Ad

செவ்வாய், 27 ஜூலை, 2021

மேக்கேதாட்டு: `மத்தியஅரசுக்கு எதிராகவும் போராடுவோம்’ -திமுகவுக்கு எதிரான போராட்டத்தில் வைத்திலிங்கம்

தி.மு.க தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி அ.தி.மு.க சார்பில் தஞ்சாவூரில் கருப்பு கொடி ஏந்தி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், `மேக்கேதாட்டுவில் அணை கட்டுவதை தடுத்து நிறுத்தாவிட்டால் மத்திய அரசுக்கு எதிராகவும் போராட்டம் நடத்துவோம்’ என துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் தெரிவித்தார்.

தி.மு.கவில் தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேண்டும் என்பதை வலியுறுத்தி அ.தி.மு.க சார்பில் தமிழகம் முழுவதும் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது, அதே போல் தஞ்சாவூர் மாவட்டம் முழுவதும் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தஞ்சாவூர் நகரப் பகுதியில் அ.தி.முக அலுவலகம் அமைந்துள்ள ஆற்றுப்பாலத்தில் துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான அ.தி.மு.கவினர் கலந்து கொண்டனர். சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதற்காக சாலையில் வட்டம் வரையப்பட்டிருந்தது. அதனை கடைப்பிடிக்காமல் வட்டத்திற்கு வெளியே நெருங்கியபடி நிர்வாகிகள் நின்றனர்.

Also Read: `எது நடக்கவிருக்கிறதோ, அது நன்றாகவே நடக்கும்!’ - ஓ. பன்னீர் செல்வம்

தி.மு.க தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்ற பதாகைகள் மற்றும் கருப்பு கொடிகளை பிடித்தவாறு கோஷமிட்டனர்.

பின்னர் வைத்திலிங்கம் செய்தியாளர்களிடம் பேசுகையில், ``மேக்கேதாட்டுவில் அணை கட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும். நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். பெட்ரோல் டீசல் விலையை ஆட்சிக்கு வந்தால் குறைப்பதாக கூறியதை நிறைவேற்ற வேண்டும். அதிமுகவினர் மீது பொய் வழக்குப் போடுவதை நிறுத்த வேண்டும். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முறையான சிகிச்சை அளிக்க வேண்டும். குடும்பத் தலைவிக்கு மாதம் ரூ. 1,000 வழங்குவதாக அறிவித்ததை உடனே வழங்க வேண்டும். மத்திய அரசு மேக்கேதாட்டுவில் அணை கட்டுவதை தடுத்து நிறுத்தாவிட்டால், மத்திய அரசுக்கு எதிராகவும் அ.தி.மு.க சார்பில் போராட்டம் நடத்தப்படும்” என்றார்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/admk-leader-vaithilingam-says-will-protest-against-bjp-government-if-they-didnt-stop-mekadatu-project

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக