ஒலிம்பிக் வரலாற்றில் முதல்முறையாக டேபிள் டென்னிஸின் மூன்றாவது சுற்றுக்குள் நுழைந்த முதல் வீரர் என்கிற சாதனையை நேற்று படைத்தார் மனிகா பத்ரா. இன்று சரத் கமலும் தனது இரண்டாவது சுற்றில் போர்ச்சுகீசிய வீரரைத் தோற்கடித்து மூன்றாவது சுற்றுக்குள் நுழைந்து இந்தியாவின் இரண்டாவது வீரர் என்கிற பெருமையைப் பெற்றிருக்கிறார்.
சென்னையைச் சேர்ந்த சரக் கமல் இன்று காலை போர்ச்சுகீசிய வீரர் டியாகோ அப்பலோனியாவைச் சந்தித்தார். இதன் முதல் சுற்றில் மிகவும் பதற்றத்தோடு ஆடிய சரத் கமல் வெறும் 2 புள்ளிகளை மட்டுமே பெற்று 11-2 என முதல் செட்டை இழந்தார். ஆனால், இரண்டாவது செட்டில் பதற்றத்தைக் குறைத்து முழு கவனத்தையும் டேபிளின் மீது கொண்டுவந்த சரத் கமல் இரண்டாவது மற்றும் மூன்றாவது செட்களை 11-8,11-5 என கைப்பற்றினார். நான்காவது செட்டிலும் முதலில் சரத் கமலின் ஆதிக்கமே இருந்த நிலையில் மீண்டு வந்து 11-9 என போர்ச்சகீசிய வீரர் டியாகோ இந்த செட்டைக் கைப்பற்றினார்.
இதனால் ஆட்டம் இன்னும் விறுவிறுப்பானது. டேபிளைவிட்டுத் தள்ளி நின்று ஆடும் ஆட்ட முறையை பின்பற்றினார் சரத் கமல். இந்திய வீரர் செம கூலாக ஆட, இப்போது போர்ச்சுகீசிய வீரர் தவறுகளை செய்ய ஆரம்பித்தார். இதனால் ஐந்தாவது மற்றும் ஆறாவது செட்களை 11-6, 11-9 எனக் கைப்பற்றி ஆட்டத்தை வென்றார் சரத் கமல்.
இதற்கிடையே இன்று மதியம் 1 மணிக்கு நடைபெற இருக்கும் மூன்றாவது சுற்று போட்டியில் இந்தியாவின் மனிகா பத்ரா, ஆஸ்திரியாவின் சோஃபியா பல்கோனாவாவைச் சந்திக்கிறார். சோஃபியா தற்போதைய ரேங்கிங்படி 17வது இடத்தில் உள்ளார். மனிகா பத்ரா ரேங்கிங்கில் 61-வது இடத்தில் இருக்கிறார்.
சரத் கமல் தனது மூன்றாவது சுற்றுப் போட்டியில் சீனாவின் மா லாங்கை நாளை எதிர்கொள்கிறார். இப்போட்டி இந்திய நேரப்படி நாளை காலை 6.30 மணிக்கு நடைபெற இருக்கிறது.
source https://sports.vikatan.com/olympics/sharath-kamal-and-manika-batra-creates-history-at-tokyo-olympics-advances-to-third-round
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக