Ad

வெள்ளி, 30 ஜூலை, 2021

கட்சியை வளர்க்க யாத்திரை..! - அண்ணாமலையின் புது வியூகம்

2021 சட்டமன்றத் தேர்தலில் 20 தொகுதிகளில் போட்டியிட்ட பா.ஜ.க., நான்கு தொகுதிகளில் வெற்றிப் பெற்றது. அ.தி.மு.க கூட்டணியில் பங்கு பெற்றிருந்தும் டெல்லி எதிர்பார்த்த வெற்றியை தமிழக பா.ஜ.க-வால் பெற முடியவில்லை. இந்தச் சூழலில்தான், தமிழக பா.ஜ.க தலைவராக இருந்த எல்.முருகன் மத்திய இணையமைச்சர் ஆக்கப்பட்டு, புதிய தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்டார். கட்சியை வளர்ப்பதோடு, தி.மு.க-வுக்கு எதிராக பிரதான எதிர்கட்சியாக பா.ஜ.க-வை முன்னிறுத்தும் பொறுப்பும் அவருக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. இதற்காக, தமிழ்நாடு முழுவதும் யாத்திரைச் செல்ல திட்டமிட்டிருக்கிறாராம் அண்ணாமலை.

பா.ஜ.க கொடி

இதற்கான வியூகப் பணிகளில் ஈடுபட்டிருக்கும் பா.ஜ.க மூத்த நிர்வாகிகள் சிலரிடம் பேசினோம். “கடந்த அ.தி.மு.க ஆட்சி எங்களுக்கு அனுகூலமாக இருந்தும், கிராமப்புறங்களில் கட்சிக் கொடியை நடுவதற்கு உண்டான வாய்ப்புகளை பா.ஜ.க பயன்படுத்திக் கொள்ளவில்லை. கிளை அமைப்புகளையும் தீவிரமாகத் தொடங்கவில்லை. இதை ஒரு குறைபாடாகவே டெல்லி தலைமைப் பார்க்கிறது. தவிர, தமிழகத்திலுள்ள சுமார் 67 ஆயிரம் பூத்திலும், ஒரு பூத்துக்கு குறைந்தபட்சம் 15 உறுப்பினர்கள் வீதம் பூத் கமிட்டி அமைக்க வேண்டுமென்று டெல்லி உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவும் கடைப்பிடிக்கப்படவில்லை. இந்தச் சூழலில்தான், மாநில தலைமையில் மாற்றம் நடைபெற்று புதிய தலைவராக அண்ணாமலை வந்தார்.

Also Read: “2026-ல் 150 இடங்களில் வெற்றி!” - லட்சியம் சொல்லும் அண்ணாமலை

கட்சியை வளர்ப்பதற்குண்டான பணிகளில் வேகம் காட்டும் அண்ணாமலை, தமிழகம் முழுவதும் யாத்திரை செல்லத் திட்டமிட்டிருக்கிறார். அரசியல் யாத்திரை செல்வது ஒன்றும் புதிதல்ல. ராஜமென்ம பூமி விவகாரத்துக்காக எல்.கே.அத்வானி ரத யாத்திரைச் சென்றார். இது பா.ஜ.க-வுக்கு மிகப்பெரிய எழுச்சியை உருவாக்கியது. 2003-ல் தெலுங்கு தேசம் கட்சியின் ஆட்சிக்கு எதிராக அப்போதைய ஒருங்கிணைந்த ஆந்திர காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி யாத்திரை சென்றார். கிட்டத்தட்ட 60 நாள்கள் 1500 கி.மீ தூரம் நடந்து ஒரு பெரிய அரசியல் ப்ரளயத்தையே ஒய்.எஸ்.ஆர் உருவாக்கினார்.

வேல் யாத்திரை

2019 நாடாளுமன்றத் தேர்தல் சமயத்தில், சைக்கிள் யாத்திரையை உத்திரப் பிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் நடத்தினார். அதே காலக்கட்டத்தில்தான், பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கான இடஒதுக்கீடு தொடர்பான விவகாரத்தை மையப்படுத்தி, பீகாரில் லல்லு பிரசாத்தின் மகன் தேஜஸ்வி யாதவின் யாத்திரையும் நடத்தப்பட்டது. சமீபத்தில் கூட மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தல் சமயத்தில் பரிவர்தன் யாத்திரையை அம்மாநிலத்தில் பா.ஜ.க நடத்தியது. தமிழகத்தில் பா.ஜ.க தலைவராக இருந்த எல்.முருகன் நடத்திய வேல் யாத்திரை, பா.ஜ.க-வை பட்டித் தொட்டி எங்கும் பிரபலப்படுத்தியது. ஆக, மக்களிடம் கட்சியின் கொள்கைகளைக் கொண்டு சேர்க்கவும், பொதுப் பிரச்னையில் அரசின் கவனத்தை ஈர்க்கவும் யாத்திரை மேற்கொள்வது அரசியல் கட்சிகளின் வழக்கம். இந்த வழிமுறையை தமிழக பா.ஜ.க கையில் எடுக்க திட்டமிட்டுள்ளது.

Also Read: ஓரணியில் திரளும் எதிர்கட்சிகள்.. பா.ஜ.க-வின் பலம் பெருகுவதைக் காட்டுகிறதா? - ஒரு பார்வை

வருவாய்த்துறை அடிப்படையிலான தமிழகத்தின் 38 மாவட்டங்களும் ஆறு மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு மண்டலத்திலும் குறிப்பிட்ட சில நாள்கள் யாத்திரை செல்ல அண்ணாமலை திட்டமிட்டிருக்கிறார். அவர் நடந்து செல்வதற்குத்தான் ஆலோசிக்கப்பட்டிருக்கிறது. இந்த நடைபயண யாத்திரையின் போது, கிராமப்புறங்களில் கட்சிக் கொடியை ஏற்றவும், கிளைச் செயலாளர்களை ஊக்கப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. தி.மு.க-வின் போலியான வாக்குறுதிகள், அக்கட்சியின் தமிழர் விரோத நடவடிக்கைகளை மையப்படுத்தி இந்த நடைபயணத்தின் போது மக்களிடம் கருத்துக்களை கொண்டு செல்லவுள்ளோம்.

Also Read: `கதை, திரைக்கதை, வசனம்... ஒட்டுக்கேட்பு என்ற படம்; புதிய ஆர்டிஸ்ட் மம்தா!’ - சாடும் அண்ணாமலை

எந்தெந்த ரூட்டுகளில் பயணிப்பது குறித்து விவாதித்து வருகிறோம். கொரோனா காலக்கட்டம் என்பதால், தற்போது அரசியல் நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இந்த தடை விரைவிலேயே நீங்குமென எதிர்பார்க்கிறோம். தவிர, ஆகஸ்ட் இரண்டாவது வாரத்தில் இடைக்கால பட்ஜெட் தாக்கலாகுமென தெரிகிறது. பட்ஜெட் தாக்கலுக்குப் பிறகு, கொரோனா ஊரடங்கு நிலையைப் பொறுத்து அண்ணாமலையின் இந்த யாத்திரை திட்டம் அறிவிப்பாகும். ஊரடங்கு தளர்வுகளுக்குப் பிறகும் ஒருவேளை எங்கள் யாத்திரைக்கு போலீஸ் அனுமதி மறுத்துவிட்டால், அதையும் எதிர்கொண்டு யாத்திரை செல்லவே திட்டமிட்டிருக்கிறோம்” என்றனர்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.

தமிழகத்தில் சுமார் 12,500 ஊராட்சி மன்றங்கள் இருக்கின்றன. வரும் டிசம்பர் மாதத்திற்குள் ஒன்பது மாவட்ட ஊரகப் பகுதிகளுக்கும், பேரூராட்சி, நகர, மாநகர பகுதிகளுக்கும் சேர்த்து உள்ளாட்சித் தேர்தலை நடத்திட தி.மு.க அரசு திட்டமிட்டுள்ளது. இந்த உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்னதாகவே, யாத்திரையை மேற்கொண்டு ஊராட்சி மன்றங்களில் பா.ஜ.க-வை வலுப்படுத்த வியூகம் வகுக்கப்படுகிறதாம். வழக்கமாக, தி.மு.க., அ.தி.மு.க என எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும் சரி, தேசிய கட்சிகளின் கொடிக் கம்பங்களை கிராமப்புறங்களில் நடுவதை திராவிடக் கட்சிகள் விரும்புவதில்லை. கொங்கு மண்டல கிராமங்களில் கட்சியின் கொடிக்கம்பம் நடப்படும்போது காங்கிரஸ் கட்சி கூட சில சமயங்களில் எதிர்ப்புகளைச் சந்தித்துள்ளது. அந்த எதிர்ப்புகளையெல்லாம் மீறித்தான் காங்கிரஸ் வளர்ந்திருக்கிறது. அதுபோல, தங்கள் கட்சியின் கொடியும் ஒவ்வொரு கிராமத்திலும் பறக்க வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறது பா.ஜ.க. அதற்கு இந்த யாத்திரைத் திட்டம் கைகொடுக்கும் என்று கருதுகிறார்கள். கைகொடுக்குமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்!



source https://www.vikatan.com/news/politics/tamilnadu-bjp-plans-to-do-yatra-against-dmk-regime

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக