Ad

வியாழன், 29 ஜூலை, 2021

காலநிலை மாற்றத்தைச் சமாளிக்க சிறுதானிய விவசாயம்; ஒடிசா பழங்குடிகளின் வியக்க வைக்கும் சாதனை!

ஒடிசாவின் மல்காங்கிரி மாவட்டத்திலுள்ள போண்டாகட்டி என்ற மலைப்பகுதியில் வாழ்கிறார்கள் போண்டா பழங்குடியின மக்கள். ஒடிசாவில் வாழும் 13 பட்டியல்படுத்தப்பட்ட ஆபத்தான நிலையிலுள்ள பழங்குடிக் குழுக்களில் (particularly vulnerable tribal groups) போண்டா பழங்குடியினமும் ஒன்று. 2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, போண்டா இனக்குழுவைச் சேர்ந்த 12,321 மக்கள் 32 மலைக்கிராமங்களில் வாழ்கின்றனர். மேலும், இந்தியாவின் மிகவும் அதிகமான வறுமை நிறைந்த, வளர்ச்சியடையாத 100 மாவட்டங்களில் மல்காங்கிரி மாவட்டமும் ஒன்று.

இந்தப் பழங்குடிகள், ஆஸ்த்ரோ-ஆசிய இனக்குழுவைச் சேர்ந்தவர்கள் என்றும் ஆப்பிரிக்காவில் 60,000 ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த மிகப்பெரிய இடப்பெயர்வின் முதல் அலையிலேயே ஆப்பிரிக்க கண்டத்தை விட்டு இடம் பெயர்ந்த குழுவினரில் இவர்களுடைய மூதாதைகளும் அடங்குவர் என்றும் மானுடவியல் ஆய்வுகள் கூறுகின்றன. பல நூறு தலைமுறைகளாக, காட்டு நிலத்திலேயே, பயிர்களை விளைவிப்பதோடு, காடுசார் பொருள்களைச் சேகரித்து வாழ்ந்து வருகின்றனர்.

Millet (Representational Image)

அனைவரைப் போலவும் காலப்போக்கில் சிறுதானியம் மற்றும் பல்பயிர் விவசாய முறையிலிருந்து நெல் சார்ந்த ஒற்றைப் பயிரிடுதல் முறைக்கு அவர்களும் மாறத் தொடங்கினார்கள். கூடுதலாக, கடந்த சில ஆண்டுகளில், காலநிலை மாற்றத்தால் அதிகரித்துள்ள கடுமையான மழைப்பொழிவு, அவர்களுடைய பகுதிகளில் பல சேதங்களுக்கு வித்திடத் தொடங்கியது. இதனால், அந்த மக்களின் பிரதான உணவுகளின் உற்பத்தி பாதிக்கப்படத் தொடங்கியது. அதைத் தொடர்ந்து தற்போது மீண்டும் போண்டா பழங்குடியினப் பெண்கள், ராகி, புல்லுருவி, பனிவரகு, முத்து விதை போன்ற அவர்களுடைய பாரம்பர்ய சிறுதானியங்களை உற்பத்தி செய்யத் தொடங்கினார்கள். இவை, அவர்களுக்கு உணவு மற்றும் ஊட்டச்சத்துப் பாதுகாப்பை வழங்கியதோடு, காலநிலை மாற்றத்தையும் தாக்குப்பிடித்து வளரும் திறன் கொண்டவையாக இருப்பதை, நடைமுறையில் பார்த்தபோது அந்த மக்கள் உணர்ந்தனர்.

இதன் முக்கியத்துவத்தை உணர்ந்த போண்டா இனத்தைச் சேர்ந்த இளைஞர்கள், உள்ளூர் தன்னார்வ அமைப்புகளின் உதவியோடு, ஒடிசாவின் சிறுதானிய திட்டத்தின்கீழ் (Odisha Millets Mission) இதைக் கொண்டு வருவதற்கான முயற்சிகளை மேற்கொண்டார்கள். அதைத் தொடர்ந்து, அவர்கள் அனைவரும் இணைந்து, இவற்றை விளைவிக்கும் முறைகள், காலநிலை சவால்களை இந்தப் பயிர்கள் எதிர்கொள்ளும் விதம், இவற்றால் கிடைக்கும் ஊட்டச்சத்து அனைத்தையும் பற்றி விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி, ஒடிசாவில் அந்தந்த நிலத்துக்கான சிறுதானியம் உற்பத்தியை அதிக்கரிக்க களத்தில் இறங்கினார்கள். அதன்விளைவாக, ஒடிசாவில் வழக்கத்தைவிட 215 சதவிகிதம் சிறுதானியம் உற்பத்தி அதிகரித்தது.

சிறுதானியம் (மாதிரி படம்)

2020-ம் ஆண்டு நிதி ஆயோக் அறிக்கையின் 2016-17 ஆண்டில் ஒரு சராசரி விவசாயக் குடும்பம் மேற்கொண்ட சிறுதானியம் உற்பத்தியின் மதிப்பு 3,957 ரூபாய். ஆனால், 2018-19 ஆண்டில் ஒரு சராசரி விவசாயக் குடும்பத்தின் சிறுதானிய உற்பத்தி மதிப்பு, 12,486 ரூபாய். இதே காலகட்டத்தில் 2,949 ஹெக்டேர்களாக இருந்த சிறுதானிய விளைநிலங்கள் 5,182 ஹெக்டேர்களாக உயர்ந்துள்ளன.

``எங்கள் நிலத்தில் போட்டிருந்த நெல் பயிர்கள் அனைத்தையும் வெள்ளம் அழித்துவிட்டது. கடும் மழையில் மண்ணின் மேற்பகுதி அடித்துச் செல்லப்பட்டுவிட்டது. சரி, வேதிம உரங்களைப் போட்டு பயிர் செய்வோம் என்று செய்தபோது, நிலம் பாழாகிவிட்டது. ஹைப்ரிட் விதைகளும் அதீத பருவநிலைகளில் தாக்குப் பிடிக்கவில்லை. இளைஞர்கள் நகரங்களை நோக்கி வேலை தேடிப் போகத் தொடங்கினார்கள். விவசாயம் செய்வதையே நாங்கள் கைவிடும் நிலைக்குத் தள்ளப்பட்டோம். ஆனால், எங்கள் பாட்டன்கள் கற்றுத்தந்த சிறுதானியம் விவசாயத்தில் இப்படி ஆனதே இல்லை. சிறுதானியங்கள்தான் எங்கள் பிரதான உணவு. அதனால், அதையே மீண்டும் விளைவிக்கத் தொடங்கினோம்" என்று கூறுகின்றனர், இந்த முயற்சியை முதல் முன்னெடுத்த போண்டா பழங்குடியினப் பெண்கள்.

பயிர்களில் பூச்சித்தொல்லை ஏற்படும்போது, வேதிம உரங்கள் எதையும் இந்த மக்கள் பயன்படுத்தவில்லை. மாறாக, ``அத்தகைய பூச்சிகளை வேட்டையாடிச் சாப்பிடும் பறவைகள், பூச்சிகள், பாம்புகள் அவர்களுடைய நிலத்துக்குள் உலவுவதைத் தடை செய்யாமல் இருந்தோம். அதனால், பயிர்களை அழிக்கும் பூச்சிகளை இவை சாப்பிட்டு, பிரச்னையின்றிப் பார்த்துக்கொண்டன" என்கிறார் மல்காங்கிரி மாவட்டத்திலுள்ள தன்டிபாடா கிராமத்தைச் சேர்ந்த ராய்பாரி.

போண்டா பழங்குடிகள்

இவர் கடந்த ஓராண்டில் 100 கிலோ கேழ்வரகு, 60 கிலோ குதிரைவாலி, 45 கிலோ முத்து விதை, 70 கிலோ சர்க்கரைவள்ளிக் கிழங்கு, 40 கிலோ சேனைக்கிழங்கு ஆகியவற்றை உற்பத்தி செய்துள்ளார். அதை வாரச் சந்தையில் விற்று கிடைத்த 8,000 ரூபாய் வருமானத்தில், இரண்டு ஜோடி ஆடுகளை வாங்கியுள்ளார்.

ஒடிசாவின் சராசரி மழைப்பொழிவு 1,451.2 மி.மீ. அதுவே மல்காங்கிரியில் 1,667.6 மி.மீ. திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளுக்கு நவீன விவசாயப் பயிர்கள் தாக்குப் பிடிக்கவில்லை. இப்போது சிறுதானிய பயிர் விவசாயத்தை மீண்டும் தொடங்கிய பிறகு, மண்ணின் தரமும் அதிகரித்துள்ளதால், மண் அரிப்பு குறைந்துவிட்டதாகச் சொல்லப்படுகிறது.

சிறுதானியங்கள் ஏன் மற்ற பயிர்களைவிடச் சிறப்பு?

சிறுதானியங்கள், போண்டா மக்களின் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பை மட்டும் உறுதி செய்வதில்லை. நெல் பயிர்களைவிட 60 சதவிகிதம் குறைந்த தண்ணீரே இவற்றுக்குப் போதுமானது. நெல், கோதுமை விவசாயத்தில் 120 முதல் 150 நாள்கள் ஆகும். இதற்கு 70 முதல் 100 நாள்களே போதுமானது. இவை, வறட்சி, அதீத வெப்பம், பயிர்களைத் தாக்கும் நோய்கள், மண்ணி உவர் தன்மை என்று அனைத்தையும் தாக்குப்பிடித்து நிற்கும் திறனுடையவை.

சிறுதானியம் (மாதிரி படம்)

Also Read: `தலைக்குமேல் தொங்கும் காலநிலை மாற்றம் எனும் கத்தி!' - இனியாவது சூரிய ஆற்றலை ஊக்குவிக்குமா அரசு?

போண்டா பழங்குடிகளின் இந்த முன்னெடுப்பை ஊக்குவித்ததோடு, ``இந்தப் பழங்குடிகளின் நூற்றாண்டு கால பிரதான உணவாக சிறுதானியங்கள் இருக்கின்றன. அவர்கள் இதைச் சேர்த்துக்கொள்ளவில்லை என்றால், ஊட்டச்சத்து குறைபாட்டுக்குக்கூட ஆளாகலாம்" என்கிறார், மல்காங்கிரி மாவட்டத்தின் பொது சுகாதாரத்துறையின் மாவட்ட திட்ட இயக்குநரான ராஜேஷ் பட்னாயக்.

இதுபோக, ஒடிசா சிறுதானிய திட்டத்தில் விதைகள் அடுத்த பருவத்துக்கும் தேவைப்படும் வகையில் பாதுகாத்து வைப்பதிலும் கவனம் செலுத்துகிறது. அதன்கீழ், இந்த சுமார் 14 மாவட்டங்களில் தற்போது சமூக மேலாண்மை விதை மையங்கள் (Community-managed seed centres) அமைத்து சிறுதானிய விதைகளைப் பராமரித்து வருகின்றனர்.

விதைகளைக் கண்டறிதல், சேகரித்தல், தேர்வு செய்தல், பராமரித்தல் என்று அனைத்து முதன்மையான பணிகளையும் அந்தந்தச் சமூகப் பெண்களே மேற்கொள்கிறார்கள். 2018 முதல் 2020-ம் ஆண்டு வரை மட்டுமே சுமார் 392.66 குவிண்டால் விதைகள் சேகரித்து, பாதுகாக்கப்பட்டுள்ளன.

பழங்குடியின மக்களின் வாழ்வியலில் பல்வேறு இயற்கை-சார் பழக்க-வழக்கங்கள் இருப்பதாகத் தொடர்ந்து பல்வேறு அறிவியலாளர்கள் குறிப்பிட்டு வருகின்றனர்.

சிறுதானியம் (மாதிரி படம்)

Also Read: ``காடுகளை பழங்குடிகளிடம் கொடுங்கள்; பல்லுயிரியம் பாதுகாக்கப்படும்!"- ஆய்வறிக்கை சொல்லும் உண்மை

தற்போது ஒடிசாவின் போண்டா பழங்குடியின மக்களுடைய இந்த வெற்றி, அந்தக் கூற்றின் உண்மைத் தன்மையை உறுதி செய்துள்ளது. பூர்வகுடி விவசாயி முறைகளை அனைவரிடமும் கொண்டு சேர்க்க வேண்டியது அவசியம் என்று இதை உதாரணமாக வைத்து, தற்போது பல்வேறு அறிவியலாளர்களும் சமூக ஆர்வலர்களும் சிறுதானிய விவசாயம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.

தமிழ்நாடு அரசாங்கமும், விவசாயிகளிடையே சிறுதானிய விவசாயத்தை ஊக்குவிக்க, இயற்கையான விவசாய முறைகளைப் பின்பற்ற, தமிழ்நாட்டு விவசாயிகளுக்கு வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுக்க வேண்டும். நாமும் சிறுதானியங்களையே பிரதானமாக உணவாகக் கொண்டு வளர்ந்த முன்னோர்களைக் கொண்டவர்கள்தாம் என்பதை மறந்துவிடக் கூடாது.



source https://www.vikatan.com/news/agriculture/odisha-tribes-returned-to-millets-farming-to-mitigate-climate-change-effects

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக