைத்தால் சரியாக இருக்கும். தனித்தே நாம் ஆட்சியதிகாரத்தை வெல்ல வேண்டுமென்றால் 2026 -ல் முடியும். அதாவது சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் 2021 நிச்சயம், 2026 இலட்சியம்' என்று ஆர்வத்தோடு தெரிவித்தார்கள் பலரும்.
எல்லாவற்றையும் வழக்கம்போல கேட்டுக்கொண்டு `இப்போ சுமார் 10 மாவட்டங்களில் சேவை செய்யும் விலையில்லா விருந்தகத்தை எல்லா மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்துங்க. இப்போ தினமும்,109 பேருக்கு உணவளிக்கிறீங்க. இந்த எண்ணிக்கையையும் அதிகப்படுத்துங்க. உலகத்துல பசியை போக்குறதைவிட எதுவும் பெரிய விஷயம் இல்லை. கொரோனா இன்னும் முழுசா முடிந்தபாடில்லை. எனவே, பாதுகாப்பாக இருங்க' எனச் சுருக்கமாக விஜய் முடித்துக்கொள்ள, அவரிடம் மத்திய மற்றும் தென் மாவட்டங்களைச் சேர்ந்த சில நிர்வாகிகளோ , `வரும் தேர்தலில் நாங்கள் சுயேச்சையாகப் போட்டியிடலாமா?' என்று கேட்டிருக்கிறார்கள். `எந்தக் கட்சியையும் சாராமல், ஓட்டுக்குப் பணம் தராமல் போட்டியிடலாம். மக்களுக்குச் சேவை செய்வது நல்ல விஷயம்தானே' என்றார் விஜய். `அப்படியென்றால் மக்கள் இயக்கக் கொடியைப் பயன்படுத்தலாமா?' என இயக்கத்தினர் வேடிக்கையாகக் கேட்க, அதற்கு வழக்கமான புன்னகையையே பதிலாகக் கொடுத்திருக்கிறார் விஜய். `ஓ.கே சொல்லவில்லைதான். ஆனால், எதிர்க்கவுமில்லை. ஒண்ணு மட்டும் புரியுதுங்க... அவர் மனசுல ஏதோ திட்டமிருக்குங்க’’ என்கின்றனர் உற்சாகம் குறையாமல்.
விஜய் மக்கள் இயக்கத்தினரின் கருத்துகளின் மூலம் விஜய்யின் எண்ண ஓட்டத்தை அனுமானிக்க முடிந்தாலும் மற்றொருபுறம், சமீபத்தில், ``விஜய் மக்கள் இயக்கம், மக்கள் விருப்பப்படும்போது அரசியல் கட்சியாக மாற்றம் பெறும் . மக்கள் அழைக்கும்போது நாங்கள் வருவோம்’’ என்று விஜய்யின் தந்தை இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்ததை விஜய் அதிகம் ரசிக்கவில்லை என்கின்றனர் விஜய்க்கு நெருக்கமானவர்கள்.
`தனது அப்பாவைப் பொது இடங்களில் சந்தித்தால், பேசுவதைக் கடந்து, பல ஆண்டுகளாகவே அவரிடமிருந்து தள்ளியே இருந்துவருகிறார் விஜய். குறிப்பாக, மக்கள் இயக்கத்திலிருந்து தள்ளிவைக்கப்பட்டிருந்த பாஸ்கர், செல்வகுமார் போன்றவர்களுடன் எஸ்.ஏ.சி தொடர்பில்தான் இருக்கிறார். மக்கள் இயக்கத்திலிருந்தாலும் டம்மியாக்கப்பட்டிருக்கும் குமார், ரவிராஜா போன்றவர்களும் எஸ்.ஏ.சி-யோடு நெருக்கமானவர்கள். இவர்கள் சமீபத்தில் மக்கள் இயக்கத்தின் மாவட்டத் தலைமைகளைத் தொடர்புகொண்டு, `வரும் தேர்தலில் எந்தக் கட்சிக்கு வாக்களிக்கலாம், கூட்டணி வைக்கலாமா என்று அப்பா ( எஸ்.ஏ.சி) கேட்கிறார்' எனப் பல கேள்விகளை முன்வைத்திருக்கிறார்கள். இவையெல்லாம் விஜய்யின் காதுகளுக்குப் போயிருக்கின்றன.
`விஜய் பா.ஜ.க-வுக்கு சாதகமாகச் செயல்படப் போகிறார்’ என்று பரவும் வதந்திக்கெல்லாம்கூட இந்த குரூப்தான் காரணம் என ரொம்பவே கோபப்பட்டார் விஜய். இதையெல்லாம் வைத்துத்தான் `மக்கள் இயக்கம்' தன்னுடைய முழுக் கட்டுப்பாட்டில் உள்ளது என்பதையும், அரசியல் உள்ளிட்ட எந்தக் கருத்தும், தான் சொன்னால் மட்டுமே உண்மை' என உணர்த்தவும், இயக்கத்தினர் தனக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என தெரியப்படுத்தவுமே தற்போது பனையூரில் நிர்வாகிகளைச் சந்தித்தார் விஜய்’’ என்கின்றனர் புதிர்களை உடைத்தபடி.
பாஸ்கர் என்பவர் தற்போது பா.ஜ.க-வில் இருக்கிறார். இவர் மூலமாகவும் பா.ஜ.க-வினர் எஸ்.ஏ.சி-யை வளைக்க முயல்கிறார்கள். அதாவது, பேசிவருகிறார்கள். எஸ்.ஏ.சி-யைப் பொறுத்தவரை, `பா.ஜ.க-வில் இணையும் எண்ணம் இல்லை' எனத் தெரிவித்திருக்கிறார். ஆனாலும் விஜய்யின் அரசியல் பிரவேசம் என்பது தன்னைச் சுற்றி நடக்க வேண்டும் எனக் கருதுகிறார். இந்தத் தேர்தலிலேயே அவரை நேரடி அரசியலுக்குக் கொண்டு வரணும், தான் ஆதிக்கம் செலுத்தியபோது இருந்த மக்கள் இயக்கத்தின் பல மாவட்ட நிர்வாகிகளையும் கன்ட்ரோல் எடுத்து தன்னுடைய பலத்தை நிரூபிக்கணும் எனக் கருதுகிறார் அவர். அதையொட்டித்தான் தன்னுடைய வலது, இடது கரம்போல இருக்கும் ரவிராஜா, குமாரைப் பயன்படுத்திக்கொள்கிறார். மேலும், பி.ஜே.பி தன்னோடு பேசிவருகிறது என்ற பேச்சையும் பரவச் செய்து, அதன் மூலம் தன்னுடைய இருப்பையும் வெளிக்காட்ட முயல்கிறார்.
`மாஸ்டர்’ படம் எப்போது ரிலீஸ் என்பதை எந்த அளவுக்கு உறுதியாக சொல்லிவிட முடியாதோ, அதேபோலத்தான் `2021-ல் மாஸ்டர் விஜயின்’ கட்சி ரிலீஸாகிவிடுமா என்பதையும் உறுதியாகச் சொல்லிவிட முடியாதபடி விஜய்யைச் சுற்றி பட்டிமன்றமே நடந்துவருகிறது. `ஒருவாட்டி முடிவெடுத்துட்டா என் பேச்சை நானே கேட்க மாட்டேன்’ என்பார் `போக்கிரி’ படத்தில் விஜய். அந்த முடிவெடுப்பதில்தான் `மாஸ்டருக்கு’ ஏகப்பட்ட குழப்பங்களே..!
source https://www.vikatan.com/news/politics/reason-behind-vijays-meeting-with-makkal-iyakkam-cadres
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக