Ad

வியாழன், 29 ஜூலை, 2021

திருவள்ளூர்: தவறான ஊசி; இளம்பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்! - குழந்தை பிறந்த 3-வது நாளில் பரிதாபம்

திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காட்டை அடுத்த சின்ன களக்காட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரதீப் (வயது 30). இவரின் மனைவி பெயர் வனிதா (26). நிறைமாத கர்ப்பிணியாக இருந்த வனிதாவை கணவர் பிரதீப் குடும்பத்தினர் கடந்த 22-ம் தேதி திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் மகப்பேறு சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு வனிதாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது. அதையடுத்து, மூன்று நாள்கள் வனிதா குழந்தையுடன் மருத்துவமனை சிகிச்சையில் இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியதாகக் கூறப்படுகிறது.

குழந்தை பிறந்து மூன்று நாள்களில் வனிதா டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீட்டுக்குத் திரும்பவிருந்த நிலையில், மணிமாலா என்ற செவியிலர் வனிதாவுக்குத் தவறுதலாக டாக்ஸிம் (Taxim) என்ற அலர்ஜி ஊசியைச் செலுத்தியதாகவும், அடுத்த சில நிமிடங்களில் இளம்பெண் வனிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டு, அவர் சுயநினைவை இழந்து மயக்கமடைந்ததாகவும் கூறப்படுகிறது. அதையடுத்து, வனிதாவை பரிசோதித்த மருத்துவர்கள் அவரின் உடல்நிலை மிகவும் மோசமடைந்துவிட்டதாகக் கூறியதால், வனிதாவின் உறவினர்கள் அவரைத் திருவள்ளூர் அரசு மருத்துவமனையிலிருந்து உயர் சிகிச்சைக்காக சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு சென்று அனுமதித்திருக்கின்றனர்.

உயிரிழந்த வனிதா

அங்கு, வனிதாவைப் பரிசோதித்து மருத்துவர்கள் சிகிச்சை அளித்துவந்த நிலையில், வனிதா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். அதையடுத்து, வனிதாவின் உடலை வாங்க மறுத்து அவரது உறவினர்கள் மருத்துவமனை ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதைத் தொடர்ந்து, பிறந்து மூன்று நாள்களே ஆன பச்சிளம் குழந்தையுடன் திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆகியோரிடம், அரசு மருத்துவமனை செவிலியர்கள், மருத்துவர்களின் கவனக்குறைவால்தான் வனிதா உயிரிழந்துவிட்டதாகக் கூறி சம்பவம் தொடர்பாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு புகார் அளித்தனர்.

புகார்

புகாரைப் பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் சம்பவம் தொடர்பாக உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு திருவள்ளூர் அரசு மருத்துவமனை முதல்வருக்கு உத்தரவிட்டார். ஆட்சியரின் உத்தரவின்பேரில், திருவள்ளூர் அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரி முதல்வர் அரசி பணியில் கவனக்குறைவாகச் செயல்பட்டு இளம்பெண் உயிரிழக்கக் காரணமாக இருந்த செவிலியர் மணிமாலாவைப் பணியிடை நீக்கம் செய்தார்.

மகப்பேறு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட இளம்பெண் ஒருவர் மருத்துவமனை செவிலியரின் தவறான சிகிச்சையால் உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.



source https://www.vikatan.com/news/crime/a-young-woman-died-due-to-a-nurses-wrong-treatment-in-tiruvallur-government-hospital

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக