Ad

புதன், 28 ஜூலை, 2021

புத்தம் புது காலை : மலையில் ஒரு புலி இறந்தால், தஞ்சையில் பத்தாயிரம் ஏக்கர் நிலம் ஏன் தரிசாகிறது?

ஒருமுறை பள்ளிக் குழந்தைகளிடையே பேசிக் கொண்டிருக்கும்போது, "புலிகள் எண்ணிக்கை அதிகமானால் மனிதன் அதிக நாள் உயிர்வாழ்வான்" என்று நான் சொன்னவுடன் அங்கிருந்த மாணவ மாணவியர் சிரித்துவிட்டனர்.


"காட்டுக்கு ராஜா சிங்கம் என்கிறார்கள். இந்திய அரசு சின்னமான அசோக ஸ்தூபியிலும் நான்கு சிங்கங்கள் தான் நிற்கின்றன. அப்படியிருக்க, புலி எப்படி தேசிய மிருகம் ஆனது, அது எப்போது தேசிய மிருகம் ஆனது, புலியா சிங்கமா எது பலம் மிகுந்தது... அதைப்பற்றி தெரிந்து கொள்ளத்தான் இன்று ஒரு சிங்கம்-புலி ஆட்டம் ஆடப் போகிறோம்!" என்றபடி நான் என் பேச்சைத் தொடர்ந்தேன்.


1899-ம் ஆண்டு, பிப்ரவரி மாதத்தில் பரோடா மன்னரான சாயாஜி ராவ் கெய்க்வாட் அவர்களுக்கு ஒரு சந்தேகம் வருகிறது. சிங்கத்திற்கும் புலிக்கும் இடையே சண்டை வைத்தால் எது ஜெயிக்கும் என்பதுதான் அது. நமக்கெல்லாம் சந்தேகம் வந்தால் என்ன செய்வோம்... கூகுளில் போய்த் தேடுவோம். அவர் ராஜா அல்லவா… அப்படிச் செய்யாமல், அட்லஸ் மலைகளில் வாழ்ந்து வந்த ஒரு வலிமையான சிங்கத்தை வரவழைத்து, இந்தியாவின் வலிமை மிகுந்த வங்கப்புலி ஒன்றைத் தேர்ந்தெடுத்து இரண்டையும் நேரடியாகவே மோதவிட்டுப் பார்க்கிறார்.

அதையும், தான் மட்டுமே பார்க்காமல், மக்கள் எல்லோரையும் அழைத்து, அனைவரும் பாதுகாப்பாகப் பார்க்க ஓர் அரங்கத்தையும் நிர்மானித்து, போட்டியை உற்சாகமாக்க பந்தயம் கட்டவும் அனுமதித்ததோடு, சிங்கம்தான் ஜெயிக்கும் என்று தானே 37,000 ரூபாய் வேறு பந்தயம் கட்டியிருக்கிறார்.


முதல் சுற்றில் சிங்கம் சண்டையிடவில்லை. வாலைத் தரையில் அடித்தபடி சும்மா உட்கார்ந்திருக்க, புலிதான் முதல் அட்டாக்கை ஆரம்பிக்கிறது. உருவத்தில் பெரிய சிங்கம் தன் மீது பாய்ந்த புலியை ஒரு மல்யுத்த வீரனைப்போல தட்டிச் சாய்க்கிறது. ஆனால், புலி அதற்குள் சிங்கத்தின் கழுத்தைக் குறிவைத்து வேலையை ஆரம்பித்திருந்தது. நீண்ட நேரம் சிங்கம் புலி ஆட்டம் நீடித்தாலும், இறுதியில் புலி சிங்கத்தை வதம் செய்து அதன் குடலைச் சரித்திருந்தது.
இந்த சிங்கம்-புலி பந்தயத்தில் கெய்க்வாட் தோற்றபோதும், வங்காளப் புலியை அவர்தான் முதலில் வீரத்தின் சின்னமாக அறிவிக்கிறார். நமது நாட்டில் மட்டுமன்றி, பண்டைய ரோமானியர்களும் இதேபோல சிங்கம் புலி போட்டிகளை நடத்திய குறிப்பேடுகளும், ஓவியங்களும் காணப்படுகின்றன. மற்ற பண்டைய நாகரிகங்களிலும் இதேபோல நிகழ்வுகள் நிகழ்ந்திருக்கலாம் என்கிறார்கள். மேலும், இந்த சிங்கம் புலி ஆட்டத்தில் வெற்றிபெற்ற விலங்கு பற்றிய தெளிவான குறிப்புகள் இல்லாதபோதும், அதிக எடையும், அதிக தசை வலிமையும், அதிக வேகமும் கொண்ட புலிகள்தான் அதிகம் வென்றிருக்கக்கூடும் என்கிறது வரலாறு.

இப்படி சிங்கம் புலி இரண்டுக்குமான போட்டி இந்திய அரங்குகளில் மட்டுமல்லாமல் நமது அரசு சின்னத்திலும் நடந்துள்ளது. ஆம்... 1948-ம் ஆண்டு, பண்டிட் ஜவஹர்லால் நேரு அவர்களால் 'ஆசிய சிங்கம்' இந்தியாவின் தேசிய விலங்காக அறிவிக்கப்பட, அதைத் தொடர்ந்து, நான்கு சிங்கங்கள் நிற்கும் அசோக சாரநாத் தூண் தேசிய சின்னமாகவும் இடம்பெற்று, சிங்கங்கள் நமது நாட்டின் அடையாளச் சின்னமாகவே மாறியுள்ளன.

ஆனால், ஆசிய சிங்கங்கள், குஜராத்தின் கிர் காடுகளில் மட்டுமே காணப்பட, சுந்தரவனக்காடுகள், மேற்குத் தொடர்ச்சி மலைக்காடுகள் என, அப்போதைய 16 மாநிலங்களில் புலிகள் பெரும் எண்ணிக்கையில் காணப்பட்டன. புலி இறந்தாலும் அதன் தோல், எலும்புகள், அதன் இனப்பெருக்க உறுப்புகள் ஏன் அதன் மீசை முடி கூட மருத்துவ குணங்கள் நிறைந்தது என்று நம்பப்பட்டதால், அதற்கு உள்ளூரிலும், உலகச்சந்தையிலும் அதிக வரவேற்பும், தேவையும் இருந்திருக்கிறது.

இதனால் உடனடி வருமானத்துக்காக புலிகள் தொடர்ந்து வேட்டையாடப்பட, 1900-களில் இந்தியாவில் 50,000 என்ற எண்ணிக்கையில் இருந்த புலிகள், 1967-ல் வெறும் 2000மாகக் குறைந்திருக்கின்றன.

ஒருகட்டத்தில் விழித்துக்கொண்ட இந்திய அரசு, புலித்தோல் ஏற்றுமதிக்கு தடைவிதித்ததோடு, புலிகள் அழிவதைத் தடுக்க, 1973-ம் ஆண்டு தேசிய விலங்காக புலியை அறிவித்தது. அத்துடன் அப்போதைய இந்தியப் பிரதமரன இந்திராகாந்தி அவர்கள் ‘ப்ராஜக்ட் டைகர்’ என்ற அமைப்பை உருவாக்கி, அதன்மூலம் நாடெங்கும் ஒன்பது புலிகள் பாதுகாப்பு சரணாலயங்கள் ஏற்படுத்தவும் ஆணையிட்டிருக்கிறார்.

இப்படி இந்த தேசிய விலங்கு போட்டியிலும் சிங்கம்-புலி விளையாடி, இந்த முறையும் வங்கப்புலிதான் சிங்கத்தை வென்றுள்ளது.

தேசிய விலங்கு என்பதையெல்லாம் விடுங்கள். ஒரு புலி என்பது எவ்வளவு முக்கியம் தெரியுமா நமது நாட்டுக்கு?

"மேற்குத் தொடர்ச்சி மலையில் ஒரு புலி இறந்தால், தஞ்சை டெல்டாவில் பத்தாயிரம் ஏக்கர் நிலம் தரிசாகப் போய்விடும்" என்று எழுதுகிறார் புலிகளின் காதலரும், சமூக ஆர்வலருமான எழுத்தாளர் எஸ்.கே.பி. கருணா.

‘’மேற்குத் தொடர்ச்சி மலையில் இருக்கும் புலிக்கும் தஞ்சாவூர் விவசாயத்துக்கும் என்ன சம்பந்தம் என்று தெரிந்து கொள்ள முனைந்தால் அந்த உயிர்ச்சங்கிலி இன்னொரு ஆச்சரியத்தை தருகிறது. மனிதன் வேட்டைச் சமூகமாக இருந்த காலத்தில் பிற உயிரினங்களைப் போலவே அவனது நீர்த்தேவையும் குறைவாகவே இருந்தது. குடிக்க, சமைக்க...அரிதாக குளிக்க! அவன் வேளாண் சமூகமாக மாறிய பிறகுதான், பிற உயிரினங்களுக்கான நீரையும் அபகரிக்கும் அளவு அவனது நீர்த்தேவை அதிகமாக உயர்ந்தது.

தமிழகத்துக்கான மொத்த நீர்த்தேவையில் 70 சதவிகித நீரைத் தருவது தென்மேற்குப் பருவக்காற்று கொண்டு வந்து சேர்க்கும் மழைமேகங்கள்தாம். அந்த மேகங்களைத் தடுத்து நிறுத்தி, குளிர்வித்து மழையாகப் பெற்று, அதை தன்னுள் சேமித்து ஊற்றாக மாறி ஆறாக நமக்கு அனுப்பி வைப்பது மேற்குமலைக் காடுகள்.

பிரபஞ்ச வெடிப்பில் உருவான மலையில் உண்டான அடர்ந்த காடுகளை, காற்றும் ஒளியும் பாய்ந்து உயிர்ப்புடன் வைத்துக் கொள்வது அதன் ஊடே ஊடாடும் மான், முயல், பன்றி போன்ற தாவர பட்சிணிகள். அந்த தாவர பட்சிணிகள் அதிகமாகி காட்டுத் தாவரங்களை அழித்துவிடாமல் காட்டைப் பாதுகாப்பது புலிகள்.

ஒரு புலி உயிர்வாழ ஆயிரம் சதுரகிலோமீட்டர் காடு தேவை. ஒரு காட்டின் ஆரோக்கியம் அதில் எத்தனைப் புலிகள் வசிக்கின்றன எனும் எண்ணிக்கையில் தான் கணக்கிடப்படுகிறது. காடுகள் ஆரோக்கியமாக இருந்தால் தான் மழைபெய்து ஆறுகள் பாய்ந்து நாடுகள் செழித்திருக்கும்.

ஆக, புலிகள் இல்லையெனில் மேற்குமலைக்காடுகள் இருந்திருக்காது. காவிரி, தென்பெண்ணை, வைகை ஆறுகள் இருந்திருக்காது. கரிகாலன் கல்லணை கட்டியிருக்க முடியாது. ராஜராஜன் சாம்ராஜ்யம் அமைத்திருக்க முடியாது. எனவேதான், யானை கட்டிப் போரடித்தாலும் சோழர் கொடியில் புலி வீற்றிருந்தது.

மக்களும் அதை உணர்ந்திருந்ததால்தான் தஞ்சை நெற்களஞ்சியத்தின் தொல்குடி மக்கள் தமது கடவுளாகப் புலிகளை வணங்கினர். கோயில்களில் முதல் சிற்பம் புலி. திருவிழாக்களில் முதல் ஆட்டம் புலியாட்டம் என்றே காட்டுக்கே போகாவிட்டாலும், புலியின் அருமையை உணர்ந்து புலியைப் போற்றியிருக்கின்றனர்" என்று புலியின் பெருமையை சொல்லிக்கொண்டே போகிறார் எஸ்.கே.பி.கருணா.

புலி

இந்த உயிர்ச்சங்கிலியை மாநிலம் முழுவதும், நாடு முழுவதும், ஏன் உலகம் முழுவதும் உடைக்காமல் இருந்தால், அதாவது வனங்களையும், புலிகளையும் அழிக்காமல் இருந்தால், அதன் முழுப்பயனையும் அனுபவிக்கப் போவது மனிதன்தான்‌.

ஆக, புலி கொடிய மிருகம் அல்ல. கொடுக்கும் மிருகம் என்று உணர்ந்திருந்ததால்தான், அதைக் காக்க இந்திய அரசு 1973-ம் ஆண்டு நவம்பர் 17-ம்தேதி புலியை தேசிய மிருகம் என்று அறிவித்திருக்கிறது.

அதே போல ஜூலை 29-ஐ புலிகள் தினமாக அனுசரிக்கும் இந்த உலகம், புலிகளின் எண்ணிக்கையை இரு மடங்காக உயர்த்த அழைக்கிறது. புலியை அதிகரிப்பது என்பது அதன் எண்ணிக்கையை அதிகரிப்பது மட்டுமல்ல... அது வாழும் வனத்தின் பரப்பையும் அதிகரிப்பது தான்.

‘’வனங்கள் அதிகமானால் மழை அதிகரித்து, நதிகள் பெருக்கெடுத்து, விவசாயம் செழித்து மனிதன் அதிக நாள் வாழ்வான் புரிகிறதா?" என்று கேட்டபோது அந்த மாணவ மாணவியர் மெய்மறந்து அங்கே அரங்கில் வரையப்பட்டிருந்த பாயும் புலியை பாசத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார்கள்!

#SaveTiger

#SaveNature



source https://www.vikatan.com/news/environment/why-tigers-are-so-important-for-agriculture

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக